ஓர் ஏழை அந்தணர் கால்நடையாக காட்டு வழியில் தீர்த்த யாத்திரை சென்றுகொண்டிருந்தார். நல்ல வெயில். களைப்பு மேலிட்டதால் அவர் ஒரு மரத்தடியில்அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன்அந்த அந்தணரை ஏளனமாகப் பேசி, அவரிடம் இருந்த சில பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு அவரை விரட்டினான்.
கடும்வெயிலில் சுடுமணலில் மிகவும் சிரமப்பட்டு அவர் மெதுவாக நடந்து சென்றார். அதைப் பார்த்த வேடனின் மனதில் சிறிதளவு இரக்க உணர்ச்சி தோன்றியது. தனக்குப் பயன்படாத கிழிந்துபோன செருப்பையும் நைந்துபோன பழைய குடையையும் அந்தணரிடம் கொடுத்தான். பின் அவன் தன் வழியே செல்லும்போது ஒரு புலி அவனைத்தாக்கிக் கொன்றது. அப்போது வானுலகிலிருந்து எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எமதூதர்களைத் தடுத்தார்கள்.
""இவன்மகாபாவி! இவனை நரகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எங்களைத்தடுக்காதீர்கள்'' என்றனர் எமதூதர்கள்.
"எமதூதர் களே! இந்த வேடன் வைகாசிமாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்தபாவங்கள் அவனை விட்டு அகன்று விட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம்'' என்று கூறி, அவ் வேடனின் உயிரைக் கொண்டுசென்றார்கள் விஷ்ணு தூதர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாசி மாதம்.
"மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்' என்ற கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே. இந்த வைகாசி மாதத்தில் பகவான் மானிடர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றெண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, சரஸ்வதி,துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லாப் புனித நதிகளையும் அழைத்து, அவர்களிடம் வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படிக் கூறினார். அச் சமயம் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும்கூறினார் ஸ்ரீமகாவிஷ்ணு. சகல புண்ணிய தீர்த்தங்களும், ""ஸ்வாமி! பாவிகள் எங்களிடம் விட்ட பாவத்தை நாங்கள் எப்படிப் போக்கிக் கொள்வது?'' எனக்கேட்டன.
""வைகாசி மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும் ஏகாதசி, துவாதசி, பௌர்ணமி தினங்களிலாவது நீராட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களேனும் நீராட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களிடம் உங்களிடம் சேரும் பாவங்களை விட்டு விடுங்கள்'' என்றார் பரமாத்மா.
உலகை ரட்சிக்கும் பகவான் தேவகணங்களுடன் இந்த மகிமை மிகுந்த வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தருகிறார். அதுசமயம் நீராடி இறைவனைப்பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும் இம்மாதத்தில் செய்கின்ற எல்லாவிததானங்களுக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர்கூற்று!
வருதினி ஏகாதசி
மாதத்தில் இரண்டு ஏகாதசிதிதிகள் வருகின்றன. இந்த ஏகாதசி நாளில் உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது. ஏகாதசியன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியில் அதிகரிக்கின்றது. இதனால் நமது ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அதுசமயம் உபவாசம் இருப்பது உடலுக்கும் நல்லது; இறைவனின் அருளுக்கும் பாத்திரமாகலாம்.
வைகாசிமாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது. பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இப்புனிதமான ஏகாதசி விரதத்தை மாந்தாதாவும், துந்துமாறனும் அனுசரித்து மேலுலகம் அடைந்தார்கள் என்கிறது புராணம். பிரம்மதேவனின் ஐந்தாவது தலையைக் கொய்த பாவத்திலிருந்து விடுபடவேண்டி சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவ விமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம். தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது வித்யாதானம். அந்த வித்யாதானப்பலனை அளிக்கக் கூடியது இந்த வருதினி ஏகாதசி விரதம். அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.
No comments:
Post a Comment