பகலிரவில்லாத ஆனந்த நிலை
மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்யும் வழிமுறைகளை சில திருமந்திரப் பாடல்களிலிருந்து அறிந்தும். இந்த மூச்சுப் பயிற்சிகளின் இலக்கு என்ன? இதற்கான விடையையும் திருமந்திரப் பாடல்களிலேயே தேடிப் பார்க்கலாம்.
"கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்
கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே.'
-திருமந்திரம் பாடல் எண்: 569.
பருவுடலை ஒரு வீடாகவும் (கூடம்) இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் அந்த வீட்டில் குடிபுக வந்த இரு மங்கையர் களாகவும் பாடலின் முதல் வரியில் உருவகம் செய்கிறார் திருமூலர். நமது உடலில் உள்ள தசவாயுக்களை ஆண்பாலாகக் குறிப்பிடுவர். பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்து வாயுக்களுக்கும் ஆண்பால் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.
நாடிகள் அனைத்தையும் பெண் பாலாகக் கூறுவது தொன்றுதொட்டே தமிழில் நிலவிவரும் ஒரு மரபாகும். திருமூலரும் அந்த மரபின்படியே இடகலை, பிங்கலை நாடிகளை இரு மங்கையராக உருவகப்படுத்தியுள்ளார். இந்த முதல் வரியில் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. "கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்' என்ற தொடரை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.
கூடம் என்பது பருவுடல். நமது உடலிலுள்ள கண், காது, மூக்கு போன்ற அவயங்களும்; இதயம், நுரையீரல், குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளும் இந்தப் பருவுடலின் அங்கங்கள்; பருவுடலைச் சார்ந்தவை. இவை அனைத்தும் இணைந்தே பருவுடல் உருவாகிறது.
நாடிகள் இந்த வீட்டைச் சார்ந்தவை அல்ல! வெளியிலிருந்து இந்த வீட்டினுள் வந்து குடியேறியவை! நாம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடிபுகுகிறோம் அல்லவா? அது போன்றே இடகலை, பிங்கலை ஆகிய இரு மங்கையரும் இந்தப் பருவுடலின் உள்ளே குடிவந்துள்ளனர். ("கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்').
நமது நாடிகள் அனைத்துமே சூட்சுமமானவை. நமது ரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவை பருவுடலைச் சார்ந்தவை; கண்ணுக்குத் தெரிபவை. ஆனால் பிராணசக்தியைச் சுமந்து செல்லும் நாடிகள் பருவுடலைச் சார்ந்தவை அல்ல. அவை நமது சக்தி உடலைச்சார்ந்தவை. எனவேதான் திருமூலர் நாடிகளை பருவுடலினுள்ளே குடிபுக வந்த மங்கையர் என வர்ணிக்கிறார்! இந்தக் கூடம் அழியும் நாள் வரும்போது குடிபுகுந்த மங்கையர் அதிலிருந்து வெளியேறிவிடுவர். சக்தி உடல்களுக்கும், அதிலுள்ள சக்கரங்கள், நாடிகள் போன்றவற்றிற்கும் அழிவு என்பது கிடையாது. ஆன்மா மறுபிறவி எடுக்கும் போது சக்தி உடல்களும் சக்கரங்களும் நாடிகளும் வேறொரு பருவுடலில் குடிபுகும்.
சுவாசம் என்பது உள்சுவாசம், வெளி சுவாசம் என இடையறாது நடந்து கொண்டேயிருக்கிறது. வலது நாசி, இடது நாசி (பிங்கலை, இடகலை நாடிகள்) வழியே இது மாறி மாறி நடைபெறுகிறது என்பதை ஏற்கெனவே கண்டோம். இந்த சுவாசமானது தலைக்குக் கீழே எட்டு விரற்கடையும் (அங்குலம்), தலைக்குள் நான்கு விரற்கடையும் பாய வேண்டும். மொத்தம் 12 விரற்கடை களே நலமான சுவாசத்தின் அளவாகும். இதையே இந்தப் பாடலின் இரண்டாவது அடியில் காண்கிறோம்.
"ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்".
ஒரு குழந்தை பிறக்கும்போது சுவாசத்தின் அளவு 12 அங்குலமாக இருக்கும். ஆனால் வளர வளர இது குறைந்து கொண்டே வரும். தவறான மூச்சு முறை, தவறான உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கை முறைகளால் சுவாசத்தின் அளவு பாதிக்கப்பட்டு படிப்படியாகக் குறையும்.
வயது முதிர்ந்த நிலையில் (நீடுவர்) மூச் சின் அளவு எட்டு விரற்கடையே இருக்கும். தலைக்குக் கீழே மட்டுமே சுவாசம் பாயும். தலைக்கு உள்ளே செல்ல வேண்டிய நான்கு விரற்கடை சுவாசம் குறைந்து போய்விடும்.
"நீடுவர் எண் விரல், கண்டிப்பர் நால்விரல்"
என்ற மூன்றாவது அடி இதையே குறிக்கிறது.
இவ்வாறு குறைவுபடும் நான்கு அங்குல மூச்சை முறையான மூச்சுப் பயிற்சிகளின் மூலமாகக் கூட்டிக் கொண்டால் ("கூடிக் கொள்ளில்') நமது உடல் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்தாக மாறும். அதாவது உடல் சிவசொரூபமாகும். ("கோல அஞ்செழுத்து ஆமே'). ஜீவாத்மா வசிக்கின்ற இந்த உடல் நரை, திரை, மூப்பு நீங்கி, பரமாத்மாவின் அம்சமாக ஒளிவீசத் துவங்கும். இதுவே மூச்சுப் பயிற்சியின் நோக்கமும் இலக்கும் என்பதே இந்த திருமந்திரப் பாடலின் சுருக்கமான கருத்தாகும்.
இந்த நிலையை அடையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை மனதிலும் ஆன்மாவிலும் உருவாகும். இதையே "பரமானந்த நிலை' என்கிறோம். இந்த நிலையை அடைந்த ஆன்மாவில் "தான்' என்ற அகங்காரம் அழிந்து போகும். இரவு- பகல் என்ற பேதங்களும் அந்த ஆன்மாவிற்கு இராது. காலங்களைக் கடந்த ஒருவித பரவச நிலையில் இறைவனோடு ஒன்றி அந்த ஆன்மா வாழும். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகிறார்.
"பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.'
-திருமந்திரம் பாடல் எண்: 570.
உயிருக்கு அடிப்படை மூச்சு எனும் பிராணன். பிராணன் இன்றி உயிர் இல்லை. எனவே பிராணனே உயிர் எனக் கொள்ளலாம். இந்தப் பிராணனையே "ஆனை' என்கிறார் திருமூலர். அது 12 விரற்கடை பாயும். எனவேதான் "பன்னிரண்டு ஆனை' என்கிறார். இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளின் வழியே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆனைக்கு (மூச்சுக்கு) பகல்- இரவு என்ற பேதங்கள் உண்டு.
பகலில் இந்த ஆனை சற்றே விரைவாக நடைபோடும். இரவில் இதன் வேகம் குறையும். சாதாரணமாக நாம் அனைவருமே பகலில் ஒரு நிமிடத்திற்குப் பதினாறு முறை சுவாசிக்கிறோம் சற்றே கடினமான வேலை களில் ஈடுபடும்போது இது இன்னும் அதிக மாகும். இரவில் உறங்கும்போது உடலின் இயக்கங்கள் அனைத்தும் குறைவதால் தேவை யான பிராணனின் அளவும் குறைகிறது. அதற்கேற்ப மூச்சின் வேகமும் குறையும்.
இரவில் பெரும்பாலும் நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை என்ற அளவிலேயே இருக்கும். இவ்வாறு பகலிலும் இரவிலும் மூச்சில் ஏற்படும் மாறுதல்களையே,
"பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது'
என்று திருமூலர் குறிப்பிடுகிறார். உடலுக்கும் பிராணனுக்கும் அதிபதியாக இருப்பது "ஆன்மா'. இந்த ஆன்மாவையே "பாகன்' என்று உருவகம் செய்கிறார் திருமூலர். ஆன்மா என்பது உடலினுள் இருக்கும்வரைதான் பிராணனும் உடலில் தங்கியிருக்கும்; சுவாசமும் நடைபெறும். ஆன்மா பருவுடலை விட்டு நீங்கும்போது சுவாசமும் நின்றுவிடும். எனவேதான் சுவாசம் எனும் ஆனையை இயக்கும் பாகனாக ஆன்மாவைக் குறிப்பிடுகிறார்.
மூச்சை இயக்குவது ஆன்மாவே எனினும் அந்த மூச்சின் இயக்கங்களை ஆன்மா உணர்ந்து கொள்வதில்லை. இதையே,
"பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்'
என இரண்டாவது வரியில் திருமூலர் குறிப்பிடுகிறார். பாகனின் அறிதலும் புரிதலும் இன்றியே அந்த ஆனை தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளாத அனைவரது உடலிலும் இதுவே நடைபெறுகிறது.
"பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.'
மூச்சு எனும் ஆனையை அதன் பாகனா கிய ஆன்மா உணர்ந்து கொண்டு, முறையான மூச்சுப் பயிற்சிகளின் மூலமாக அதைத் தன்வசப்படுத்தியபின் அந்த ஆனைக்கு (மூச்சுக்கு) பகல் இரவு என்ற பேதங்கள் இல்லாமற் போகும். இது எப்படி சாத்தியமாகும்? சற்றே விரிவாகக் காணலாம்.
சாதாரணமாக சுவாசம் என்பது இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடி களிலுமே மாறி மாறி நடைபெறுகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நாடியில் மாற்றம் ஏற்படும் என்பதை ஏற்கெனவே கண்டோம். அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
மொத்தமுள்ள நாடிகள் 72,000. இவற்றுள் சுழுமுனை, இடகலை, பிங்கலை ஆகிய மூன்றை முதன்மை நாடிகள் அல்லது மிக முக்கியமான நாடிகள் என்று கூறுகிறோம். இடகலையும் பிங்கலையும் சுழுமுனை நாடியைச் சுற்றி பாம்பு போல் பின்னிக் கிடப்பவை. இவை மூலாதாரத்தின் அருகிலிருந்து துவங்கி, மேலெழும்பி, நாசித்துவாரங்களில் சென்று முடிவடைகின்றன. இந்த நாடிகளில் மட்டுமே சுவாசம் நடைபெறும்போது நாசித்துவாரங்களில் துவங்கி மூலாதாரம் வரையிலேயே பிராணன் பாயும்.
முறையான மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது பிராணன் மூலாதாரத்தைக் கடந்து சுழுமுனை நாடியிலும் பாயத் துவங்கும்! இவ்வாறு சுழுமுனையில் பிராணன் பாயத் துவங்கும்போது மூலாதாரத்தின் கீழே உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியும் தூண்டப்படும். குண்டலினி மேலெழும்பி சுழுமுனை வழியே மேல்நிலைச் சக்கரங் களைச் சென்று அடையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை உருவாகும். "காலம்' எனும் தளையிலிருந்து ஆன்மா விடுதலை பெறும்! பகல்- இரவு என்ற பேதங்கள் மறைந்து போகும்.
No comments:
Post a Comment