தீவிரவாத செயல்களால் மன நிலை பாதிக்கும் பாகிஸ்தான் குழந்தைகள்
இஸ்லாமாபாத் : இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்திய பாகிஸ்தான், தனது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மூலம் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வளர்த்து விட்டது அல்லது (விட்டுக் கொண்டிருக்கிறது). வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தது போல, தற்போது தலிபான்கள் தங்களது தீவிரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் பக்கமே திருப்பிவிட்டிருக்கிறார்கள். தீவிரவாதத்தின் விளைநிலமாக திகழ்ந்து வரும் பாகிஸ்தான், தற்போது தற்கொலைத் தாக்குதல்கள், கார் குண்டு தாக்குதல்கள் எனத் தானே தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பலிகடா ஆகியிருப்பது உலக நாடுகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.
உலக வரைபடத்தில் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானைப் போல் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்க முடியாது என்று எண்ணும் அளவிற்கு, தீவிரவாதிகள் தாக்குதல்களை பாகிஸ்தான் மண்ணில் அரங்கேற்றி வருகிறார்கள். இந்த வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 80 தடவைக்கும் மேல் நிகழ்ந்திருக்கும் தீவிரவாத தாக்குதல்களில் மட்டும், 2,000-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த அக்டோபர் முதல் நவம்பர் 15-ந் தேதி வரை மட்டும் நடந்த 22 தீவிரவாத தாக்குதல்களில், 416 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். இதில், காயமடைந்தவர்கள் பற்றிய கணக்கு சேர்க்கப்படவில்லை.
பெரும்பான்மை சமூகமான சன்னி பிரிவினருக்கும், சிறுபான்மை சமூகமான ஷியா பிரிவினருக்கும் இடையே ஏற்படும் இனக்கலவரங்கள், பழமைவாதிகளின் ஆதிக்கப்போக்கு கொண்ட மனப்பான்மை, தலீபான் மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் தொடர் தாக்குதல்கள் ஆகியவை பாகிஸ்தானை மட்டுமன்றி, உலகையே தொடர்ந்து பயமுறுத்திய வண்ணம் உள்ளன. காரணம், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கி விட்டால்? தீவிரவாத தாக்குதல்களானாலும், போலீசாரின் தேடுதல் வேட்டையானாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தானே!
பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட இந்த தீவிரவாத தாக்குதல்கள், பாகிஸ்தான் மக்களை அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க, சமீபத்தில் ஆங்கில இணையதளம் ஒன்று, பாகிஸ்தானின் எதிர்காலமாகிய இளஞ்சிறார்கள், இந்த தீவிரவாத தாக்குதல்களினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பெஷாவர், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணாத்தின் தலைநகராக கருதப்படும் நகரம். சமீபத்தில் இந்நகரத்தின் மினா பஜார் பகுதியில் நிகழ்ந்த ஒரு கார் குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. குண்டு வெடிப்புக்கு பிறகு இப்பகுதியில் எட்டுவயதே நிரம்பிய அபித் மகமூத் எனும் சிறுவன், குண்டு வெடிப்பில் சிதறிய மார்கெட் பகுதியில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தேடிக் கொண்டிருந்திருக்கிறான், தேடியவனுக்கு கிடைத்தது , இறந்த உடல்களின் சிதறிய கண்விழி பந்து . கண்டெடுத்த கண்விழியை தான் வைத்திருந்த கைப்பையில் போட்டுக் கொண்டு, இடிபாடுகளுக்குள் கண்விழிகளை மேலும் தேடியிருக்கிறான். இப்படிதான் கண்டெடுத்த 7 கண்விழிகளை தண்ணீரால் கழுவி, ஒரு ஜாரில் அடைத்து வைத்துக் கொண்டு, :"அழகாக இருக்கிறதல்லவா" என்று அங்கிருந்தவர்களிடம் காட்டி உள்ளான். எட்டு வயதே நிரம்பிய சிறுவனிடம், இது போன்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது என்பது தீவிரவாதத்தின் கொடூர முகம் இந்த குழந்தை மனம் மாறாத சிறுவனை இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றே
கூற வேண்டும்.
இதே போன்று இன்னொரு சம்பவம். தீவிரவாத தாக்குதல்களினால் தனது தந்தையை இழந்த 11-வயது நிரம்பிய சிறுவன், அவனது தந்தையின் மரணத்தைப் பற்றி கேட்ட போது, இந்த நகரத்தில் உள்ளவர்களைப் போன்று தானும் மரணத்திற்காக காத்திருப்பதாக கூறியிருக்கிறான். இந்த தகவலை தெரிவித்த பெஷ்வரைச் சேர்ந்த உளவியலாளரும், சமூக சேவகருமான முப்தி,
பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் மரணத்தைப் பற்றியும், மரணமடைந்தவர்களைப் பற்றியும் எந்த வித தாக்கமுமின்றி இருப்பதாக கூறியுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குண்டு
வெடித்த ரத்தம் சிதறிய பகுதிகள், குழந்தைகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர், இதனால் குழந்தைகள் இரவில் தீய கனவுகளுக்கு ஆளாகி தூக்கத்தைத் தொலைக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் குண்டு வெடிப்பில் தப்பிய குழந்தைகளும், குண்டுவெடிப்புகளை நேரில் பார்த்த குழந்தைகளும், ஹிஸ்டிரிகல் அபோனியா எனப்படும் நரம்புத்தளர்ச்சியினால் பேசும் தன்மையை இழக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருடன், போலீஸ் விளையாட்டெல்லாம் போயே போச்சு. தலீபான், போலீஸ் விளையாட்டு தான் இப்போ பெஷாவரில் பேஷன். திருடனை போலீஸ் விரட்டிய விளையாட்டு போய், போலீஸை தலீபான்கள் விரட்டும் விளையாட்டே பாகிஸ்தானிய
சிறுவர்களுக்கு இப்பொழுது
பிடித்திருக்கிறது. இந்த விளையாட்டில் பலம் பொருந்திய சிறுவனே, "தீவிரவாத குழுவை" போலீஸிற்கு எதிராக வழி நடத்துவானாம்! குழந்தைகளை பலம் பொருந்தியவர்கள், குழந்தைகளை அனாசயமாக சாகசம் செய்பவர்கள் ஈர்ப்பது இயற்கை. இந்தியாவில் "சக்திமான்" என்ற தொலைக்காட்சி தொடரே இதற்கு சிறந்த சான்று. இந்த நிலையில் பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் மூலம், குழந்தைகளை கவரும் மிகப் பெரும் சக்தியாக தலீபான்கள் உருவாகக்கூடும், என்று
முப்தி தெரிவித்துள்ளார்.
கடைசியாக ஒரு நிகழ்வு. டிமிட்ரி இவனோவ் என்ற ஒரு ரஷ்யப் பத்திரிக்கையாளர் தனது பத்திரிக்கையாள நண்பர் ஒருவருடன், பொருட்கள் வாங்குவதற்காக இஸ்லாமபாத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அவர்களை நோக்கி கத்திக் கொண்டு ஓடியிருக்கிறான். தன்னிடம் உள்ள பையை திருட வந்திருப்பதாக கருதிய இவனோவ், அதை இறுக்கமாகப் பிடித்திருக்கிறார். ஆனால், அந்தச்
சிறுவன் தற்கொலைத் தீவிரவாதி போல நடித்தது பிறகு தான் அவருக்கு புரிந்திருக்கிறது. அதுவும் அந்த பகுதியில் மறைந்திருந்த அவனது நண்பர்கள் சிரித்ததை கண்டு, இவனோவின் பத்திரிக்கையாள நண்பர் கூறிய பிறகு. இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகளை இங்கு கூறிக்
கொண்டே போகலாம்.
மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவை போன்று தோன்றும் இந்த நிகழ்வுகள், உண்மையில் குழந்தைகளிடம் தீவிரவாதிகளின் தாக்கம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியோ, வீழ்ச்சியோ அந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கப் போகும் குழந்தைகள் கையிலேயே உள்ளது.
இது பாகிஸ்தானிற்கும் பொருந்தும் என்பதே உண்மை.
No comments:
Post a Comment