Total Pageviews

Sunday, 4 March 2012

வேராகும் கல்வியை வீழ்த்தலாமா?


வல்லரசின் இலக்கணங்களில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுவது, கல்விதான். உலகளவில் ஒப்பிடும்போது, அதிகமான மாணவ பருவத்தினரைக் கொண்ட நாடுகளில் இந்தியா, நான்காமிடத்தையும், உலக மனித வளத்தில் இரண்டாவது பெரிய நாடு என்ற இடத்தையும் பெற்றுள்ளது. ஆனால், தனிமனித முன்னேற்றத்தைப் பார்க்கும் போது, இந்தியா மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. 63 ஆண்டுகால குடியரசில், இத்தகையதொரு நிலை இருந்து வருவதற்குக் காரணம் என்ன?

கல்வி என்பதை, அடிப்படை உரிமையாக்காமல் தாமதப்படுத்தியதன் விளைவு தான்.மொத்த மக்கள் தொகையில், 30 கோடிக்கும் மேற்பட்ட மாணவ சமுதாயத்தைக் கொண்டுள்ளது நம் நாடு. கிராமங்கள் முதல், நகரங்கள் வரையில், பள்ளிகள் எப்படி இருந்தாலும், எங்கிருந்தாலும், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், தாமும் படிக்க வேண்டும் என்ற எண்ணம், பரவலாகவே மக்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாகவே எதிர்பார்த்ததை காட்டிலும், சற்று அதிகமாகவே எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் படி, நம் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, 77.84 கோடியாக உள்ளது.

இதில், ஆண்களின் எண்ணிக்கை, 44.42 சதவீதமாகவும், பெண்களின் எண்ணிக்கை, 33.42 சதவீதமாகவும் உள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், காலங்காலமாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாத நம் சமூகத்தில், தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது தான். கடந்த பத்தாண்டுகளில், எழுத்தறிவு பெற்ற ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "2015ம் ஆண்டில் தான், இந்தியா, 72 சதவீத எழுத்தறிவை எட்ட முடியும்' என, சர்வதேச அமைப்புகள் கூறின. ஆனால், 2011ம் ஆண்டிலேயே, 74.4 சதவீத எழுத்தறிவை எட்டியிருக்கிறோம். அதே நேரத்தில், ஆரம்பக்கல்வியே கிடைக்காத, அதாவது, பள்ளிகளை எட்டிப்பிடிக்காத நிலையில், 75 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நம் நாட்டில் உள்ளனர்.

மாநில அரசுகள் அனைத்து குழந்தைகளுக்கும், ஆரம்பக்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், நம் நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லாத எண்ணற்ற கிராமங்கள் இருக்கின்றன. இத்தகைய கிராமங்களில் வாழ்பவர்களின் நிலை எப்படி இருக்கும்?போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களில், அடிப்படை வசதிகளற்ற குக்கிராமங்களில், பாதை வசதியே இல்லாத, மலை கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள், பள்ளி செல்வதில்லை என்பது தானே உண்மை நிலை.அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான், அடுப்பெரியும் என்ற நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தியாவில் முழுமையாக எழுத்தறிவைப் பெற்ற மாநிலம் என்ற பெருமையை கேரளா தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் ஆரம்பப் பள்ளிகளைப் பரவலாக அமைத்தது தான் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே, திருவாங்கூர் பகுதியில் மட்டும், 255 அரசு பள்ளிகளும், 1,388 தனியார் (அரசு உதவி பெற்ற) பள்ளிகளும் இருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆயினும், அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிப்பதில் இன்னும் அலட்சியப் போக்கே நிலவுகிறது. இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, இலவச பஸ்பாஸ், தமிழ் வழியில் பயின்றால் சலுகைகள் என்பது போன்ற சலுகைகள், எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இச்சலுகைகள், பள்ளிக்கல்வியில் மாணவர்கள் இடைநிற்றலைப் போக்கிட அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் என்றாலும், இன்னும் இடைநிற்றல் தொடர்ந்து, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை எட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. உலகளவில் மக்கள் தொகையில் முதலிடத்தைப் பெற்றுள்ள சீனா, சமூக வளர்ச்சியில் இந்தியாவை மிஞ்சிவிட்டது. சமூக வளர்ச்சியில் சீனாவை விட, பல நாடுகள் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் துரதிர்ஷ்டம் அப்படிப் பின்தங்கிய பல ஆசிய நாடுகளை விடவும், மேலும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது.

"சீனத்தில் கல்வியும், சுகாதாரமும் இந்தியாவை விட, பலமடங்கு மேம்பட்டிருப்பதற்குக் காரணம், அரசு இவ்விரு துறைகளில் நேரடியாக அதிக நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி திட்டங்களை அமல்செய்வது தான். ஆரம்பக் கல்வியைப் பொறுத்தமட்டில், பின்தங்கிய நிலைக்கு மத்திய, மாநில அரசுகளின் போக்கும் இருந்து வருகிறது. இந்தியாவில் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும், கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவில், அந்த அதிகரிப்பு இருப்பதில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் தொகை, போதுமானதாக இருப்பதில்லை.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக ஆகும்வரை, அதன் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் போன்று இரு மடங்கு கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என, உலகப் பொருளாதார வல்லுனர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பார்த்தோமானால், 1964ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 3 சதவீதமாக இருந்தபோது, 6 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என, கோத்தாரி குழு பரிந்துரைத்தது. இன்று, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதமாக உள்ளது. அப்படியெனில், கல்விக்கு, 16 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், ஒதுக்கீடு 3.75 சதவீதம் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தியாவில் அனைவருக்கும் தொடக்கக்கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட்டு வரும்போதும் மாணவ, மாணவியர் சேர்ப்பு விகிதம், 98.1என்ற அளவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில், இது மிகப்பெரிய சாதனையாகவோ, அளவீடாகவோ தெரியலாம். ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிக்குறைந்த அளவே.அரசு பள்ளிகளில் பெரும்பாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகளே படிக்கின்றனர். அதிகப்படியான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், அவர்களுக்கான கட்டடங்கள், குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருகிறது. இடைநிற்றலைப் போக்கிடும் வகையில், அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால், அது கிராமத்தில் உள்ளவர்களைச் சென்றடைகிறதா எனில், இல்லை. ஆண்டுதோறும், மேற்கொள்ளப்படும் இடைநிற்றல் சிறார்கள் பற்றிய கணக்கெடுப்பும், முறையாக நடப்பதில்லை. ஏதோ பெயரளவிற்கு நடத்தப்பட்டு ஏராளமான, இடைநிற்றல் சிறார்கள் இருந்தாலும், எவருமே இல்லை என, அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்திற்கு உண்டு. ஆனால், அதிகப்படியான பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழகம் இல்லாத நிலையே உள்ளது. இருக்கின்ற பள்ளிகளிலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தலையீடு அதிகமாகவே உள்ளது.தமிழக அரசின், 2011 -12 ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையில், "அனைத்து குழந்தைகளையும், பள்ளியில் சேர்த்து தொடர்ந்து, 100 சதவீதம் தொடக்கக் கல்வி பெற வழிவகை செய்வதே இந்த அரசின் நோக்கம் எனவும், தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாமல், 56 ஆயிரத்து, 113 சிறார்கள் உள்ளனர்' என்றும், தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"ஆறு மாத பலனுக்கு நெல்லை நடுங்கள்; ஓராண்டு பலனுக்கு கரும்பை நடுங்கள்; நூறாண்டு பலனுக்கு கல்வியைக் கொடுங்கள்' என்பது வெற்று வார்த்தையல்ல என்பதை, ஆள்வோர் அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்வியில் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்காமல் அரசியல் உறுதி இருந்தால், அனைவருக்கும் கல்வி எட்டும் தூரத்தில் தான். இது அரசின் கடமையாக இருந்தாலும் கூட, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள், உள்ளாட்சி மற்றும் சமூக அமைப்புகள், பொதுமக்கள் அனைவருக்கும், பங்கிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment