'நோயை வெல்லும் உணவு'
18 /01 /2012
முன்னுரை : எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது பழமொழி. எவ்வளவு
உழைத்தாலும் எல்லாமே ஒரு சாண் வயத்துக்குதான் என்பது எளிமையானவர்களின் வாய்மொழி. இரைப்பையின் அளவு அதிகபட்சமாக 1.5 லிட்டர் உணவு கொள்ளும். குடல் 7.5 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருக்கிறது. வயிறு என்பது இவை இரண்டும் அடங்கியது.
ஒரு நாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் – ஒரு நாளும்
என் நோய் அறியாய், இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
- ஒளவையார்.
வயிற்றுக்காகத்தான் உலகின் எல்லா ஜீவராசிகளும் உழைப்பது. வயிறு என்ற வார்த்தையை
பேச்சு வழக்கில் நாம் சிறுகுடல், பெருங்குடல் இவைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக
குறிப்பிட உபயோகிக்கிறோம்.
”பந்தியில் நின்றாய் முந்தி
பரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி
-புதுப்பாடல்
ஆரோக்கியம் தரும் உணவு
ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது உடல்நலம் காப்பதற்கு அவசியமாகிறது.
பசிக்கும் போது உண்ணாமல் இருக்கக்கூடாது. ஆனால் பசிக்காமல் உண்ணவே கூடாது.
அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். வாயில்
சுரக்கும் உமிழ்நீர் உணவில் கலக்க அவகாசம் கொடுக்க வேண்டும். மனக்கவலையைப்
போக்குவதற்காக உண்ணாதீர்கள். அதுவே பழக்கமாகிவிடும்.
மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் மனதை சமாளிக்க இசையைக் கேட்கலாம். ஒரு நல்ல புத்தகம்
வாசிக்கலாம். ஏன் ஒரு மணி நேரம் நடக்கலாம். அதை விடுத்து அதிகமாக சாப்பிட்டு கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒருபோதும் ஒளிந்து கொள்ளக் கூடாது.
பழம் அல்லது பழரசத்தை சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். ஒரேயடியாக சாப்பிட்டால் பழரசம் வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தி தீமை விளைவிக்கிறது. சிறிது சிறிதாக சாப்பிடுவதால் வயிற்றில் காரத்தன்மையை ஏற்படுத்தி நன்மையை விளைவிக்கிறது.
தட்டில் வைத்துவிட்டார்களே என்பதற்காக அனைத்தையும் உண்ண வேண்டிய அவசியம் இல்லை.
உணவு அதிகம் என்றால் மீதி வைக்கத் தயங்குபவர்கள் இலையில் பரிமாறும்போதே
தவிர்த்துவிடலாம். உணவை வீணாக்கக்கூடாதுதான். ஆனால் வயிறு குப்பைத்தொட்டி
அல்லவே. தேவையற்றவைகளை திணிக்கவேண்டாமே.
குறைந்த அளவு உணவையே வாயில் இடவேண்டும். சாப்பிட்டுக்கொண்டே தண்ணீர்
குடிப்பது நல்லதல்ல. சாப்பிட்டு விட்டு சுமார் 30 நிமிடம் கழித்து தான்
தண்ணீர் குடிக்க வேண்டும். உணவோடு அருந்தும் நீர் ஜீரணிக்கத் தேவையான
அமிலங்களை நீர்த்துப் போகச் செய்யும். ஜீரணம் தடைபடும்.
தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துத் தட்டில் வைக்கக் கூடாது. உணவுப் பொருட்களை
தட்டில் மீதி வைத்து வீணடிப்பதும் தேசிய இழப்பு என்பதை நிச்சயமாக உணருங்கள்.
இது கூட ஒரு விதமான தேச துரோகம் தான்.
ஒரு நெல் மணியை உற்பத்தி செய்ய ஏழை விவசாயி எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்
என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு அரிசி உருவாக 4 டம்ளர் நீர்
தேவை படுவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
தற்போது உள்ள காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைக்கு நாமே காரணமாகலாமா?
தமிழ்நாட்டில் தண்ணீர் மட்டும் பெறும் பிரச்னையாய் உள்ளது ஏன்?
விவசாயிக்கு தேவையான பாசனநீர் கிடைக்காமல் போனதால் தானே!!!
உண்பது சுகமே, மறுப்பதற்கில்லை. ஆனால் உணவை ருசித்து அனுபவித்து உண்ண
வேண்டும். முழுக் கவனமும் உணவில் இருக்க வேண்டும். உண்ணும் போது கவனம் வேறு
பக்கம் திரும்பி விட்டால் உண்ட திருப்தி இருக்காது.
உண்ட திருப்தி ஏற்பட மேலும் அதிக உணவு உண்ண வேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு
வேளை உணவு உண்ணும்போதும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் செலவிட வேண்டும். அப்போது முழுக்கவனமும் உணவிலேயே இருக்க வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியை மூடி வைத்து விட்டுத்தான் சாப்பிட வேண்டும்.
வாயில் உள்ள உணவை வயிற்றுக்குள் செலுத்திய பின்னரே மீண்டும் வாய்க்கு உணவை
எடுத்துச் செல்ல வேண்டும்.பற்களால் நன்கு அரைத்து உணவை உண்ண வேண்டும். பற்களால் உணவு அரைக்கப்பட்டால்தான் ஜீரணம் முழுமை பெறும்.
ஒரு மருத்துவர் என்னிடம் கூறும்போது
“சோற்றைத் தண்ணீர் போல குடிக்க வேண்டும். தண்ணீரைச் சோறுபோல சாப்பிட வேண்டும்” என்றார்.
திட உணவைப் பற்களால் நன்கு அரைத்துத் திரவமாக மாற்றி உண்ண வேண்டும்.
தண்ணீராக இருந்தாலும் அதை ஒரேயடியாக குடித்து விடாமல்,
கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். நமது முன்னோர்கள் உணவைக்குடி: நீரை உண்
என்று எளிமையாக கூறினார்கள்.
காலையில் பழங்கள் மற்றும் பழச்சாற்றை உட்கொண்டு பின்னர் அரைமணி நேரம் கழித்து
திட உணவைச் சாப்பிட வேண்டும். மதிய உணவோடு அல்லது இரவு உணவோடு பழங்கள் உண்பதை
தவிர்த்துவிடுவது நல்லது. பழங்கள் இரைப்பையில் அரை மணி நேரத்திற்கு மேல்
தங்குவதில்லை. (திட உணவுகள் மூன்று மணி முதல் நான்கு மணிநேரம் வரை இரைப்பையில்
தங்குகின்றன). அவை நேராகச் சிறுகுடலுக்குச் சென்று ஜீரணமாகிறது.
வழக்கமாக நாம் உணவு உண்டவுடன் பழங்களைச் சாப்பிடு கிறோம். வீடுகளில் கூட உணவிற்கு
பின்தான் பழம். அப்படி உண்பதால் திட உணவால் தடையுறும் பழம் அங்கு நொதித்து
வாயுவை உருவாக்குகிறது. இதனால் ஜீரணம் தடைபடுகிறது.
நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த
நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது. அது மட்டுமல்லாமல்
மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த
செல்லுலோஸ் எனப்படும் நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும்
வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில்
எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது.
இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும்
செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும்.
மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான
சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த
குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது.
இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த
குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய்
என்று சொல்கிறோம். இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு,
அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும்
மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன.
பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது.
அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும். நல்ல தரம் உடைய,
இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
சமையல் அதிகநேரம் செய்யாமல், குறைவான நேரத்தில் சமையலை முடியுங்கள். அதிக
நேரம் அடுப்பில் சுட வைத்தால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை அழிந்து
விடும்.பழரசமாக மாற்றுவதை விட, பழங்களை நேரடியாக சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.
நோய் அணுகா விதி
கீரைகள் மலிவாகவும் எளிதாக கிடைக்கும் சத்துள்ள உணவு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
கீரையை உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். மனிதன் உண்ணக்கூடியதில்
ஏதாவது ஒரு பழத்தை தினமும் உண்ணுவது அவசியம். பழங்கள் எளிதில் ஜீரணமாகும்.
அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழங்களை உண்ணுவது நல்லது. பொதுவாக பழங்களை பகல்
1 மணிக்குள் சாப்பிடுங்கள். ஆப்பிள் இதற்கு விதிவிலக்கு. பழங்களை சாறு பிழிவதை
விட அப்படியே உண்பது நல்லது.
மலிவான ராகியால் ரத்தம் சுத்தமாகும், எலும்பு உறுதியடையும், மலச்சிக்கல்
நீங்கும். ராகியை சிறிது சிறிதாக உணவில் சேர்த்து கொண்டு வரலாம். கஞ்சியாகவோ,
களியாகவோ இதை தயாரிக்கலாம். பச்சை உணவு நாம் சாப்பிடும் காய்கறி, பழங்களில்
50 சதவிகிதம் பச்சையாக உண்ண வேண்டும்.
சமைப்பதில் பல காய்கறிகள் தங்கள் சத்தை இழக்கின்றன. வேக வைத்த,
சமைத்த காய்கறிகளை உண்பவர்கள் திடீரென்று பச்சை காய்கறிகளுக்கு
மாற வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக பச்சை காய்கறி உணவை பழக்கத்தில்
கொண்டு வர வேண்டும். இதனால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள்,
என்ஸைம்கள் எல்லாம் உடலுக்கு கிட்டும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போக்கி உணின் - குறள்
தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை
உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள். பசித்த பின்பே உணவருந்த வேண்டும்.
பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம்
தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.
நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக
அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது
என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது.
மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே
எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக..
“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு
நமது முன்னோர்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றி யோசிக்கையில் அன்றாட உணவுடன்,
கட்டாயமாக கூழ், இளநீர், பழைய சோற்றுத் தண்ணீர் மற்றும் இரவில் அரைவயிறுடனும்
உண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு உணவு வேளைக்குப் பிறகும்
கட்டாயம் இளஞ்சூட்டில் தண்ணீர் குடித்தார்கள்.
போலி மருத்துவர்கள்
"உலகெங்கும், உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறுவது இந்தியர்கள் அதிகமாக அசைவம்
உண்ண ஆரம்பித்ததால் தான்" என்று முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் கூறி பரபரப்பை
கிளப்பியதைப் போல, "பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பது இந்திய மக்கள் அதிகமாக
அசைவம் சாப்பிடுவதால் தான்" என்றும் ஏதாவதொரு நாட்டு அதிபர் கூற நேரிடலாம்.
குறைந்த ஆசைகள், குறைந்த தேவைகள், குறைந்த பிரச்சனைகள், தன்னம்பிக்கை, விடா
முயற்சி ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும்.
எந்த ஒரு புது முயற்சியும் ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். பல தடைகளும்
ஏற்படலாம். எனவே, நாம் மனம் தளராமல் விடா முயற்சியுடன் அதைத் தொடர்ந்தால்
நிறைவான பல நன்மைகளை அடைவோம். பழக்கம் வழக்கமாகி விடும்.
நோய் ஒன்றுதான் என்றால் யாரும் ஆச்சரியப்படுவார்கள். அனுபவத்தில் தலையிலும்,
மார்பிலும், வயிற்றிலும், கைகால்களிலும், ஏன் அங்க அவயவங்கள் அனைத்திலும் வலி
வந்து நம்மை வாட்டுவதை யார்தான் அறியார்? நோய்கள் பல என்பது தொன்றுதொட்டு
பாமரர் முதல் அறிஞர் வரை எவரும் அறிந்த உண்மை இதனை மறுத்து நோய் ஒன்றுதான்
என்பதன் பொருள் என்ன? நவீன மருத்துவம் உலகை ஏமாற்ற விரும்புகின்றனதா ?
அப்படி இல்லை அவர்கள் கூட காதில் வலி ஏற்பட்டால் அதைக் காதுவலி என்றும்
வயிற்று வலி ஏற்பட்டால் அதனை வயிற்று வலி என்றும் சொல்லுகின்றனர்.
உள்ளே உள்ள பொருள்கள் வாய்வழியாக வந்தால் அதை வாந்தி என்றும்,
மலவாய்வழியாக வந்தால் அதைக் கிராணி அல்லது பேதி என்றும்,
துன்பம் தோன்றும் இடம், இயல்பு முதலியவற்றை
ஒட்டிப் பெயரிட்டழைக்கின்றனர். பெயர்களே நோய்கள் அல்ல.
இயற்கை வாழ்வுக்கு அவ்வழியில் உடலில் தோன்றும் துன்பங்களைப்
போக்கிக் கொள்வதற்கும் நோய்நாடலும் இன்றியமையாதன
இதை உணர்ந்த பொய்யாமொழிப் புலவரும்
"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" - குறள்
வேண்டாத பொருள் தேங்கி நின்று நச்சுப் பொருள்களாக மாறி வெளியேறும் போது
துன்பம் தருகின்றன. இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் துன்பமே வலியே நோய்
எனப்படுவது.
நோயின் ஆரம்பம் / அறிகுறிகள்
ஒரே அடிமரத்தைக் கொண்ட மரத்தில் பல கிளைகளும் இலைகளும் பூக்களும் காய்கறிகளும்
இருப்பினும் மரம் ஒன்றேதான், அதுபோலவே உடலில் தோன்றும் நோய் ஒன்றதான்
என்றாலும் மனித உடம்பின் வெவ்வேறு பாகங்களான தலை, கழுத்து, மார்பு, வயிறு,
இடுப்புக்குழி, கை, கால், முதலியவற்றின் வாயிலாக வெளி வரும்போது பலவாகத்
தோற்றமளிக்கிறது.
நாடகங்களில் பல வேடங்களில் ஒருவர் தான் தரிக்கின்றார். ஒரே ஆள்
சமயத்திற்கு ஏற்றமாதிரி வேடந்தாங்கி நடிக்கின்றார். இருப்பினும் ஒரே ஆள்தான்
பலவேஷம் தரிக்கின்றார். என்பது அறிவாளிக்களுக்குத் தெரியும் சிறு குழந்தைகள்,
சாதாரண மக்கள் வெவ்வேறு ஆள் என்று நம்பி விடுகிறார்கள்.
நாடகத்தைப் பற்றி எவ்வித நம்பிக்கை கொண்டாலும் தீங்கு விளைவதில்லை.
ஆனால் நோயைப்பற்றியோ முதற்காரணத்தைக் காணாமல் வெளித்தோற்றத்திற்குச்
சிகிச்சை அளிப்பது பூரண குணத்தை கொடுப்பதில்லை. சில சமயங்களில் அரைக்குறைச்
சிகிச்சைகளால் நோய் மேலும் உள் தள்ளப்பட்டு நாட்பட்ட நோயாகவும,
சீரழிக்கும் நோயாகவும் பின்னர்அதிகத் தொந்தரவைக் கொடுக்கலாம்.
அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத்தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே
ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேர்வு செய்ய வேண்டும். குடும்ப நலம் பேணும்
தாய்மார்கள் சிறந்த உணவு உண்ண வேண்டும்.
வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகுந்த
சக்தி இழுப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இழந்த சக்தியை ஈடு செய்யவும், உடல் நலம்
பேணவும் தேவையான கலோரி சத்துள்ள உணவைக் கண்டறிந்து சாப்பிடுவது அவசியம்.
மக்களின் அறியாமை
மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800 லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படுகிறது.
இதனை அடைவதற்குத் தக்க உணவை அறிந்து சாப்பிடுதல் மிகவும் அவசியம். தற்போது
வீட்டில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை விட கடைகளில் விற்பனை செய்யப்பட்டு
வரும் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றையே மக்கள் பெரிதும்
விரும்புகின்றனர்.
ஒரு முன்னணி குளிர்பான நிறுவனம் ஒரு வருடத்திற்கு 25 பில்லியன் ( 1 பில்லியன் - 1,000,000,000 )அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மற்றொரு அமெரிக்க அசைவ உணவு நிறுவனம் ஒன்று ஒரு வருடத்திற்கு 16 பில்லியன் டாலர்கள் லாபம் பார்க்கிறார்கள். அவர்கள் நோயை ஏற்றுமதி செய்கிறார்கள்.நாம் அவர்களிடம் இருந்து மருந்துகளையும் புதிய நோய்களையும் இறக்குமதி செய்து நமது அன்னிய செலாவணியை
பில்லியன் டாலர்கள் கணக்கில் இழந்து மேலும் மேலும் வருவாய் இழப்பை எதிர்கொள்கிறோம். நமது நாடும் ஏழை நாடாகி கொண்டிருக்கிறது
இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் அளவுக்கதிகமான நிறமூட்டும்
இரசாயனப் பதார்த்தங்கள், உணவு பழுதடையாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனப்
பதார்த்தங்கள் நமது உடலில் உட்புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நோய்த் தாக்கத்தையே
உண்டு பண்ணி வருகின்றன.
நிறமூட்டும் இரசாயனப் பதார்த்தங்கள், உணவு பழுதடையாமல்
சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஆகியவற்றால் புற்றுநோய், சிறுநீரகக்
கோளாறு, சலரோகம், கொலஸ்ரோல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே, இவ்வாறான உணவுப் பொருள்களை தவிர்த்து ஓரளவுக்கேனும் இயற்கையுடன்
ஒட்டியதான உணவுப் பொருள்களை உண்டு வாழ்ந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
ஒருவர் மற்றொருவரைக் காணும்பொழுது ‘நலமா?’ என்று கேட்கின்றோம். அவரும் நலமே
என்று பதில் அளிக்கிறார். தன் பொருள் என்ன? மனிதனுக்கு பருஉடல், நுண்ணுடல்,
காரண உடல் என்ற மூன்று உடல்கள் இருக்கின்றன.
நமது புறக்கண்ணிற்குத் தோன்றுவது பருஉடல் ஒன்றேதான். எனினும் இப்பரு உடலின்
உள்ளும் புறமுமாக மற்ற இரு உடல்களும் சுரந்தும் மறைந்தும் இருக்கின்றன என்பது
சிந்திப்பவர்களுக்கு இலகுவில் புலப்படும் இந்த மூன்று உடல்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி,
ஒரேவழி உராய்தலின்றி இயங்குவதிலே நலவாழ்வு அமைந்துள்ளது.
நல்வாழ்வை ஆரோக்கியம் என்றும் சுகம் என்றும் கூறுகின்றோம். ஆரோக்கியம் தான்
ஆக்க வாழ்விற்கு அடிப்படையானது. நலமற்ற விவசாயி தனக்கு வேறு எத்தனை
வசதிகளிருப்பினும் விளைவைப் பெருக்க முடியாது. எத்தனை நவீன இயந்திரங்கள்
இருந்தபோதிலும் நலமில்லாத உழைப்பாளியால் தொழில் துறையில் நுகர்வுப் பொருள்களை
அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாது.
விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சி இருந்தபோதிலும் நலம் இல்லையேல்
நம்மால் வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பது இயலாததாகும்.
குடும்ப சமூக வாழ்க்கைகளையும் கூட செவ்வனே நடத்த முடியாது.
ஆரோக்கியமான வாழ்வு
பொதுவாக, நோயின்மையே ஆரோக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால்
ஆரோக்கியத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு அகலம், நீளம்,
உயரம் என்ற மூன்று பக்கங்கள் இருப்பது போல ஆரோக்கியத்திற்கு உடல், மனம்,
சமூகம் என்ற மூன்று பக்கங்கள் உண்டு.
உடற்குறைமனதைப் பாதிக்கும். மன நிலையும் உடலைப் பாதிக்கவே செய்யும்.
சமூகச்சூழல் இரண்டை பாதிக்கும். இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதுபோலவே ஆன்ம உணர்வும், உடலையும், மனதையும் மாற்றவல்லது.
மனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க எண்ணி அரசுகள் மருந்தகங்களைப் பெரும் செலவில்
நடத்துகின்றன. ஆனால் மனக்குறைவின் காரணமாகவும், சமூகச் சூழலின் போக்குகளாலும்
மனிதனுக்கு சுகக் குறைவு ஏற்படுகிறது. சுகக்குறைவை நோயென நினைத்து ஒருவன்
மருந்தகங்களுக்குச் சென்றால் பல பரிசோதனைகளுக்குப் பின்னால் உடலும்,
உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால்
பாவம்! அவன் என்ன செய்வான்?
சோர்வும், பிணிநிலையும் அவனை வருத்துகின்றன. எல்லாம் சரியாய் இருக்கிறது.
ஆனால் உடலால் உழைக்க முடியவில்லையே என்று வருந்துகின்றான். நவீன முறைகளில்
இதனை மனநோய் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் இந்த மனநோய் உடலையும்
சமூக வாழ்வையும் கூடப் பாதிக்கும். மனதிலே ஆரம்பித்தது இருதயநோயாக மாறுகிறது.
மனநோய் நகர வாழ்வில் நாம் நாள்தோறும் காணும் உண்மை ஏதாவது ஒரு காரணத்தால்
கோபம் உண்டாகிறது. இது மனதிலேதான் ஆரம்பிக்கிறது. முகம் சிவப்பதும்,
நாடி நரம்புகள் துடிதுடிப்பதும், நிலை தடுமாறி தாறுமாறாகப் பேசுவதும் கோபத்தின் விளைவுகளாகும்.
அது இதற்கு மேலும் சென்று எதிரில் உள்ளவர்களைக் கையிற் கிடைத்ததைக் கொண்டு
அடித்து விபரீதமாகக் கொலையில் முடிவதைக்கூட நாம் கேட்டுள்ளோம். கோபத்தில் பித்தநீர்
அமிலத்தன்மை அடைந்து உடல் அழற்சியினை ஏற்படுத்துகின்றது. அதனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.திடீரென ஏற்படும் பயம், சிலசமயங்களில் இதயத் துடிப்பை நிறுத்தும் பயத்தால் உடம்பு நடுக்குறும். உணர்ச்சி மிகும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படும். குருதியில் சர்க்கரையின் அளவுமிகுந்து ஏற்கனவே நீரழிவு
நோயுள்ளவர்களாயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பயத்தால் வயிற்றோட்டம்
உண்டாகலாம்.
சிறுவர்கள் பயமுறுத்தலுக்கு ஆளாகும்போது நடுநடுங்கி, நரம்பு
தளர்ந்து சிறுநீர் கழிக்கின்றனர். எதிர்மறையான வெறுப்பு, திகைப்பு, பயம்
போன்றவை உடலை உலரச்செய்து, குருதி குன்றி பலத்தை போலவே அன்பு, ஆதரவு,
நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்லுணர்வுகள் உடலை வளர்த்து இன்ப வாழ்வைக்
கொடுக்கும்.
வயிறு படுத்தும் பாடு
சுகம் பிறரால் கொடுபடக்கூடியதல்ல. அதனை நாமேதான் சம்பாதித்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு வேண்டியவை எல்லாம் சுயஅறிவும், சரியான வழி நடத்தலுமேயாகும். தன்னுடைய
சூழலுடன் இணைந்து வாழும் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடனும், நலமுடனும்
இருக்க முடியும். மாறிவரும் சமூக வாழ்வு மக்களின் உடல், மனவாழ்வினைப்
பாதிப்பதைப் போலவே மக்களின் உடல் மனவாழ்வு சூழலையும் பாதிக்கும் இன்றைய
மாறிவரும் தொழில் நுணுக்க வளர்ச்சி தனி வாழ்வையும், இல்வாழ்க்கையையும் பெரிய
அளவில் மாற்றி உள்ளது.
இயந்திரங்களால் கடின உழைப்பை நீக்கிக்கொள்ள வசதியும்
ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் பார்த்தையே பார்த்தும், செய்ததையே செய்தும்
சலிப்படைந்து போயிருக்கிறார்கள். கூடிவிளையாடும் ஆடல், பாடல்களும்,
கூத்துகளும், திருவிழாக்களும் சிலரது வாழ்வில் புத்துணர்வு அளித்து
மகிழ்ச்சியூட்டுகின்றனவாயினும், நவீன வாழ்க்கை முறை எதிர்பாராத புத்தம் புதிய
நோய்நொடிகளையும் உண்டு பண்ணி மனிதனை வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாக ஆக்கியுள்ளன.
நலவாழ்வைப் பாதிப்பவைகளை 1. பரம்பரை, 2. சூழ்நிலை, 3. தனியாள் என்று மூன்று
விதமாகப் பிரிக்கலாம். பரம்பரையிலிருந்து பெறுகிற நோய்நொடிகள், எண்ணப்
போக்குகள் முதலியன உடலைப் பாதிக்கும் சூழ்நிலையும் மனித வாழ்வைப் பாதிக்கிறது.
கெட்ட காற்று, கெட்ட தண்ணீர் போன்றவை இன்றைய நிலையில் மனிதனுடைய
ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் முக்கிய இடம் பெறுகின்றன.
தனிப்பட்டவர்களும், தங்களுடைய வேண்டாத பழக்க வழக்கங்களால் தமக்கும் சமூகத்திலுள்ள
மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பவர்களாக மாறுகின்றனர். இதைப்போலவே நலவாழ்வை நிர்ணயிப்பவைகளையும் மனநிலை, ஆன்மநிலை, உடல்நிலை என்று முக்கூறாகப் பிரிக்கலாம். இம்மூன்று நிலைகளையும் செம்மைப்படுத்துவது கல்வி,
கேள்விகளேயாகும்.
முடிவுரை: நமது மக்கள மீது கொண்ட அக்கரையால் சென்னை ராஜுவ் காந்தி இரைப்பை-குடல் அறுவை சிகிச்சை துறை 'நோயை வெல்லும் உணவு' என்ற தலைப்பில் இந்த கட்டுரையின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவது பாராட்டுக்கு உரியதாகும். அரிய வாய்ப்பினை நல்கிய சென்னை மருத்துவக்கல்லூரி டாக்டர். கனகசபை அவர்களுக்கும் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர். சந்திரமோகன் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment