Sunday, 19 February 2012

அம்மா-மகன், சித்தி


ஒரே வகுப்பில் படிக்கும் அம்மா-மகன், சித்தி

கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது அம்மா மற்றும் சித்தி ஆகியோருடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிமா தாஸ். அவரது மகன் பாலாஷ்(16). தற்போது 35 வயதாகும் இவருக்கு 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை தொடர்ந்து படிக்குமாறு பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்தனர். ஆனால், அவர் கூச்சம் காரணமாக மறுத்துவிட்டார்.

பின்னர் ஒரு வழியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிபா ரவிந்திர திறந்த நிலை பள்ளியில் 9ம் மற்றும் 10ம் வகுப்பு படித்து முடித்தார். அதே நேரத்தில் அவரது மகனும் 10ம் வகுப்பு படித்து முடித்தார்.

இதையடுத்து குடும்பத்தினர் இருவரையும் ஒரே பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பஷிர்ஹத் தண்டிர்ஹத் நாகேந்திர குமார் மேல்நிலை பள்ளியில் சேர்ந்தனர். 

தாயும், மகனும் சமஸ்கிருதம், வரலாறு, அரசியல் , தத்துவம் ஆகிய பாடங்களைகொண்ட பிரிவில் சேர்ந்ததால் தற்போது அவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் சேர்ந்ததை அறிந்த அனிமாவி்ன் தங்கை பூர்ணிமாவும் அதே பள்ளியில் சேர்ந்துவிட்டார்.

இதையடு்தது தாய்-மகன் மற்றும் சித்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் ஒரே வகுப்பில் படித்து வருவது அப்பகுதி மக்களிடம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திபக் ராஜன் மண்டல் கூறுகையில்,

35 வயதில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அனிமாவுக்கு எங்கள் பள்ளியில் இடம் பெற்று கொடுத்தது. அவர்கள் வகுப்பறையில் மற்றவர்களுடன் நன்றாக பழகுகிறார் என்றார்.

அனிமா தாஸ் கூறுகையில், 

இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படிப்பை துவக்குவேன். எனது மகன் பாலாஷ் வெளியில் டியூசன் செல்கிறான். பின்னர் வந்து பாடங்களை எனக்கு சொல்லி தருகிறான். என் தங்கை பூர்ணிமாவும் அதே வகுப்பில் தான் படிக்கிறார். அவரும் எனக்கு தேவையான உதவிகளை செய்கிறார் என்றார்.

மாணவன் பாலாஷ் கூறுகையி்ல, வீட்டில் அம்மாவாகவும், பள்ளியில் நல்ல தோழியாகவும் இருக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment