Wednesday, 8 February 2012

சோம்பல் நீங்க...


கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள்...

என் நண்பர்அனுப்பிய ஓரு மடல்

பாஸ்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது பாஸ்கரின் வாதம்.

வாதம் சரிதான்.

ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரையும் தூங்கலாம் என்பது அவன் கணக்கு. அரக்கப் பரக்க பல் தேய்த்து, குளித்து, புறப்பட்டு ஸ்கூட்டரில் போய் கல்லூரி வாசலில் இறங்கி, கட்டி வந்த இட்லியை வகுப்பாசிரியர் வரும் முன்பு குத்தி அடைத்து சாப்பிடுவது பழக்கம்.

உண்டவுடன் மறுபடியும் தூக்கம் வரும். ஆனால், கண் விழித்தபடியே தூங்குவதற்கு பாஸ்கர் கற்றுக் கொண்டு விட்டான். ஒரு ஆசிரியர் போய் அடுத்த ஆசிரியர் வருவதற்குள் மேஜையில் சாய்ந்து தூங்கி விடுவான். கேண்டீனில் நல்ல சாப்பாடு. பிறகு புல்வெளித் தூக்கம். அப்புறம், மறுபடியும் வகுப்பறை. சோம்பலான பொழுதுகள். மாலை ஐந்து மணிக்கு மேல் பாஸ்கர் உடம்பில் அந்த சுறுசுறுப்பு குடியேறும். பன்னிரண்டு மணி வரை ஆட்டம் போட முடியும்... பார்த்த சினிமாவையே அலுக்காமல் பார்க்க முடியும்.

பள்ளியும், கல்லூரியும் பாஸ்கரை புரிந்து கொண்டன. கடைசி நிமிடம் படித்து தேர்வாகி விடுகிற மாணவன் என்று அறிந்து கொண்டது. ஆனால், வேலை செய்த கம்பெனி-சங்கரின் சோம்பலை ஏற்கவில்லை. தாமதமாக வருவதை விரும்பவில்லை. ‘கம்ப்யூட்டர்’ எதிரே உட்கார்ந்து கொண்டே தூங்குவதை அனுமதிக்கவில்லை. வேலை சம்பந்தப்பட்ட புத்தகத்தை விரித்து வைத்தபடியே தூங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையாய் எச்சரிக்கைத் தரப்பட்டது. மறுபடியும் இது தொடர-வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.

வீட்டில் உண்மையைச் சொல்லாமல், ‘கம்பெனி ஊத்தி மூடிக்கிச்சு’ என்றான். வேறிடத்தில் வேலை தேடப் போகிறேன் என்று வீட்டில் காசு வாங்கினான். வேலை தேடாது சென்னையில் எந்த இடங்களெல்லாம் தூங்கலாம் என்று தேடினான்.

தூக்கத்திற்குப் பிறகு உணவில் ஈடுபாடு. உண்ட பிறகு தூக்கம் தான் முக்கியம். கூடப் படித்தவர்கள் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று சம்பளம் வாங்க தினமும் கை செலவிற்கு வீட்டில் நூறு ரூபாய் வாங்குவதே இவனது லட்சியமாக இருந்தது. எதனாலோ பாஸ்கருக்கு முன்னேற வேண்டுமென்ற ஆசை அறவே இல்லை. சோம்பலை உதற மனம் வரவேயில்லை.

சோம்பல் ஒரு பழக்கம். படிந்து விட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ் பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியைக் கண்டு கலவரம் வரவேண்டும்.

சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோல்வி பழக்கமானால், சோம்பல் பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் உள்ளே தோன்றும். அதிருஷ்டமில்லை என்றும், படிப்பில் இந்தத் தேர்வுமுறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.

‘எனக்கு விருப்பம் படிப்பு இல்ல’ என்று சொல்பவர்கள், வேறு ஏதாவது விஷயத்தில் முதன்மையானவராய் இருக்க வேண்டும். அங்கேயும் அவர்கள் ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பார்கள்.

‘எல்லாரும் முதலாவதா வந்துட்டா எப்படி? முப்பதாவதா வருவதற்கு ஆள் வேணுமில்லை’என்று எகத்தாளம் பேசுவார்கள். எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதில் விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுபவர்கள் வெகு சிலரே. விருப்பத்தோடு வேலையில் ஈடுப்படுவது ஒரு கலை. மேஜை துடைப்பதோ, பந்தி பரிமாறுவதோ, வாயிற்காப்போன் வேலையோ, வெள்ளை அடிக்கிற தொழிலோ-அது உள்ளே புகுந்துவிட்டால் அற்புதம் என்று பலரை சொல்ல வைக்க வேண்டும். அவனை நம்பலாம் என்ற பாராட்டைப் பெற வேண்டும். விருப்பத்தோடு வேலை செய்வதுதான் வெற்றியின் முதல் படி.

கல்யாண சமையல் கண்டிராக்டர் ஒருவர் சென்னையில் இருக்கிறார். சில கோடிகளுக்கு அவர் இப்போது அதிபதி. சமையல் எனக்கு பரம்பரைத் தொழில் அல்ல. அடுத்த போர்ஷனில் உள்ள ஒருவர் மைசூர்பாகு கிளறி விற்றுக்கொண்டிருந்தார். காலையில் தின்பண்டம் செய்து முடித்துவிட்டு, மாலையில் பெரிய கடாயைத் தேய்ப்பார். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த நான், அவர் பெரிய கடாயைத் தேய்ப்பதைப் பார்த்து நானும் சுத்தம் செய்ய ஆசைப்பட்டேன். கடாயின் உட்பகுதி வெள்ளை வெளேர் என்று மாறும் வரை செங்கற்பொடியால் தேய்த்துக் கொடுத்தேன். அந்த மனிதர் எனக்கு மைசூர்பாகு செய்ய சொல்லிக் கொடுத்தார். மிகக் கவனமாக அதைச் செய்வேன்.

விதிவசத்தால் என் உறவுகள் என்னை வீட்டை விட்டு துரத்தியபோது, பட்சணக் கரண்டி தான் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. வியர்வை பொங்க அடுப்புக்கெதிரே உட்கார்ந்து நூறு பேருக்கு சமைப்பது ஒரு சுகம். வாலிப வயதில் சம்பளம் தந்தாலும், தராது போனாலும் சமையல் காண்டிராக்டர்களோடு சமைக்கப் போய் விடுவேன். விருந்து சமைக்காத நாள் வெறும் நாள்.

கல்யாண ‘டென்ஷன்கள்’ இல்லாத நாள் கொஞ்சம் கஷ்டமான நாள். ‘டென்ஷன்’ தான் சுகம். பரபரப்பு தான் சந்தோஷம். பிரச்சனைகள் தான் பலம். பிறர் பாராட்டே ஆசிர்வாதம், தங்கப்பதக்கம்.

இடித்துரைத்தால் துடித்துப் போய்விடுவேன். இது இயல்பாகி விட்டது. வேலை சுத்தம் தான் வெள்ளை உடுப்பு போன்ற கவுரவம்.

‘யாருய்யா சமையல்... நல்லா இருந்துதே? என்று பேசியபடியே கை கழுவ போவார்கள். காதும்,நெஞ்சும் குளிரும். அறிமுகப்படுத்திக் கொள்ளத் தோன்றாது. ஒரு இடத்தில் கொடி பறந்தால், பத்து இடத்திலிருந்து அழைப்பு வருவது நிச்சயம்.

இந்தியாவில் காசு சம்பாதிப்பது எளிது, நல்ல உழைப்பிற்கு மரியாதை அதிகம். ஒரு இடத்திலும் அலட்சியமில்லாமல் இருக்கின்ற புத்தி, இறைவன் கொடுக்கின்ற வரம். இது பிறவியிலேயே வரவேண்டும். இதைப் பெரிதாய் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். ஓய்வை உள்ளே நுழையவிட்டால், சோம்பலும் வரும். அடுத்த வேலை தான் ஓய்வு. இன்னொரு சவால் தான் இன்னொரு தினம்.

எனக்கு நான்கு மணி நேரத்தூக்கம் போதும். புத்தி சுறுசுறுப்பாகி விடும். சோம்பலற்று இருக்க பிரச்சனைகள் சந்திப்பது நல்லது. ஒரே நாளில் மூன்று கல்யாணங்கள் ஒத்துக் கொள்வதும் .நாலைந்து விருந்துகள் ஏற்பாடு செய்வதும் எனக்கு குதூகலமான விஷயம் என்பார்.

இம்மாதிரி வேலை பளு நினைவாற்றலை உசுப்பி விடும். நல்ல நினைவாற்றல் உங்களைத் தூங்கவிடாது. அலாரமில்லாமல் எழுந்திருக்க வைத்து விடும். அலாரம் அடித்த பிறகும் தூங்குவது என்பது நோயுற்றவர்களுக்கே ஏற்படும். சோம்பல் ஒரு நோய்.

அவருடைய சமையல் சுவை, பந்தி விசாரணை, கட்டுசாதக்கூடை, பருப்புத் தேங்காய் உட்பட பட்சணப்பை, தாம்பூலப் பரிசு சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றவை.

அடுத்த வீட்டுக்காரருக்கு உதவியாக பட்சணக்கடாய் தேய்த்துக் கழுவிய அவர், இன்று சுபமாக இருப்பதற்கு சோம்பல் என்ற சொல்லே அவரது அகராதியில் இல்லாததே காரணம். வாழ்க்கையில் வசதிகள் வந்த பிறகும்.ஓய்வு நாடாத உழைப்பு தான் காரணம்.

சோம்பலை எதிர்க்க என்ன வழி?

குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். உறக்கம் வரவழைக்காது. உறங்கும் போது உறக்கத்தை விரும்பாமல், எழுந்தும் செய்யவேண்டிய வேலைகளை நினைத்துக் கொண்டு தூங்குவது நல்லது.

தூக்கம் கலைந்த பிறகு தூக்கம் தொடருவது பேராபத்து, ‘கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேன்’ என்று சொல்வது கேவலம். மூளையிலிருந்து உறக்கம் கலைந்த மறுநிமிடம், எழுந்துவிட வேண்டும். பல் தேய்க்க நீர்பட்டவுடன் புத்தி சுறுசுறுப்பாகி விட வேண்டும். முதல் வேலையான பல் தேய்த்தலை முழு முனைப்போடு செய்ய வேண்டும்.

அடுத்த வேலையான முகம் கழுவுவதும். தேநீர் அருந்துதலும், செய்திதாள் வாசித்தலும் கூடுதலான கவனத்தோடு செய்யப்பட வேண்டும். எழுந்ததும் முதல் அரை மணியை சோம்பலோடு கழித்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகம் குறைந்தபடிதான் காணப்படும்.

நுரையீரல் முழுவதும் காற்றை உள்ளிழுத்து செய்கின்ற யோகாசன உடற்பயிற்சிகள் சோம்பலை விரட்ட உதவும். புத்திக்குள் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். குறைவாக உண்ணுதல் போல் குறைவாக பேசுதலும் அயர்ச்சிக்கு எதிரானது. உரக்கக் கத்தி ஆரவாரிக்கிற போது, சக்தி சிதறல் அதிகரிக்கிறது. இதனால் உடம்பு துவண்டுபோகிறது.

ஆனால் மூளையில் அலட்டல் மிச்சமிருக்கிறது. அந்த அலட்டல்-கனவாக உங்களை அலைக்கழிக்கும். நல்ல தூக்கம் இல்லாது போகும். பேச்சு குறைத்தால்,நன்கு தூங்கலாம். நல்ல தூக்கம், நாலு மணி நேரம் போதும்.

‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிருஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்’. என்று பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று உண்டு . இது அர்த்தம் பொதிந்தது.

அநியாயமாய் ஏகத்துக்கும் தூங்குபவரை கேலி செய்வது.

தூக்கம் ஒரு மருந்து, அது,அளவு தாண்டக்கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும்,எப்போதும் பாட்டு கேட்பதும் தூக்கம் கவிழ்க்கும்.பொழுதுபோக்கு என்பது பிழைப்புக்கான வேலையாக இருந்தால், அதாவது வேலையே பொழுதுபோக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.

பொழுதுபோக்கிற்கான சினிமா நாடக,இசை,இலக்கியம் போன்றவற்றின் மேன்மக்கள் அந்த பொழுதுபோக்கிற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஊண் உறக்கமின்றி அலைகிறார்கள். உழைப்புதான் பிரபலமாவதற்கு ஓரே வழி. அதிருஷ்டத்தில் உயர்ந்தாலும், உழைப்பே நிலையான மரியாதையைத் தரும்.


No comments:

Post a Comment