Monday, 27 February 2012

தூக்கத்தில் என்ன நடக்கிறது?


தூக்கத்தில் என்ன நடக்கிறது?
பகலில் வேட்டையாடி களைப்படைந்ததாலும், பழங்காலத்தில் இரவு இருட்டில் வேறு செயல்களை செய்ய முடியாததாலும் மனிதன் ஓய்வெடுத்துப் பழகிய பழக்கமே காலப்போக்கில் தூக்கமாக பரிணமித்தது என்று பார்த்தோம். உடலுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் தூக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. உடலில் நிறைய ஹார்மோன்கள் சுரக்கின்றன.

 இவ்வாறு உடலில் சுரக்கும் வெவ்வேறு ஹார்மோன்களையும் நமது உடலிலுள்ள வெப்பநிலை, அதாவது உடல்சூடு தான் `கண்ட்ரோல்` பண்ணுகிறது. நமது உடலிலுள்ள வெப்பநிலை இரவிலும், பகலிலும் மாறி மாறி இருக்கும். அதாவது இரவில் குறைந்தும், பகலில் அதிகமாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி உடல் வெப்பநிலை இருப்பதனால்தான் இந்த ஹார்மோன்களும் மாறி மாறி சுரக்கின்றன.

உடலின் வெப்ப அளவு, உடல் சுரக்கும் `என்சைம்' இவை இரண்டும் சேர்ந்து `அடினோசின்' என்கிற திரவத்தை சுரக்க வைக்கிறது. இந்த அடினோசின் நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்குச் சென்று நாம் விழித்திருக்காமல் இருக்க என்னென்ன தடங்கல்கள் எல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து நம்மை தூங்க வைத்து விடுகிறது. 

அடினோசின்' பகல் முழுக்க உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அதிக அளவில் நரம்பு மண்டலத்தில் `அடினோசின்' இருந்தால் தூக்கம் சீக்கிரமாகவே வந்து விடும். மனிதர்களைப்போல் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் சில விலங்குகளுக்கு `மெலடோனின்' என்கிற ஹார்மோன் தூக்கத்தை உண்டு பண்ண மிகவும் உதவியாய் இருக்கிறது.

இலை தழைகளைத் தின்று வாழக்கூடிய மிருகங்களெல்லாம் தன்னை யாராவது அடித்துத் தின்று விடுவார்களோ என்ற பயத்திலேயே அவைகள் ஒழுங்காக நிறைய நேரம் தூங்குவதில்லை. ரொம்ப குறைவான நேரமே தூங்கும். அதே நேரத்தில் மாமிசம் தின்று வாழக் கூடிய சிங்கம், புலி போன்ற மிருகங்கள் மற்ற மிருகங்களுக்குப் பயப்படாது.

ஆகவே ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் கூட இவைகள் நன்றாகத் தூங்கும். மிருகங்கள் தூங்கும்போது உடலிலுள்ள வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. சரியான தூக்கம் இல்லையென்றால் உடலிலுள்ள காயங்கள் ஆறுவது கூட பாதிக்கப்படும் என்றும், உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் கொஞ்சம் குறைந்துவிடும் என்றும் 2004-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு
கூறுகிறது. 

நிறைய நேரம் தூங்கும் சில பாலூட்டி விலங்குகளுக்கு, உடலில் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதாகவும், அவைகளின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் (ஆர்.பி.சி.) அதிக அளவில் இருப்பதாகவும், குறைவான நேரம் தூங்கும் விலங்குகளுக்கு, வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், இதே ஆய்வு கூறுகிறது. நன்றாக தூங்குகிறீர்களா என்பதை கண்டுபிடிக்க, தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்தக் காலத்தில் இருந்து வந்த ஒரு பழக்கம் பற்றி இப்போது சொல்கிறேன்.

அங்கு இரவில் நான்கைந்து பேராகச் சேர்ந்து திருடப் போவார்கள். அவர்களில் நான்கு பேர் நன்றாகத் தூங்கி விடுவார்கள். ஒருவன் மட்டும் ஒரு கனமான கல்லை கையில் வைத்துக்கொண்டு குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு இருப்பான். அவனுக்கு நல்ல தூக்கம் வரும்போது அவன் கையிலுள்ள கல், பேலன்ஸ் இல்லாமல் கீழே விழும்.

உடனே அவன் விழித்துக்கொண்டு, `ஆகா எல்லாரும் நன்றாக தூங்கக்கூடிய நேரம் இதுதான். திருடுவதற்கு சரியான நேரமும் இதுதான். இப்போது கிளம்பலாம்' என்று தூங்குகிற மற்றவர்களையும் எழுப்பிக்கொண்டு திருட கிளம்புவார்களாம். ஆழ்ந்த தூக்கம் வரக்கூடிய நேரம் எது என்பதைக் கண்டுபிடிக்க திருடர்கள் கையாண்ட வழி இது. இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதுதான் மனிதர்களுக்கு கனவு வரும்.

நாம் பார்க்கிற காட்சிகள், சந்திக்கின்ற நபர்களின் பேச்சுக்கள், செய்கைகள், கேட்கிற சத்தங்கள், ஆகியவற்றின் பதிவுகள் ஒன்றாகக் கலந்து ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் தூங்கும்போது திரும்ப வருவதுதான் கனவு. இந்தக்கனவு ஒரு காட்சியாக வராமல் சினிமா போல நீண்ட ஸீனாக வரும். நாம் காணும் கனவுகளில் அநேகமாக நாம் இல்லாமல் கனவு வருவது என்பது மிகமிகக் குறைவு.

எல்லாக் கனவிலும் நாம் கண்டிப்பாக இருப்போம். நாம் தானே கனவு காண்கிறோம். அப்படியிருக்கும்போது அந்தக்கனவில் நாம் இல்லாமல் எப்படி? மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள `பான்ஸ்'  என்கிற உறுப்பு தான் கனவைத் தூண்டிவிடுகிறது. பெரும்பாலும் கண்கள் சுற்றும் தூக்க நிலையில்தான்  கனவுகள் அதிகமாக வரும். கண்கள் சுற்றும் தூக்கம் பற்றி பிறகு சொல்கிறேன்.

அதற்குமுன் கனவைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். "நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பு தான் கனவு'' என்கிறார் `உளவியலின் தந்தை' என்று போற்றப்படும் `சிக்மெண்ட் பிராய்டு'. `அப்படியா? நிறைவேறாத ஆசைகளா கனவாக வருகிறது?' என்று யோசிக்கத் தொடங்கிவிடாதீர்கள். அதற்கு அவர் ஏராளமான விளக்கங்கள் தந்திருக்கிறார்.

ஆனால் பல நினைவுகளின் தொகுப்புக் காட்சியே தூங்கும்போது கனவாக வருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தூக்கத்தில் கனவைத் தவிர வேறுபல அனுபவங்களும் மனிதர்களுக்கு ஏற்படும்... 

"என் குழந்தை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்குகிறான்'' "என் குழந்தை கண்ணின் கருவிழி தூங்கும்போது பம்பரம் மாதிரி சுத்துது'' "என் வீட்டுக்காரர் ராத்திரி தூங்கும்போது கதவைத் திறந்துகிட்டு எழுந்து வெளியே போகிறார்'' "என் பையன் தூங்கும்போது, அடிப்பேன், உதைப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என்று உளறுகிறான்'' இப்படி பலபேருக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். இதற்கெல்லாம் கண்கள் சுற்றும்  தூக்கமும், கண்கள் சுற்றாத தூக்கமும் தான் காரணமாகும்.

No comments:

Post a Comment