Wednesday, 8 February 2012

பொன்னியா? ... காவிரியா?...



எனது நண்பன் கூறிய சிறு கதை...

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் பொன்னி நான் பிறந்தது ரொம்ப பெரிய இடத்திலங்க எனக்கு எங்கூர்ல இருந்து 320 கி.மீட்டர் தள்ளி இருக்குற வேற இனத்தை சேர்ந்த ஊர்க்காரன் மேல காதல் வந்துடுச்சு அதனால ஓடி வந்துட்டேங்க..எங்க ஊரை விட இங்க என்னோட புகுந்த வீட்டுக்காரங்களும் அந்த ஊர் சனங்களும் என்னைய அன்பா கவனிச்சுகிட்டாங்க..ரொம்ப பாசமானவங்க நானும் அவங்களை அதே பாசத்தோட ரொம்பவும் சந்தோஷமா வச்சுட்டேங்க அதனால என்னைய அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு கோவில் கட்டாத குறையா என்னைய அன்போட பாத்துகிட்டாங்க....

நான் இங்க ஓடிவந்தது என்னோட பிறந்த வீட்டுக்காரவங்களுக்கும்,என்னோட இனத்துக்கும் பிடிக்கலை நான் இங்க வந்ததுல இருந்து அவங்க செலவம் குறைய ஆரம்பிச்சுடுச்சுன்னு பொலம்பினாங்க இதுக்காக என்னைய எப்படியாவது அவங்களோட மட்டுமே வச்சுக்கிடணும்ன்னு நினைச்சாங்க எங்க பிறந்த வீட்டு பெரியவனுங்க ரெண்டுபேரும் எப்பவும் அடிச்சுக்குவானுங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது ஆனா என்னைய அவனுகளோட அவங்க வீட்லயே வச்சுகிடணும்ன்றதுல ரெண்டுபேரும் ஒரே குறிக்கோளா திரியுறானுங்கன்னா பாத்துக்கோங்க என் மேல எம்புட்டு பாசம் வச்சுருக்கானுங்கன்னு.....

எனக்கும் என்னோட புகுந்த வீட்டுக்காரங்க ஏன் என் மேல இவ்ளோ பாசம் வச்சுருக்கானுங்கன்னு தெரியலை ஆனா ஏதோ காரணம் இருக்குன்னு தெரிஞ்சுச்சு கொஞ்ச நாள் கழிச்சு அதுவும் தெரிஞ்சுச்சு இங்க நான் வந்த பிறகு இவங்களோட செல்வமும் கணிசமா சுபிட்சமாயி இருக்கு அதனாலதான் என் மேல ரொம்ப ரொம்ப அன்பா இருக்குறானுங்கன்னு தெரிஞ்சுட்டேன்..நான் ஒரு நாள் என் புகுந்த வீட்டுக்காரவங்க கிட்ட என் பொறந்த வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னேங்க முடியாதுன்னுட்டாங்க அவங்க .. நானும் சொல்லி சொல்லி பார்த்தேன் கேட்கலை விட்டா ஓடிடுவேன்னு என்னைய ஒரு பெரிய பாசக்கார இடத்துல வச்சு கட்டிப்போட்டானுங்க...இது தெரிஞ்ச என் பொறந்த வீட்டுக்காரவங்க புகுந்த வீட்டுக்காரவங்க மேல கோர்ட்ல கேஸ் போட்டுட்டாங்கங்க...

இன்னும் கேஸ் முடியலைங்க ரெண்டு வீட்டுக்காரய்ங்களும் ரொம்ப செல்வாக்கானவங்களா இருக்குறதால ரொம்ப நாளா இந்த கேஸ் நடந்துட்டு இருக்குங்க இன்னும் முடிஞ்ச பாடு இல்ல...எனக்கும் என்னோட புகுந்த வீடு மேல கோபம் இருந்தாலும் அந்த ஊர்க்காரவங்க என்மேல மரியாதை வச்சுருந்ததுனால எனக்கு பிடிச்சப்போ மட்டும் போய் பார்த்துட்டு வர்றது உண்டு கொஞ்ச நாள்மட்டும் தான் பிறகு இங்கயே இருந்திடுவேன்...ஆனா எங்க புகுந்த வீட்டு இனத்துக்காரங்க என்னோட பொறந்த ஊர்லயும் கொஞ்சம் பேர் இருக்காங்க..பொழைக்க வந்தவங்க போல பாவம் என்னோட புகுந்த வீட்டுக்காரவங்க செய்த தப்புக்கு அந்த ஊர்ல பொறந்தவங்களும் சேர்த்து தண்டனை அனுபவிக்கிறாங்க நிறைய பேரோட உசிரே போயிடுச்சு...அந்த அளவுக்கு என் பொறந்த வீட்டுக்க்ரவனுங்க கோபக்காரனுங்களா இருந்தாலும் மூளையில்லாத பசங்க, என் புகுந்த வீட்டுக்கார பசங்களுக்கு அறிவு ஜாஸ்தின்றதாலதான் இங்க வேலைக்கு வச்சுருக்கானுங்க...

கொஞ்ச நாள் மட்டுமே வந்து போறதாலும் என்னோட புகுந்த வீட்டு செல்வம் குறைஞ்சு போச்சுனதும் புகுந்த வீட்ட சேர்ந்த பெரியவர் உண்ணாவிரதமே இருந்தார்ன்னா பாத்துக்கங்க ... எனக்கும் புகுந்த வீட்டுக்கு போன பொறவு பிறந்த வீட்லயே இருக்குறது தப்புன்னு தெரியுது..இப்போ எனக்கு ஒரே குழப்பமா இருக்குங்க நான் புகுந்த வீட்லயே இருந்திடறதா இல்லை பொறந்த வீட்டுக்கே போயிடறதான்னு...நீங்களே ஒரு முடிவை சொல்லுங்க கோர்ட் இப்போதைக்கு தீர்ப்பு சொல்லபோறதில்லை..பாவம் என் புகுந்த வீட்டுகாரவங்களும் அந்த ஊர் சனங்களும் என்னோட பாசம் கிடைக்காம தவிச்சுபோய் கிடக்காங்க....

காவிரிக்கு பொன்னின்ற பெயரும் இருக்குன்னு உங்களுக்கு சொல்லணுமா என்ன?

உங்களது கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்....
          

No comments:

Post a Comment