Sunday, 19 February 2012

"புனரபி மரணம் ...புனரபி ஜனனம் ..."


காலை பத்துமணிக்கு அலுவலகம் வந்தவுடன் அடித்த தொலைபேசி, மரண செய்தியை தாங்கி வந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, உடனடியாக விடுப்பு சொல்லிவிட்டு, மனைவிக்கும் தகவல் சொல்லி வரச் சொல்லிவிட்டு ...பதட்டமாக இருந்ததால் ஆட்டோவில் ஏறி நண்பர் சிவராமன் வீட்டை நோக்கிச் சென்றேன்.

சிவராமன் அப்பாவின் நண்பரின் மகன். அப்பாவுடன் சிவராமன் அப்பாவிற்கு ஏற்பட்டிருந்த நட்பு அவர்களுடைய காலத்திற்கு பிறகு சிவராமனுக்கும் எனக்கும் தொடர்ந்திருந்தது. அவர்களுடைய குடும்பம் ஆச்சார்யமான குடும்பம் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். 


அதில் உண்மையும் இருக்கிறது. நண்பர் சிவராமன் வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர். ஓய்வு நேரத்தில் சமய உபாசகராகவும் இருந்தார். அவரை 'பஜகோவிந்தம் சிவராமன்' என்றும் நன்கு தெரிந்தவர்கள் அழைப்பார்கள். சமய கூட்டங்களில் அவர் கொடுக்கும் சாஸ்திர விளக்கங்களை கேட்பதற்கு ஆன்மிக ஆர்வளர்கள் சேர்ந்த ஒரு கூட்டமே உண்டு. எனக்கு மதவிசயங்களில் அவ்வளவு ஈடுப்பாடு இல்லாவிட்டாலும், அவரின் சமய அறிவை எண்ணி வியந்திருக்கிறேன். ஒரு சில சத்சங்க கூட்டங்களுக்கு சிவராமனின் வற்புறுத்தலின் பேரில் சென்றிருக்கிறேன்.

ஒரு முறை வைகுண்ட ஏகாதசியின் முதல் நாள் சிவராமன் என்னை அழைத்துச் சென்றார். ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த சத்சங்கக் கூட்டத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு இன்னும் கூட எனக்கு நினைவில் இருக்கிறது. அவர் சொல்லும் சுலோகங்கள் புரியாவிட்டாலும் விளக்கங்கள் ஏதோ ஒன்றை புரிய வைப்பதாகவே இருக்கும். அன்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார் ...

"புனரபி மரணம் ...புனரபி ஜனனம் ..."

punarapi jananam punarapi maranam
punarapi jananii jathare shayanam
iha samsaare bahudustaare
kripayaa apaare paahi muraare

வேதாந்திகளில் சிறப்பானவரும், லோக குருவானவரும், ஆச்சாரியார்களில் மிக முக்கியமானவருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆதிசங்கரர் என்ன சொல்லுகிறார் என்றால்..."
"மரணம் ... ஜனனம் ...இயற்கையானது...ஓவ்வொரு ஜீவனும் பிறப்பு இறப்பு என்ற சுழலில் வருகிறது. ஜீவன் நித்தியமானது, மரணம் ஜனனம் எல்லாம் மாயத்தோற்றங்கள். ஏன் பிறந்தோம்...ஏன் இறக்கிறோம் என்ற கேள்விகள் அர்த்தமற்றது...ஜீவன் ஒன்றே நித்யமானது. 


மகாபாரத கதையில் இருந்து ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன் கேளுங்கள் ... பாரதப் போரில் தன் மகன் அபிமன்யு சக்ர வியூகத்தில் சிக்கி இறந்ததும்... அர்ஜுனன் அவனை கான ஒருமுறை சொர்கத்திற்கு சென்றான். மகன் அபிமன்யுவை மிகவும் நெருங்கி சென்றான். தந்தையான அவனைப் பார்த்தும் கூட அபுமன்யுவிடமிருந்து எந்தவிதமான உணர்ச்சிகளும் ஏற்படவே வில்லை. அர்ஜுனனுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் ஆகிவிட்டது. 'மகனே நான் உன் தந்தை வந்திருக்கிறேன்' என்றான் அர்ஜுனன். 'ஓ அப்படியா. நான் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்திருக்கிறேன். நீ என் எந்த பிறவிக்கு தந்தை ? ' என்று அர்சுனனைப் பார்த்துக் கேட்டான் அபிமன்யூ... அவனே தொடர்ந்து 'ஓ மானிடா உனக்கு ஆன்மா என்றால் என்னவென்று தெரியவில்லையே. பிறப்பும் இறப்பும் பஞ்ச பூதங்களால் ஆன உடலில் ஆன்மா சஞ்சரிக்கும் போது ஏற்படும் தோற்றங்கள். எதோ ஒரு முறை நான் பிறப்பெடுக்க நீ காரணமாக இருந்திருக்கிறாய். அதனுடன் உன்னுடன் உண்டான தொடர்பு என்றோ முடிந்துவிட்டது. எனவே எனக்கு தற்போது தந்தை என்று எவருமே இல்லை. நீ சென்றுவரலாம்.' என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டான். அதிர்ச்சி அடைந்தாலும் அர்சுனனுக்கு ஆன்ம ஞானத்தை அபிமன்யு உணர்த்தியதால் மரண ரகசியங்களை அறிந்த திருப்தியில் அங்கிருந்து பூலோகத்திற்கு வந்துவிட்டான். இப்பொழுது புரிகிறதா ?
மரணம் ... ஜெனனம் எல்லாம் மாயை.
அன்று அவர் சொல்லி முடித்ததும்...பிறப்பு - இறப்பு பற்றி ஏதோ புரிந்தது.

சிவராமன் வீட்டை நெருங்கியதும் அழுகுரல்கள்...
சிவரமானும் அவரது மனைவியும் அதிர்ச்சியில் அப்படியே மயங்கி கிடந்தனர். என் மனைவி அதற்குள் வந்து அங்கே சிவராமன் மனைவியின் அருகில் அமர்ந்து அவரை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தாள்.

மெதுவாக அங்கு துக்கத்திற்கு வந்தவர்களிடம் கேட்டேன்.

"எப்படி நடந்தது...

"காலையில் அவருடைய பையன் ஸ்கூலுக்கு போனபோது சாலை சந்திப்பில் ... சாலையை கடக்கும் போது எதிர்பாராமல் வந்த கார் மோதியதில் பையன் அங்கேயே..." அதற்கு மேல் அவரால் சொல்ல முடியவில்லை. போஸ்ட் மார்டம் முடிந்து வர மதியம் ஆகும் என்றார்கள்.
வந்து சேர்ந்தது. உறவினர்கள் எல்லோருமே வந்துவிட்டதால் உடனடியாக அடக்கம் செய்துவிட முடிவு செய்தார்கள்

இடையே சற்று நிதானத்துக்கு வந்த சிவராமன் என்னை கட்டிக் கொண்டு அழுதார்.

"ஐயோ...இப்படி ஆயிடுச்சே..."

"......" எனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை வரவில்லை கண்கள் நினைந்தது

"நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன். சதா காலமும் பகவானையே சேவிக்கிறேன்...எனது ஒரே மகனை....." விம்முகிறார்

அவரை இறுக்கி அணைத்து முதுகில் தட்டிகொடுத்தேன்.
"தாங்க முடியலையே...பகவானே என்னையும் கொண்டுட்டு போய்டு..."

அடக்க முடியாமல் அழுதார்.

வீட்டில் சடங்குகள் முடிந்ததும்... உடலை எடுத்துக் கொண்டு சுடுகாட்டுக்கு சென்றோம். வழியெங்கும் அதிர்சியில் இருந்து மீளாமல் பலமுறை மயங்கினார். மனம் முற்றிலும் உடைந்துவிட்ட நிலையில் எனக்கும் அந்த சூழல் தாங்கிக் கொள்வதற்கே முடியாமல் கண்ணீருடன் இடுகாட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
எல்லாம் முடிந்துவிட்டதே பெரும் சோக அலறலைத் தொடர்ந்து அவரை அப்புறப்படுத்தி திரும்பிப் பார்க்கவிடாமல் அழைத்துச் சென்றனர்.

"சாமி...இன்னும் ஐம்பது ரூவாய் கொடுங்க..."

அந்த நேரத்தில் அந்த சூழலில் வெட்டியானின் பணத்தின் மீதான குறியும், அதன் கெஞ்சலும் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது.

"யோவ்...என்னைய்யா மனுசங்க நீங்களெல்லாம்...சின்ன பையன் சாவுல கூட காசு தான் முக்கியமாக நினைக்கிறிங்க..."

"அதுல்ல...சாமி... அங்கே எரியுது பாருங்க பொணம் அதை ராத்திரியெல்லாம் நாய் நரி நெருங்காமல் பார்த்துக்கனும்...."

"அதுக்கு அவங்க ஆளுங்களிடம் தானே கேட்கனும்"
"சாமி அது யாரோ அனாதை பினாமாம்...யாரோ நாலு புண்ணியவன்கள் எரிக்கறத்துக்கு மட்டும் காசு கொடுத்துட்டு போய்டாங்க...இப்பதான் நல்லா எரிய ஆரம்பிச்சுருக்கு...இனிமே நாத்தம் கொடலை புடுங்கும். அதில நிக்க்றத்துக்கு தான் கொஞ்சம் குடிக்கனும்...அதுக்குதான் பணம் கேட்டேன்"

சற்று இரக்கம் வந்தது எனக்கு
"அதுக்குன்னு ஒரு சின்னப்பையன் இறந்து போய் இருக்கிறான் என்ற வருத்தம் கொஞ்சங்கூட இல்லாமல் காசு கேட்கிறே...மனுசனா நீயெல்லாம் "
"சாமி...அங்கே பாருங்க நாலு முட்டு தள்ளி ஐஞ்சாவது முட்டு...இன்னும் ஈரம் காயாமல் இருக்கே சமாதி ... எது என் மவனோட இருளனோட சமாதிதான்...என்கையாலேயே பொதெச்சேன்..."

எனக்கு தூக்கிவாரி போட்டது... தொடர்ந்தான்
"என் மவன் எப்போதும் ராவெல்லாம் சுடுகாட்டில் எங்கூட தொணைக்கு இருப்பான். போன வாரம் இருட்டுக்குள்ள கொஞ்சம் தள்ளி வெளிக்கு போனவனை பாம்பு கடிச்சுட்டு...ஊருக்குள்ள தூக்கி போறதுகுள்ள நொரை தள்ளி செத்துட்டான் "

"எம் பொண்டாட்டி கதறி.. கதறி அழுதா...நானும் அழுதேன் ... எல்லாம் மூணு நாள் தான் சாமி...முணாம் நாள் அழுது ஓஞ்சு வயக்காட்டு வேலைக்கு போய்டா"

"எம் மவனை பொதச்சதும் சுடுகாட்டு பக்கமே நான் வரலை"
"பக்கதூரு சொந்தக்காரன் சடையன் தான் சுடுகாட்டை பாத்துக்கிட்டான்"

"......."
எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்சியாக இருந்தது...மேலும் சொல்லிக் கொண்டிருந்தான்

"நேத்து, சடையன் அவன் பொண்டாட்டிய புள்ள பெத்துக்க ஆத்தா வீட்டுல விட போறேன்..நீயே சுடுகாட்டை பார்த்துக்க...இன்னிக்கு இரண்டு பொணம் வருது' ன்னு சொல்லிட்டு போய்டான் என்ன செய்றது ..."

மவன் செத்து அஞ்சே நாள்ல இங்க வந்துட்டேன் சாமி..."
அதிர்சியினூடே,

"உனக்கு மவன் செத்துட்டானேன்னு வருத்தமே இல்லையா ?"

"சாமி..பொறப்பு இறப்பெல்லாம் நம்ம கையிலா இருக்கு ?, யார் இன்னைக்கு சுடுகாட்டுக்கு, வருவாங்க, யார் பொறப்பாங்கன்னு யாருக்கு தெரியும் சாமி ?... மவன் செத்துட்டான்...ஆனா... எம்புள்ள இதே சுடுகாட்டில் எங்கூடத் தானே இருக்கான். எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போறோம்...சாமியா பாத்து ...கொடுப்பதை சாமியா எடுத்துகுது நாம என்ன செய்ய முடியும் சாமி...பாழும் வயுத்துப் பொழப்பையும் பாக்கணுமே..."
அவன் சொல்லச் சொல்ல எனக்கு எது எதையோ தொடர்புபடுத்தி ஒரு தெளிவு கிடைத்தது.

அவன் கேட்ட 50க்கு பதிலாக 100ஐ கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தேன்.

"நாடாள பொறந்த மவராசா... நானே ஒன்னெ பொதச்சேனடா..."

நான் அங்கிருந்து அகன்ற நிமிடத்தில் ... அவன் பாடிய ஒப்பாறி பாட்டு ...நான் அந்த இடத்தைக் கடந்தும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment