Wednesday, 15 February 2012

டார்வின் - முருகன் வைத்த குட்டு


டார்வின் - முருகன் வைத்த குட்டு 






அண்மையில் அமெரிக்காவில் உள்ள ப்யூ (Pew) மையம் எனும் சிந்தனையாளர் அமைப்பு (think tank) ஒரு சமுதாய ஆராய்ச்சி செய்தது. டார்வினின் பரிணாம அறிவியலை அங்குள்ள ஒவ்வொரு மதத்தினரும் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதனை ஆராய்ந்தது. அது சில சுவாரசியமான கண்டுபிடிப்புகளை தந்தது. அதாவது மிகப்பெரிய அளவில் இந்துக்களும் பௌத்த சமயத்தினரும் உயிர்களின் தோற்றம் குறித்த டார்வினிய அறிவியலை ஏற்றுக்கொள்கின்றனர். இது முறையே எண்பது விழுக்காடும் எண்பத்தியொன்று விழுக்காடும் ஆகும். 

ஆபிரகாமிய மதத்தினருக்கு இந்த அறிவியல் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. 2008ல் செய்யப்பட்ட ஆராய்ச்சி சொல்லும் விஷயம் இது. டார்வின் பிறந்த தினத்தின் இரண்டாம் நூற்றாண்டினை ஒட்டி நடத்தப்படும் இந்த ஆராய்ச்சி மற்றொரு விஷயத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த இருநூறு ஆண்டுகளாக ஆபிரகாமிய மத இறையியலுக்கும் பரிணாம அறிவியலுக்குமான போர் முடிந்துவிடவில்லை என்பதுதான் அது.

1859ல் டார்வினின் புகழ்பெற்ற உயிர்களின் தோற்றம் எனும் நூல் வெளிவந்தது. வெளிவந்ததும் மேற்கத்திய நாடுகளில் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையில் நடந்துவந்த போர் மற்றொரு உச்சத்தை எட்டியது. 1860ல் டார்வினின் தோழரான தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லியும் டார்வினிய எதிரியான பிஷப் வில்பர்போர்ஸும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விவாத மேடையில் உயிர்களின் பரிணாமம் குறித்து விவாதித்தனர். “உமது அன்னை வழியிலா அல்லது தந்தை வழியிலா - எந்த வழித்தோன்றலில் நீர் குரங்கிலிருந்து உருவானீர் என சொல்லமுடியுமா?” என ஹக்ஸ்லியைக் கேட்டார் பிஷப் வில்பர்ஃபோர்ஸ்.

மதிப்பிற்குரிய பிஷப்பைப் போல உண்மையை மறைக்க நாவன்மையை சாதுரியமாகப் பயன்படுத்தும் ஒரு மனிதனுக்குப் பிறப்பதை விட அது மேலான வழித்தோன்றல்தான் எனப் பதிலளித்தார் ஹக்ஸ்லி. 

தாம் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டதாக நம்பிக் கொண்டிருந்த விக்டோரிய உயர்குலப் பெண்களுக்கு இது சகிக்க முடியாததாக இருந்தது. சில சீமாட்டிகள் அரங்கிலேயே மயக்கமடைந்தனர். (அந்தக் காலகட்டத்தில் மேல்குல சீமாட்டிகள் ‘அருவருப்பான’ விஷயங்களைக் கேட்டால் திடீர் மயக்கமடைவது ஒருவித நாகரீகச் செயலாக கருதப்பட்டது.) மேற்கில் இன்னும் போராட்டம் தொடர்கிறது. ‘புகழ்’ பெற்ற Scope’s Trial பரிணாம அறிவியல் பாடமாக சொல்லிக் கொடுப்பதைக் குற்றமாக அறிவிக்கும் அடிப்படைவாத அமெரிக்காவை உலகுக்குக் காட்டியது. இன்று Intelligent Design எனும் போலி-அறிவியலாகப் படைப்பு அடிப்படைவாதம் அறிவியலை அச்சுறுத்துகிறது.




1896ல் ஓர் இளம் இந்து சன்னியாசி இங்கிலாந்தில் நிகழ்த்திய உரையில் கூறினார்: “ஆம், பிரபஞ்சமனைத்துமே பரிணாமம்தானே தவிர படைக்கப்பட்டதன்று.” அவர் சுவாமி விவேகானந்தர்.

மற்றொரு மிகச்சிறந்த இந்து ஞானியான ஸ்ரீ அரவிந்தரும் பரிணாமத்தை தமது யோக சித்தாந்தத்துடன் இணைத்தார். பரிணாமம் அழகியல் கொண்ட கவித்துவம் பெற்றது அவரது வார்த்தைகளில்:

பொருளற்ற வெறுமைதனில்
சிருஷ்டி எழுந்ததெனில்,
உடலற்ற பெரும் விசையொன்றில்
பொருண்மை பிறந்ததெனில்,
பிரக்ஞையில்லா மரமாக
உயிர்தான் எழும்புமெனில்,
இலைகளின் மரகதப் பச்சையென
பசுமை ஆனந்தம்
சிதறிப் படருமெனில்
அந்தச் சிரிப்பே மலர்களாக
மடல்கள் விரித்தே விகசிக்குமெனில்
உயிரணுக்களில், நரம்புகளில்,
திசுக்களின் உள்ளூடே புலனுணர்வு விழிக்குமெனில்
மூளையின் பொருண்மையைப் பற்றி
எண்ணங்கள் எழும்புமெனில்
உடலினூடே இரகசிய பலகணி திறக்க
தன்னுணர்வு
வெளி எட்டித் தலைகாட்டுமெனில்
பெயரேதுமிலா பேரொளிதான் மானுடத்தின்
மீதே துள்ளி ஏறாதோ




ஸ்ரீ அரவிந்தர் மானுட சமுதாயத்தின் அகப்பரிமாண வளர்ச்சியை குறித்து விரிவானதோர் சித்திரத்தை முன்வைத்தார். பரிணாம அறிவியல் புறவயமானது என்றாலும் அதற்கு அகவயத்தன்மை வேறெந்தப் பொருளிய அறிவியலைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. எனவேதான் மேற்கத்திய தத்துவ சிந்தனையையும் இறையியலையும் விட பாரத தத்துவ மரபினால் அதனுடன் நெருங்கி உறவாட முடிந்தது. தமிழ் உலகில் இந்தச் சிந்தனைகளை பெரிதும் எடுத்துப் பேசியவர் மு.தளையசிங்கம். நமது “மரபார்ந்த தத்துவ உபகரணங்களை” பரிணாம அறிவியல் தரும் தத்துவ தரிசன சாத்தியங்களை ஆராய்ந்திட பயன்படுத்தியவர் மு. தளையசிங்கம் என்பதனை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார். இதற்குச் சிறந்த உதாரணமாக தளையசிங்கத்தின் மெய்யுளில் இருந்து ஒரு அழகிய பகுதியை தருகிறார் ஜெமோ:

பரிணாமத்தின் அன்னமய கோசமும் பிராணமய கோசமும் வெளிப்படுத்தப்பட்ட காலங்கள் விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனால் உலகப் பரிமாணத்தின் அன்னமய கோசத்தை geosphere என்றும் (சடநிலையும் அதன் வலயமும்) பிராணமய கோசத்தை (உயிர்நிலையும் அதன் வலயமும்) biosphere என்றும் சொல்லலாம். இன்று அவற்றுக்குரிய குணங்களாக முக்குணங்களில் தாமத குணங்களையும் (அன்னமயகோசம்) ரஜத குணத்தையும் (பிராணமய கோசம்) குறிப்பிடலாம். மனிதனிலும் இயற்கைச் செயற்பாட்டிலும் இவ்வலயங்கள் மட்டுமல்ல அவற்றுக்குரிய குணங்களும் இருக்கின்றன.



தளையசிங்கத்தின் இந்த வார்த்தைகள் பெரும் மனக்கிளர்ச்சியை இன்று ஏற்படுத்தலாம். ஆனால் மு. தளையசிங்கம் வாழ்ந்த காலகட்டத்தில் அறிவுஜீவித் தோழர்களால் எப்படி பார்க்கப்பட்டிருப்பார்… ஒரு சராசரி அறிவுஜீவிக்கு “பிழையான ஒரு தாவலை நிகழ்த்துவதாகவே படும்” என ஜெயமோகன் சரியாகவே கணிக்கிறார். காரணம்: “புறவயமாக நகர்ந்த தருக்கம் மொழியின் சகஜமான நகர்வைப் பயன்படுத்திக் கொண்டு அகவய எல்லைக்குள் தாவி விடுகிறது இங்கு.” ஆனால் இந்த அகவயத்தாவலில் ஒரு பேருண்மையை உள்ளுணர்வால் எட்டிவிடுகிறார் தளையசிங்கம். 

அவருக்குப் பல பத்தாண்டுகளுக்கு பிறகே தம் வாழ்க்கையையே உயிரி-இயற்பியலுக்கும் நுண்ணுயிரியலுக்கும் அர்ப்பணித்த ஜான் லல்லாக்கும், லின் மர்குலிஸும் இணைந்து உயிர்களின் பரிணாமத்தை உலகப்பேருயிரியின் பரிணாமமாகக் காணும் ஒரு கருதுகோளை முன்வைப்பார்கள். கடுமையான அறிவியல் விவாதங்களுக்குப் பின்னர் அது ஏற்றுக்கொள்ளப்படும். அது தளையசிங்கம் சாதியத்தை எதிர்த்துப் போராடி அடிவாங்கி அதன் விளைவாக நோயுற்று உயிர்விட்டுப் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தேறும். ஆனால் இன்று இனவாத மோதல்களால் நசுங்கித் துடிக்கும் நிலப்பரப்பிலிருந்து ஒரு தமிழ் மனம் எங்கெங்கோ பாய்ந்திருக்கிறது. அதற்கு இந்து ஞானமரபு கொடுத்த தத்துவ உபகரணங்கள் பயன்பட்டிருக்கின்றன.



இதுவே சனாதன இந்து மரபின் சிறப்பு. இங்கு பிரபஞ்சத்தின் தோற்றம் ஒரு திறந்த கேள்விக்குறியாகவே விளங்கும். சிருஷ்டிக் கடவுள் என்பது ஒரு மனத்தோற்றமே. பிரபஞ்ச ஒழுங்கினை அறிந்து கொள்ளத் தன் தோற்றுவாயில் நின்ற மானுடம் உருவாக்கிக் கொண்ட ஒரு அகக்கருவி மட்டுமே. அக்கருவி விரைவில் கைவிடப்பட வேண்டியது, தன்னைத்தானே நீர்த்துப்போகும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டியது. ஆனால் அதுவே மமதை கொண்ட நிறுவன மதத்தின் மையமாக மாறினால்? அகந்தையேறிய சிருஷ்டிக்கடவுளை தமிழ்க்கடவுள் முருகன் தலையில் குட்டி அடக்கினார் என்று சொல்லும் புராணம். ஞானக் கடவுள் முருகன். பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியம் பிரணவம் என்று அந்த இரகசியத்தைத் தகப்பன் சாமியாகச் சொன்னவர். பல வாசிப்புக்களை நாம் விரித்துக்கொள்ள சாத்தியங்களை தரும் தொன்மம் இது.

பிரணவம் பிரபஞ்சத் தன்னுணர்வின் அனைத்து தளங்களின் ஒருங்கிணைந்த ஒலிவடிவம் என்று மாண்டூக்ய உபநிடதம் சொல்லும். தன்னுணர்விலிருந்து விரிந்த பிரபஞ்ச சிருஷ்டியில் சிருஷ்டி கர்த்தருக்கு ஏது இடம்? மானுடத்தின் அகப்பயணமதில் இடம் விட்டு விலகிக் கரையவேண்டிய மாயை மட்டுமே கர்த்தர். ஒரு ஆதி மகத்தின் தன்னுணர்வு சலனத்தில் விரியும் பிரபஞ்சம் - பிரணவத்தின் மூலமாக நடக்கும் சிருஷ்டி குறித்துப் பேசக்கூடிய ஒரு க்வாண்டம் இயற்பியல் முன்னோடிகூட இருக்கிறார். பரிணாமம் என்பது உயிர்களுக்கு மட்டுமல்ல பிரபஞ்சம் அதன் வெகு ஆதிகணங்களிலிருந்தே பரிணமித்துக்கொண்டிருப்பதாக கூறியவர் அவர். ‘நித்தியத்துவத்திலிருந்து நித்தியத்துவத்துக்கு’ இயற்கைத் தேர்வின் மூலமாக இப்பிரபஞ்ச பொருண்மை முழுவதுமே பரிணமிப்பதாக அவர் கருதினார். 2008ல் தம் தொண்ணூறுகளில் காலமான ஜான் வீலர்.

இவை போன்ற தொன்மக் கதைகள், அவற்றின் அடிநாதமாக விளங்கும் ஞானமரபு இவற்றாலெல்லாம்தானோ என்னவோ இந்துக்களால் பரிணாம அறிவியலை இயல்பாக மனத்தடையின்றி ஏற்கமுடிகிறது.




ஆனால் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. Pew center நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சார்ந்த மைக்கேல் கிரெமோ என்பவர் வைதீக படைப்புவாதம் ஒன்றை முன்வைக்கிறாராம். பாகவத புராணத்தை அப்படியே பொருள் கொள்ளும் இவர்களுக்குப் பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் உருவாகிவிட்டானாம். சில இந்துக்களும் கூட இவரது கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்களாம். இது இந்து ஞானமரபு ஆபிரகாமியத்தை பிரதியெடுக்க முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறி இது. எச்சரிக்கை மணி.

அத்தகைய அறிவியல் எதிர்ப்பு அடிப்படைவாத படைப்புக் கோட்பாட்டுக்கும் தேவை பால முருகனின் குட்டு.

No comments:

Post a Comment