Sunday, 19 February 2012

சிந்தித்தல் மனமே



பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புது மனித யுகம் தோன்றியது. அப்போது மொழி (பேச்சு) என்றால் என்னவென்றே மனிதனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகையும், சிரிப்பும், பசியும்தான். பின்னர் வாயசைவின் மூலம் தமது செயல்களுக்கு மொழிவடிவம் கொண்டு வந்தனர், பின்னர் அவற்றைத் தங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்தனர். இதைத்தான் நாம் சிந்தித்தல் என்கிறோம். இந்தச் சிந்தனைக்கும், மனதிற்கும் தொடர்பு உண்டா என்றால், புதிய சிந்தனைகளுக்கு நம்முடைய மனமே பிறப்பிடமாகத் திகழ்கின்றது. நம் மனம் ஒருநிலைப்பட்டு இருக்கும்போது புதுப் புதுச் சிந்தனைகள் துளிர் விடுகின்றன. நம்முடைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கெல்லாம் இவ்வகையான ஆற்றல் கொண்ட மனமே காரணமாயிருக்கிறது.

முதலில் மனம் என்றால் என்ன? இதை இரண்டே வரிகளில் விளக்க முயல்வது பெரிய மலையைக் கயிறால் இழுக்க முயல்வதற்குச் சமம்.  அதனை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்வதற்கே இந்த சிறு பயணம்.


நம் எல்லோருக்கும் ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும்: ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்திருப்போம், கிடைத்திருக்காது. அதை விட்டுவிட்டால் கிடைக்காமலே போயிருக்கும். மாறாக அதைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது திடீரென எப்போதாவது விடை தோன்றும். இவையெல்லாம் நம் உள்மனதிலிருந்து தோன்றியவை, வெளியில் இருந்து வந்தவை அல்ல என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். விவேகானந்தரும் இந்த மன ஆற்றல்களை ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார். ‘எந்த ஒரு செயலும் வெளியில் இருந்த வருவது அன்று; அது உங்களுக்குள் இருந்து வெளிப்படுகிறது’ என்கிறார். பூரணம் அடைந்த ஞானிகள் கூட எதையும் படித்து, கேட்டு அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குள் உள்ள ஞானத்தை உள்ளூர ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்கள்.

நாம் நேசிக்கும் பொருட்களில் மனதை ஒருமுகப் படுத்துகிறோம். இனிய இசையைக் கேட்கும்போது மனம் அதில் லயிக்கிறது. அதிலிருந்து மனதைப் பிரிக்கவே முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துபவர்கள் சாதாரண சங்கீதத்தை ரசிப்பதில்லை. சாதாரண சங்கீதத்தில் மனதைக் குவிப்பவர்கள் கர்நாடக சங்கீதத்தை ரசிப்பதில்லை. இத்தகைய உயிரோட்டமான சங்கீதத்தையே மனம் விரும்புகிறது, இதில் மனம் அலைபாய்வதற்கு வாய்ப்பே இல்லை.

இத்தகைய மன ஒருமைப்பாட்டில் உள்ள பிரச்சனை இதுதான் நாம் மனதை அடக்குவதில்லை, மனம் நம்மை அடக்கி ஆள்கிறது. நமக்கு வெளியிலுள்ள ஏதோ ஒரு பொருள் நமது மனத்தை தன்னிடம் இழுத்து, அது விரும்பும் நேரம்வரை தன்னிடமே வைத்துக்கொள்கிறது. இனிய இசையைக் கேட்கிறோம், அழகிய படத்தைப் பார்க்கிறோம், நமது மனம் அங்கேயே நின்று விடுகிறது. நம்மால் அதை மீட்கமுடிவதில்லை.

அதேபோல், நம் மனம் ஒரு குப்பைத்தொட்டியைப் போல, யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். ஒரு ஊரில் வேதத்திலும், சைவ சித்தாந்தத்திலும் கைதேர்ந்த ஞானி ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் சீடர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த பூனை ஒன்று அவர்கள் முன்பு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஞானியின் கவனத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் சீடர்களின் கவனம் சிதறியது. ஆகவே பூனையை பக்கத்தில் இருந்த தூணில் கட்டும்படி ஞானி சொல்ல, அதேபோல் பூனை கட்டப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு தந்ததால் தினமும் பூனை தூணில் கட்டப்பட்டது.

சில வருடங்களில் ஞானி இறந்து விட்டார். சீடர் ஒருவர் ஞானியின் பொறுப்பை ஏற்றார், அவர் பாடம் எடுக்கும்போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில நாட்களில் பூனை இறந்துவிட, அடுத்தநாள் பாடம் எடுக்க வந்த புது ஞானி, பாடம் எடுக்கும்போது ”தூணிலே பூனை ஒன்று கட்டவேண்டும் என்று தெரியாதா? உடனே போய் புதிய பூனையைக் கொண்டுவந்து கட்டுங்கள்” என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்த ஞானியைப் போன்றுதான், இன்று பலபேர் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் அதை ஏற்றுக்கொண்டுவிடுகிறது. அவற்றை விடாமல் மல்லுக்கட்டுகின்றனர். ஆகவேதான் இன்று பல குடும்பங்களில் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்கின்றன. இவ்வாறில்லாமல் நம் மனதை ஆக்கபூர்வமான செயல்களுக்காக என்று மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நம் வீட்டருகில் ஒரு பெரிய செடி வளர்ந்துள்ளது அதை வெட்டியெறிய வேண்டுமென்றால் அதன் கொப்புகளையும், தண்டுகளையுமா வெட்டிக்கொண்டிருப்பீர்கள்?, அதன் மூலமான வேரை அல்லவா வெட்டியெறிவீர்கள். அதேபோல் நமது செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் மூலம் என்ன என்பதைக் கண்டறியுங்கள், அதற்கு நம் ஆழ்மன உதவியை நாடுங்கள்.

ஹெர்மிஸ்(Hermes) என்ற ஒரு ஞானியின் கல்லறையை மிகுந்த எதிர்பார்ப்புடன் திறந்து பார்த்தார்கள். அவர் பல இரகசியச் செய்திகளை தன்னுடன் புதைத்து வைத்து இருப்பதாக கேள்விப்பட்டு அவரது சமாதி திறக்கப்பட்டது.

Hermes
அங்கே ‘As within so without, As above so below.’ என்ற வாசகங்கள் மட்டுமே ஒரு கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தன. இதை விளக்கவேண்டுமென்றால், ‘உன்னுடைய உள்மனதில் என்ன பதிக்கப்பட்டிருக்கிறதோ அது ஆகாயத்திரையில் இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் தத்துவம் ‘ என்று சுருக்கமாக ஹெர்மிஸ் சொல்லிவிட்டார். நம்முடைய ஞானிகளும், ‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்கின்றனர். அப்படியென்றால் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பதுதானே அர்த்தம், ஆனால் நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லையே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது யூதக் கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு ஜெர்மானியர்கள் பல சோதனைகளைச் செய்திருக்கிறார்கள், அதில், “உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகிறோம், உங்களுடைய உடம்பிலுள்ள இரத்தத்தை வெளியேற்றினால் எப்படி துடிதுடித்துச் சாகப்போகிறீகள் என்பதை பார்க்கப்போகிறோம்” என்றனர் ஜெர்மானிய படை வீரர்கள் அந்தக் கைதிகளிடம். அதன்படி இரண்டு கைதிகளை படுக்கவைத்து கால்களைவெட்டி இரத்தத்தை பாட்டிலில் ‘ட்ப்’, ‘டப்’ என விழ வைத்தனர். பின் இரண்டுபேரின் கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். அதன்பிறகு, ஒருவனின் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதை நிறுத்திவிட்டனர், ஆனால் பாட்டிலில் இரத்தம் ‘டப்’, ‘டப்’ என்று விழுமாறு செய்துவிட்டனர். இந்த ‘டப்’, ‘டப்’ சத்தத்திலேயே பீதி அடைந்த கைதி, “ஐயோ இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கிறதே, இன்னும் சிறிது நேரத்தில் இரத்தம் வற்றிச் சாகப் போகிறோம்” என்று பயத்தில் நடுங்க ஆரம்பித்தான். முடிவில் இரத்தம் வெளியேறிய கைதியும் இறந்து போனான், தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுகிறதே என்ற பிரமையில் இருந்தவனும் இறந்து போனான்.

இரண்டாமவனின் இறப்புக்கு அவனின் ஆழ்மன எண்ண ஒட்டங்களே காரணமாயிற்று. இப்போது புரிகிறதா எப்படி எண்ணினால் அது செயலாக மாறுகிறது என்று!. நம்முடைய எண்ணங்கள் இரண்டு வகையானவை, ஒன்று மேலோட்டமான எண்ணம் இன்னொன்று ஆழ்மன எண்ணம்.

இதில் மேலோட்டமான எண்ணமே நம்மில் எப்பொழுதும் ஓங்கியிருக்கும், ஆழ்மன எண்ணம் என்பது நாம் உணர்வுபூர்வமாக இருக்கும்போது மட்டுமே செயல்படும்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு மனஒருமைப்பாட்டு ஆற்றலே. இந்த மனஒருமைப்பாடு என்பதை நாம் ஏதோ சிறிதளவாவது அறிந்துதான் உள்ளோம். மன ஒருமைப்பாட்டின் விளைவுகளை நாம் அன்றாடம் சந்திக்கதான் செய்கிறோம். கலை, சங்கீதம் என்று எதுவாகவிருந்தாலும் வெற்றி என்பது மனஒருமைப்பாட்டிலேயே கிடைக்கிறது.

மிருகங்களுக்கு மன ஒருமைப்பாட்டு ஆற்றல் மிகவும் குறைவு. மிருகங்களுக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரியும், அவை சொன்னதை உடனே மறந்துவிடும். மிருகங்களால் ஒரு பொருளின்மீது நீண்ட நேரம் மனத்தை வைத்திருக்க முடியாது. ஆகவே மனிதன் அதிக ஒருமைப்பாடு உள்ளவன் என்பதிலே மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு உண்டு. ஏன்? சாதாரண மனிதனையும், மிக மேலான மனிதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்-ஒருமைப்பாட்டு அளவிலே வேறுபாடு, இது ஒன்றுதான் வித்தியாசம்.

சாலைகள் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு உங்களைக் கடந்து செல்பவர்களை கவனியுங்கள். எத்தனை முகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன? நூறு பேர் கடந்து போனால், அதில் நான்கோ ஐந்தோ பேர் முகங்களில் தான் சந்தோஷம் இருக்கிறது. மற்றவர்கள் ஏதோ வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்கள் போல் திரிகின்றார்கள். ஏன் இப்படி?

ஒரு புத்தமடாலய துறவிகள் சிலர் திபெத் மலை வழியாக பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு பெண் ஆற்றை கடக்க முடியாமல் நின்றிருந்தாள். அவள் ஒரு புத்தகுருவிடம் தன்னை இந்த ஆற்றை கடந்து விடும்படி கேட்டுக்கொண்டாள். ஆனால் அந்த புத்தகுருவோ காதில் எதுவும் விழாததுபோல் சென்றுவிட்டார்.

அவரைத்தொடர்ந்து அவருடைய சீடர் ஒருவர் வந்து கொண்டிருந்தார், துறவிச்சீடரிடமும் அவள் வேண்டினாள் தன்னை மறுகரையில் விடச்சொல்லி. துறவிச்சீடரோ அந்த பெண்ணை தூக்கி தம் தோளில் போட்டு மறுகரையில் விட்டுச் சென்று விட்டார். அனைவரும் புத்தமடாலயத்தை அடைந்தனர். இப்போது துறவிக்குரு சீடரிடம் கேட்டார், “நம்முடைய விதிமுறை தெரியாதா உனக்கு, உண்மையான புத்ததுறவிகள் எந்த பெண்ணையும் தொடவோ, கண்ணால் பார்க்கவோ செய்ய மாட்டார்கள்” என்றார். அதற்கு, “நானோ அந்தப் பெண்ணை அப்போதே ஆற்றங்கரையில் விட்டுவிட்டேன்; ஆனால் நீங்களோ இன்னும் மனதில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றார் துறவிச்சீடர்.

இந்த புத்த மதகுருவைப் போல்தான் நாமும் இன்று மனதில்தேவையில்லாதவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறோம். பின்னே எப்படி முகத்தில் சந்தோஷம் மிளிரமுடியும். உங்களுடைய ஐந்து வயதில் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அவைகளை தொட்டவுடன் உங்கள் மன சந்தோஷம் பொங்கிப் பொங்கி வழிந்தது அல்லவா. அந்த மகிழ்ச்சி இப்போது எங்கே? அனைத்தையும் மூட்டை கட்டி ஓரங்கட்டி விட்டோம். இனிமேலாவது அந்த மூட்டைகளைக் கட்டவிழ்ப்போமா!

No comments:

Post a Comment