Tuesday, 7 February 2012

திருநங்கைகள்


பச்சை மரமானது இலைகளும், கிளைகளும் விட்டு முளைப்பதுடன், தன் அடையாளத்தை ஏற்படுத்தி, சந்ததியினரை உருவாக்கும். பட்ட மரமானது முளைத்ததுடன் சரி... அதன் பின், அதன் அடையாளத்தை ஏற்படுத்தாது; சந்ததியை உருவாக்காது. தனி மரமாகவே இருந்து மடியும்.

இந்த பட்ட மரத்துடன், அரவாணி(திருநங்கை)களை ஓப்பிட்டு பேசுவதும், எழுதுவதும், கவிதை வடிப்பதும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
அதற்கு ஒரு முடிவு வந்துள்ளது...

அவர்களில் ஐந்தாயிரம் பேர், தங்களது கண்களை தானமாக வழங்கியுள்ளனர். இதன் மூலமாக, இறந்த பிறகும், இரு வேறு உடல்களில் இருந்து, உலகை பார்ப்பர். பிறகு, அவர்களது கொடையால் இன்னும் இருவர், அதன் பின் இன்னும் இருவர் என்று வாழையடி வாழையாக தமது அடையாளங்களுடன் இந்த நன்கொடை வழங்கிய அரவாணிகள், வாழ இருக்கின்றனர். இவர்களில் சிலர், கூவாகத்தில் நடைபெற உள்ள விழாவில் மேடையேறி கண்தானம், உடல்தானம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து உள்ளனர். இப்படி சமூகத்தின் கவலையாக கருதப்பட்ட ஒரு சமுதாயம், கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.

அந்த சமுதாயத்திற்கு தற்போதுள்ள சிக்கல்கள் சில...
பத்தாம் வகுப்பு வரை, 'பாபுவாக' பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருந்தவர், அவருக்குள் ஏற்பட்ட அரவாணிக்குரிய, 'மாற்றம்' காரணமாக, திடீர் என்று, 'ப்ரியா'வாகி விடுகிறார்... ஆனால், இது, அவர் படித்ததாக பறைசாற்றும் சான்றிதழுக்கு தெரிவதில்லை.

அவரை, ப்ரியாவாக ஏற்க முடியாது... பாபுவாகவே வேண்டுமானால் படிப்பை தொடரச் சொல் என்று, முடியாததைச் செய்யச் சொல்லி முரண்டு பிடிக்கிறது சமுதாயம் என்கிற அதிகாரவர்க்கம்.

ஒழுக்கக்கேட்டினால், கொடிய எய்ட்சை வாங்கி வந்த பிள்ளைகளை கூட, வீட்டினுள் வைத்து சோறு போட்டு ஆதரிக்கும் இந்த சமூகம், தங்களது பிள்ளை அரவாணி என்று அறிந்த அடுத்த கணமே, 'எங்காவது போ... எப்படியாவது போ... இனி, எங்கள் முகத்திலேயே விழிக்காதே!' என்று சொல்லி, கண் காணாத இடத்திற்கு துரத்துகிறது.

அப்போது அவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், தேறுதல் எல்லாம் படிப்புதான்.
ஆனால், அந்த படிப்பை தொடர்வதற்குதான் எத்தனை தொல்லைகள்... இதை எதிர்கொள்ள முடியாமல்தான், மும்பை பக்கம் ஒடிப் போகின்றனர்; ரயில்களில் உங்களை தேடி வருகின்றனர்! எதற்காக எல்லாம்? பாழாய்ப் போன வயிற்றுப் பசியை போக்க, மிச்சமிருக்கும் வாழ்க்கையை நகர்த்த...
'
நாங்கள் என்ன செய்யமுடியும்!' என்று அரசு இயந்திரம் நன்றாகவே கைவிரிக்கிறது... குறைந்த பட்சமாக, இவர்களுக்கு எந்த கழிப்பறையை ஓதுக்குவது என்று கூட முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. உட்கார்ந்து யோசியுங்களேன்... உடலும், உதிரமும் கொண்ட உயிர்கள் அல்லவா அவர்கள்.

அனைத்து சமுதாயத்தினரும் குடியிருக்கும் சமத்துவபுரத்தில், இந்த சமுதாயத்திற்கு ஒதுக்கீடு கிடையாதாமே... அது ஏன்?

ஏன் என்று சுயநலமாய் போன சராசரி மனிதர்கள் மத்தியில் குழுவாக, கூட்டாக, ஒரு குடும்பமாக, நட்பாக வாழும் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கடனுதவி வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு கடனுதவி வழங்கப்படாதபோது, கடனுதவி பெறாதவர்களின் மனம் படாதபாடுபடுமே என்ற காரணத்தால், எங்களில் தனிப்பட்ட நபருக்கு கடன் வேண்டாம், எங்கள் குழுவிற்கு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அது பரீசீலிக்கபடுவதில்லையாமே... அது ஏன்?

சாதாரணமாகவே, நடனக் கலைஞர்கள், சோகத்தை ஒரு பாவமாகத்தான் முகத்தில் வரவழைக்க வேண்டும்; ஆனால், அரவாணி நடனக் கலைஞர்களுக்கு அது உயிரோட்டமாகவே வரும்... அந்த அளவிற்கு நடனக் கலையில் தனித்துவம் பெற்றுவரும் இந்த கலைஞர்களுக்கு, மேடை வாய்ப்பு மறுக்கப்படுகிறதாமே... அது ஏன்?

'இவர் ஒரு அரவாணிதான்!' என அரசின் அடையாள அட்டை பெற்றவர்களுக்கே, அரசின் கடனுதவி போன்ற திட்டங்கள் எல்லாம் வழங்குகிறீர்கள்... ரொம்ப சரி... ஆனால், அந்த அடையாள அட்டை வழங்குவதை ராணுவ ரகசியமாக செய்கிறீர்களே... அது ஏன்?

இப்படி அரவாணிகளுக்கான பல ஏன்கள் இருக்கின்றன. வெறுமனே அவர்களை, திருநங்கைகள் என்று பெயர் மாற்றம் செய்வதால் எந்த பலனும் இல்லை. அதற்கு முன் இதுபோன்ற, 'ஏன்?'களுக்கு கூவாகம் விழாவில் தான் விடை காணவேண்டுமா யோசியிநகளேன்.

அரவாணிகள் பற்றி இன்னமும் கூறுகிறேன்





No comments:

Post a Comment