Total Pageviews

Sunday, 18 March 2012

சாணக்கியன்


            ந்தப் புல்லும் உனக்கு ஒரு பகையா?

சிறைச்சாலையில் ஒரு தட்டுச் சோறு மட்டும் உள்ளே தரும் அளவுக்கு ஒரு சிறிய பொந்து செய்யப்பட்டிருந்தது.

அந்த ஒரு தட்டுச் சோற்றைக் கொண்டு பசியோடிருக்கும் அத்தனை பேராலும் தங்கள் பசியை அடக்க முடியவில்லை. ஆளுக்கொரு கவளம் மட்டுமே உண்ண முடிந்தது.

அதுபோல ஒரு சொம்புத் தண்ணீரைக் கொண்டு அத்தனை பேரும் தங்கள் நாவை மட்டுமே நனைத்துக் கொள்ள முடிந்தது.

பசியும் தாகமும் அடங்காமல் சிறையில் அடைக்கப்பட்ட அத்தனை பேரும் வருந்திய போது விசுவசேனனும் மனம் வேதனைப் பட்டான். தன்னுடைய மக்களைப் பார்த்து, ""ஒரு தட்டுச் சோற்றையும் ஒரு சொம்புத் தண்ணீரையும் கொண்டு நாம் அனைவரும் உயிர் வாழ முடியாது. நம்மை இந்த நிலவறையிலிட்டுக் கொல்லும் அரசனையும் அவனுடைய நந்த வம்சத்தையும் பூண்டோடு அழித்துப் பழிக்குப் பழி வாங்குவதற்கு நம்மில் யாராவது ஒருவர் உயிரோடு இருக்க வேண்டும்.

உங்களில் யார் அந்தத் திறமை உள்ள வனோ அவன் மட்டும் வயிறார உண்டு உயிரோடு இருக்கட்டும். மற்றவரெல்லாம் பசியோடிருந்து இறந்துவிடலாம்'' என்றான்.

விசுவசேனனின் மகன் சுபந்து சிறிது நேர யோசனைக்குப்பின், ""அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். அரச குடும்பத்தையும் அரசனையும் நானே பழிக் குப் பழி வாங்குகிறேன்'' என்று கூறினான்.

அன்றிலிருந்து சிறையின் அந்தப் பொந்து வழியே தரப்பட்ட ஒரு தட்டுச் சோற்றையும் ஒரு சொம்புத் தண்ணீரையும் விசுவசேன னின் மைந்தன் சுபந்துவே உட்கொண்டான்.

சிறையில் அவனுடன் இருந்த அத்தனை பேர்களும் ஒவ்வொருவராக பட்டினியில் மாண்டனர்.

சுபந்துவின் சிறை வாழ்க்கை மூன்று ஆண்டுகள் நீடித்த நிலையில் எதிரி நாட்ட வர்கள் பாடலிபுத்திரத்தின்மீது படையெடுக்கத் திட்டமிட்டு மகத நாட்டு எல்லைகளில் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.

மகத நாட்டு மன்னன் மகாபதுமன் பகைவர்களின் தொல்லைகளால் மிகவும் கலங்கிப் போனான். இச்சூழ்நிலையில் விசுவசேனன் போன்ற மதியூக மந்திரி தன்னுடன் இல்லையே என்று வருந்தினான்.

கடவுள் கிருபையால் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் விசுவசேனன் உயிரோடு இருந்தால் அவனை விடுவித்து திரும்பவும் அமைச்சராக்கிவிடலாம் என்று மகாபதுமன் எண்ணினான்.

சிறைச்சாலைக்கு ஆள் அனுப்பி இன்னும் அவர்களில் யாராவது உயிரோடு இருக்கிறார் களா என்று பார்த்து வரச் சொன்னான் மன்னன்.

விசுவசேனனின் மகன் சுபந்து மட்டும் உயிரோடு இருப்பதாக வந்து தெரிவித்தனர்.

அந்தக் கணமே சுபந்துவை சிறையிலிருந்து விடுதலை செய்து அமைச்சனாக்கினான் மன்னன். அவனுக்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் செய்து கொடுத்தான்.

சுபந்து தன் திறமையினால் மகத நாட்டு எல்லைகளில் தொல்லை கொடுத்தவர்களையும் படையெடுக்கத் துணிந்தவர் களையும் வெகு விரைவிலேயே அடக்கி விட்டான்.

இதே காலகட்டத்தில்தான் இந்திய வரலாற்றையே இன்றளவும் திரும்பிப் பார்க்க வைக்கும் அந்த நிகழ்வு நிகழ்ந்தது.

""உன் மகன் நான்கு கோரைப் பற்களுடன் பிறந்திருப்பதால், அரசனோ அல்லது அமைச்சனோ ஆகும் வாய்ப்பைப் பெற்று, நந்த வம்சத்து அரச மரபைப் பூண்டோடு அழித்துவிடுவான். இதில் எள்ளளவும் ஐயமில்லை. இது நடந்தே தீரும்.''

நிமித்தகன் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டு ஆடிப்போனான் சோமசருமன். என்ன செய்வான் அந்த ஏழை பிராமணன். மகத நாட்டிலிருந்த சால்மலி என்னும் பார்ப்பனச்சேரியில் வசிக்கும் சாமானியன். இவனுக்கும் இவனது மனைவி கபிலைக்கும் பிறந்த பிள்ளையைப் பார்த்துதான் அந்த நிமித்தகன் ஜாதகம் கூறினான்.

நான்கு கோரைப் பற்களுடன் பிறந்ததால் "சதுர்த்ரும்ஷ்- சாணக்கிய' என்ற அர்த்தத்தில் சாணக்கியன் என்று பெயரிட்டனர்.

நிமித்தகன் கூறியதைக் கேட்ட மாத்திரத் தில் மகத நாட்டுப் பிரஜைகளான அவர் களுக்கு இனி உயிருக்கு உத்தரவாத சிந்தனை ஏற்படுமா?

அந்த ஏழை பிராமணன் குழந்தை சாணக் கியனின் நான்கு கோரைப் பற்களையும் அரத் தால் இராவி சிறியவையாக மாற்றினான்.

நான்கு மறை, ஆறு அங்கம், பதினெட்டு அறநூல்கள், இலக்கணம், இலக்கியம், யாப்பு, அணி, நிகண்டு, சாலிகோத்திரம், மருத்துவம், நீதிநூல் ஆகியவற்றை சாணக்கியன் முறையாக ஆசிரியரிடம் கற்றான்.

ஜைன முனிவரிடம் அறநெறிகளையும் அருளுரைகளையும் கேட்டுத் தெளிந்தான் சாணக்கியன். ஒரு நாள் பாடலிபுத்திரத் திற்குச் சென்று கற்றோர் அவைகளிலும் அரசவையிலும் தன் புலமைத் திறத்தைக் காட்டி அனைவராலும் போற்றிப் புகழப்பட்டான்.

சாணக்கியனின் திறமையைக் கண்ட இரண்டாவது அமைச்சன் சகடாளன் தன் இரண்டாவது மகள் யசோமதியைச் சாணக்கியனுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

சாணக்கியன் ஒரு நாள் சோணை ஆற்றங் கரையில் செல்லும்போது தருப்பைப் புல்லின் முள் அவனது காலில் குத்தியது.

சாணக்கியனுக்கு அக்கணமே சினம் பொங்கியது. காலிலிருந்து அதைப் பிடுங்கி எறிந்தான்.

காலில் ரத்தம் வடிந்தது. அந்தத் தருப்பைப் புல் புதர் முழுவதையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டான்.

அமைச்சர் சுபந்து அச்சமயம் அவ்வழியே வந்தார். சாணக்கியரின் அச்செயலைப் பார்த்து நகைப்புடன், "இந்தப் புல்லும் உனக் கொரு பகையா?' என்று கேட்டார்.

அதற்கு சாணக்கியன் அளித்த பதில் அமைச்சர் சுபந்துவின் உள்ளத்தில் அதிரடியாகப் பாய்ந்தது.

""என் பகைவர் யாராயினும் அவர்களைப் பூண்டோடு அழித்தால் ஒழிய எனக்கு நிம்மதி ஏற்படாது.''

நந்த வம்சத்தை அழிக்க இத்தகைய நெஞ்சுரமும் வெறியும் கொண்டவனின் நட்புதான் தனக்குத் தேவை என்பதை அமைச்சர் சுபந்து அந்தக் கணமே உணர்ந்து கொண்டார்.

கோரைப் பற்களுடன் பிறந்த சாணக்கியன் நந்த வம்சத்தை அழிப்பான் என்ற நிமித்தகன் உரையையும் அறிந் திருந்ததால் அவருக்குள் ஒரு திட்டம் வரைபடமாகிக் கொண்டிருந்தது.

தன்னுடைய மனைவி நந்தமதியுடன் வறுமையில் வாடத் துவங்கிய சாணக்கியன், "வறுமையைவிடக் கொடியது உலகில் வேறு எதுவும் இல்லை' என்று புலம்பினான்.

"வறுமை வந்தால் யாரும் நண்பராவ தில்லை. உறவினர்கள் பேசுவதுமில்லை. அண்டை அயல் வீட்டாரும் இழிவாக நினைத்து ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

செல்வந்தர்களும் அதிகாரம் படைத்த வர்களும் கந்தலாடை உடுத்தியவர்களைக் கண்டால், "தொலைவில் போ; அருகில் வராதே' என்று விரட்டுகிறார்கள். கொடுமை யிலும் கொடுமை வறுமையே கொடுமை' என்று சாணக்கியன் விரித்துரைத்ததை அமைச்சர் சுபந்து கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்தார்.

""நண்பா! உன் வறுமையைப் போக்கிக் கொள்ள வழியிருக்கிறது. அறுபது சிற்றூர் களைக் கொண்ட அகரப் பகுதியை உனக்குக் கொடையாகத் தருமாறு மகாபதுமனை வேண்டினால் உனக்கு நிச்சயம் தருவான். உன் வறுமை நிரந்தரமாக நீங்கும்'' என்றான்.

அவ்வாறே சாணக்கியனும் நந்த அரசனைக் கண்டு புகழ்ந்து, தனக்கு அறுபது சிற்றூர் களைக் கொண்ட அகரம் வேண்டுமென்றதும் அரசனும் அவற்றை உவந்தளித்தான்.

சாணக்கியன் அவற்றைத் தன் நிரந்தர உரிமையாகப் பெற்று வறுமை நீங்கி வளமாக மகிழ்ந்து வாழ்ந்தான்.

அமைச்சன் சுபந்துவோ தன்னுடைய வாழ்வின் அர்த்தத்தை சீக்கிரமே வெளிப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான திட்டத்தின் முதல் பகுதிதான் சாணக்கியனுக்கு அகரம் பகுதியை அரசரிடமிருந்து தானமாகப் பெறச் செய்தது.

அடுத்த பகுதி...?

அரண்மனைப் புரோகிதர்களை எல்லாம் வரச் சொன்னார் அமைச்சர் சுபந்து.

""புரோகிதர்களே! உங்களுக்கு வழிவழி உரிமையான அறுபது சிற்றூர்களைக் கொண்ட அகரத்தை அரசன் சாணக்கிய னுக்குக் கொடுத்து விட்டான். அந்த ஊர்கள் நந்த அரசர்களின் முன்னோரான விசயன், நந்தன், சுகுந்தன், நந்திவர்தனன், சீநந்தன், பதுமநந்தன், மகாபதுமன் முதலிய ஒன்பது மன்னர்கள் காலத்திலிருந்து உங்கள் உடைமையாக இருந்தன. உங்கள் உடைமையான ஊர்களை பிறனொருவன் பெற்று இன்பமாக வாழும்போது, நீங்கள் பேசாமல் வாயை மூடிப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர் களே'' என்றார் அமைச்சர் சுபந்து.

""அமைச்சர் பெருமானே! தங்கள் அருளால் வாழ்பவர்கள் நாங்கள். தங்கள் ஆதரவு இருந்தால் எங்கள் ஊர்களைத் திரும்பப் பெறுவோம். அரசனிடம் முறையிடு வோம்'' என்று அந்த அரண்மனை புரோ கிதர்கள் கூறினர்.

அமைச்சர் சுபந்து, ""அப்படியே செய்யுங்கள்'' என்று அவர்களை மேலும் தூண்டிவிட்டார். அரண்மனை புரோகிதர்கள் அனைவரும் அரசனிடம் சென்று முறையிட்டனர்.

""அரசே! தங்கள் குல முன்னோர்களால் தரப்பட்டு பல தலைமுறைகளாக நாங்கள் பயன்பெற்று வந்த அறுபது ஊர்களையும் தாங்கள் திடீரென சாணக்கியனுக்கு கொடுத்தது பொருந்தாது. இது உங்கள் குல முன்னோர்களின் விருப்பத்துக்கு முரணானது.

தங்கள் குடிப் பெருமையைக் காத்து, எங்களுடைய ஊர்களை எங்களுக்கே மீண்டும் உரிமையாக்கி எங்களையும் காக்க வேண்டும்'' என்று அவர்கள் வேண்டுவதை அருகில் நின்ற அமைச்சர் சுபந்துவும் கேட்டார்.

"ஆம்; அரசே! தங்கள் முன்னோர் வழியே செல்வதுதான் தங்களுக்கும் நல்லது. முன்னோர் கொடுத்த கொடையை பின்னால் வரும் மன்னர்கள் மாற்றுவது அறமாகாது'' என்றார் சுபந்து. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிட்டார்.

அரசனும் மனம் குழம்பி, ""அப்படியே ஆகட்டும். சாணக்கியனை வெளியேற்றி விட்டு அந்த அறுபது ஊர்களைத் திரும்பவும் இவர்களுக்கே கொடுத்து விடுங்கள்'' என்று ஆணையிட்டான்.

"அரண்மனையில் விருந்துண்ண வந்திருக்கும் சாணக்கியனைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள்'' என்று வாயிற்காவலர்களுக்கு அமைச்சர் சுபந்து உத்தரவிட்டார்.

சாணக்கியன் விருந்துண்பதற்காக அரண் மனையில் முதல் இலையில் உட்கார்ந்த போது, ""செருக்கும் கிறுக்குமுடைய இழி குணத்தோனே, வெளியே போ. அரண்மனை யில் உண்ணும் தகுதி உனக்கில்லை. உன்னை அரசன் வெளியேற்றுமாறு ஆணையிட்டிருக்கிறான்'' என்றனர் காவலர்கள்.

சாணக்கியன் மறுமொழி கூறுவதற்குள் அவன் கழுத்தைப் பிடித்து அரண்மனைக்கு வெளியே தள்ளிவிட்டனர்.

அவ்வளவுதான். சாணக்கியனுக்கு கடல் போல பொங்கியெழுந்த சினத்தை அளவிட்டுரைக்க முடியாது.

அவனுடைய சினம் அனல் மூச்சாக வெளிவந்தது. "என்னை அவமதித்த இந்த நந்தனைப் பூண்டோடு ஒழிப்பேன். அமைச்சன் சுபந்துவை அனாதையாக்குவேன். இதை பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன். அதுவரை காவித் துணி கச்சையைத்தான் கட்டுவேன்' என்று சூளுரைத்தான் சாணக்கியன்.

No comments:

Post a Comment