Thursday, 16 February 2012

முல்லா


மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா? 

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.
"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.


முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.


தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.


முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"


"இல்லை" என்றார் நீதிபதி


சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று, "தலைவா என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.


ஒருவர் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதை நாம் நீங்கள் தீர்மானிக்க முடியாது. என்ன தான் தலைகீழாய் நின்றாலும் அடுத்தவர் மேல் நம் கருத்தைத் திணிக்க முடியாது. முல்லா வழக்குக்கு முன்னும் அந்தத் தலைவரைக் கழுதையாகத் தான் நினைத்தார். நீதிபதியின் தீர்ப்பிற்குப் பின்னும் அவர் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.


ஒவ்வொருவரும் அடுத்தவரை தங்கள் அளவுகோல்களை வைத்தே அளக்கிறார்கள். அவர்களைப் பற்றி அபிப்பிராயம் கொள்கிறார்கள். எனவே அடுத்தவர் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன தான் நீங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் அவர்கள் தங்கள் கருத்தை எளிதாக மாற்றிக் கொள்வதில்லை. அதுவும் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தற்பெருமை பேசினால் அது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.


உங்கள் குணாதிசயங்கள், நீங்கள் நடந்து கொள்ளும் முறை எல்லாம் தான் நீங்கள் யாரென்று வெளியுலகிற்கு அழுத்தமாகப் பிரசாரம் செய்கின்றன. மற்றவர்கள் அதை வைத்தே உங்களை எடை போடுகிறார்கள். எனவே உங்களைப் பற்றி அதிகம் நீங்களே சொல்லிக் கொள்வது தேவையற்றது.


அதே நேரத்தில் அடுத்தவருக்குப் பிடிக்கிற மாதிரியெல்லாம் நடந்து கொண்டு பேரெடுக்க முயற்சி செய்யாதீர்கள். சில நாட்களிலேயே தோற்றுப் போவீர்கள். இறைவனால் கூட தொடர்ந்து மனிதனிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை. இறைவனாலேயே முடியாதது உங்களால் முடிந்து விடுமா என்ன?


மற்றவர்கள் எண்ணத்தில் உயர வேண்டுமானால்..
உங்களைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்வதைத் தவிருங்கள்.


ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அடிக்கடி ஆராயப் போகாதீர்கள். 
உங்கள் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். 
மற்றவர்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள். 
மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேசுங்கள். 
அப்படியும் ஒருசில சமயங்களில் உங்களைப் பற்றி வரும் எதிர்மறை விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.


- இவற்றைப் பின்பற்ற முடிந்தால் நீண்டகாலம் நீங்கள் பெரும்பாலானவர்களின் உயர்ந்த கருத்தில் இருக்க முடிவது உறுதி.

No comments:

Post a Comment