Total Pageviews

Monday, 27 February 2012

உயிருக்கு ஓய்வு கொடு... (சிறுகதை)


முதல்வர் தனது வீட்டில் தினமடலை பார்த்த மாத்திரத்தில் அந்த அறிவிப்பு கண்ணில் பட்டது.
”அன்பு வாசகர்களே! இது நாள் வரை தினமடல் தீவிரவாதிகளைப்பற்றி எழுதும்போது -----சமூகத்தின் பெயரோடு இணைத்து எழுதிவந்திருக்கிறது. பத்திரிக்கை தர்மப்படி இது தவறு என்று தினமடல் நிர்வாகம் உணர்ந்து மன்னிப்பு கேட்பதுடன் இனி அவ்வாறு எழுத மாட்டோம்” என்றும் உறுதி கூறுகிறோம் – இப்படிக்கு நிர்வாக ஆசிரியர. தினமடல்”

‘வைத்தியநாதன் – இதைப்பார்த்தீரா? என்னமோ நடக்குது. தீனதயாளன் இப்படி இறங்கி போக மாட்டார். விசாரிச்சு சொல்லும்”

வைத்தியநாதன் வாக்கி டாக்கி வழியாக யாருக்கோ உத்தரவை மாற்றிவிட்டார்.

ஐந்தாவது நிமிடத்தில் –

”ஐயா.. செய்தி ஆசிரியர் சுரேஷ் தான் தீனதயாளன் சொன்னதாக சொல்லி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தீனதயாளன் போனில் தான் நேற்று இரவு பேசியிருக்கிறார் வீட்டிலும் அவர் இல்லையாம். அந்த செய்தியின் டிராப்ட் ஈமெயில் வழி அவருக்கு கிடைத்த்தாம் அதில் தீனதயாளனுடைய கையெழுத்து இருந்ததாம்" 

”மேலும் விசாரியுங்கள். தயாளன் இருக்குமிடம் உட்பட எல்லா விவரங்களையும் உடனுக்குடன் தெரிவியுங்கள்”

முதல்வர் வேறு நாளிதழ்களைப் பார்க்காமல் டைனிங் ஹாலுக்கு நடந்தார். எங்கோ கெட்ட சகுனத்தின் அலறல் கேட்டது.
 ______
"உன்கிட்ட பத்திரிக்கை இருக்குங்கறதுக்காக ஏசி ருமில உக்காந்துகிட்டு எத வேணாலும் எழுதிடுவியா? தீவிரவாதி தீவிரவாதின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை எழுதறியே. தீவிரவாதம் என்ன எங்களுக்கு பட்டா போட்ட சொத்தா? நான் தெரியாமத்தான் கேக்கறேன். ரயில கவுக்கறவன் – பஸ்ஸ எரிக்கிறவன் – பொதுச்சொத்த நாசமாக்கறவன் இந்த மாதிரி வேறே எவனும் உன் கண்ணுக்கு தீவிரவாதில இல்லையா? அவனோட தீவிரவாதத்தை போராட்ட்மகிறே அவனுங்களை போராளிங்கறே. அந்த இயக்கத்தோட பேர சொல்லி எழுதறே. ஆனா எவனோ ஒருத்தன் ரெண்டு பேர் சமூகவிரோதிகள் செய்ற செயலுக்கு சமுகத்தையும் சேர்த்து எழுதி ஒட்டு மொத்த சமுகத்தையும் குற்றவாளியாக்குறே. உண்மையிலயெ தீவிரவாதம் – விபச்சாரம் – தேசத்துரோகம் எல்லாம் உன் எழுத்தில தாண்டா இருக்கு”

தீனதயாளன் என்ற தினமடல் பத்திரிக்கை மற்றும் வாரஇதழ்களின் அதிபர் ப்ளஸ் ஆசிரியர் இந்த நிமிடம் கடத்தப்பட்டிருந்தார்.மிகவும கலைந்திருந்தார். எதிரே நின்றவன் ஆறடிக்கு கொஞ்சமும் குறையப் போவதில்லை. பச்சையாக மழித்திருந்தான். நீலத்தில் கோட் சூட் வெள்ளை சர்ட் ரேடோ அணிந்த கையில் பிஸ்டல் வைத்திருந்தான்.

”நீ யார்? எந்த இயக்கம்?”

”தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? இப்போது என்னைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது உனக்கு?”

”நீயும் ஒரு தீவிரவாதி”

”கடத்திய பிறகு தான் அது தெரிகிறது. முதல்வர் அழைக்கின்றார் என்றவுடன் மேய்ச்சலுக்கு போன மாடு திரும்புகிற மாதிரி சப்தம் காட்டாமல் வந்தாயே. கோட் சூட் உடன் என்னைப் பார்த்தவுடன் அண்ணாச்சி பன்னீர்தாஸ் குடும்பம் என்று நம்பிவிட்டாயா? வெளிப்பார்வைக் கொண்டு தீவிரவாதியை அடையாளம் கொள்ள முடியாது என்று தெரிந்து கொண்டாயா?”

“சரி. உனக்கு என்ன வேண்டும்? பிளாக்மெய்ல் செய்யப் போகிறாயா? எவ்வளவு உன் டிமாண்ட்”

”சொல்கிறேன். காத்திரு” என்றுவிட்டு கதவைத்திறந்து வெளியே சென்றுவிட்டான்.

எப்படி வசமாக சிக்கியிருக்கிறேன் நான்.

இப்படி கடத்தப் படுவோம் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

வழக்கமாக கடத்துபவர்கள் கொடவுன் மாதிரி பழைய இடங்களில் தான் போட்டு வைத்திருப்பார்கள்.  ஆனால் இந்த இடம் ஒரு நவீன அலுவலக அறை. அல்லது நட்சத்திர ஓட்டலின் அலுவலக அறை. ஏசி சன்னமாக உறுமிக் கொண்டிருக்கிறது.கீழெ கார்ப்பெட. புதை சோபாக்கள். சிறிய டிசைன் விளக்குகள்.

கதவை விலக்கி உள்ளே வந்தான்.

”சரி. இது தான் எங்கள் தலைவரின் டிமாண்ட்”

”யார் உங்கள் தலைவர்?”

”பத்திரிக்கை புத்தியை சிறிது மூட்டைக்கட்டி வை. கேள்வியை மாற்றிக் கேள். என்ன உங்கள் டிமாண்ட என்று தான் கேட்கவேணடும்”

”சரி சொல். உங்கள் டிமாண்ட் என்ன”?

”இப்போது நீ உன் அலுவலகத்துக்கு தொலை பேசுகிறாய். பேசி - நாளை வரப்போகும் தினமடலின் முதல் பக்கத்தில் மிகப்பெரிய அளவில் நீ எங்கள் சமுக மக்களிடம மன்னிப்பு கேட்க வேண்டும”

”புரியும்படி சொல்”

”இதைப்படி – நாளை இது உள் பத்திரிக்கையின் முதல்பக்கத்தில் வர வேண்டும”

”அன்பு வாசகர்களே! இது நாள் வரை தினமடல் தீவிரவாதிகளைப்பற்றி எழுதும்போது -----சமூகத்தின் பெயரோடு இணைத்து எழுதிவந்திருக்கிறது. பத்திரிக்கை தர்மப்படி இது தவறு என்று தினமடல் நிர்வாகம் உணர்ந்து மன்னிப்பு கேட்பதுடன் இனி அவ்வாறு எழுத மாட்டோம்” என்றும் உறுதி கூறுகிறோம் – இப்படிக்கு நிர்வாக ஆசிரியர. தினமடல்”

”இது பேத்தல். இப்படியெல்லாம் எழுத முடியாது.”

சற்றும் தாமதிக்காமல் பிஸ்டலால் தோளில் அடித்தான். வ்லி உயிர் போனது.

”இப்படி எல்லாம் எழுதினால் வாசகர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பகத்தன்மையை பாதிக்கும். இது சர்க்குலேஷனைக் குறைத்துவிடும்”

”விளக்கத்தை உன் தந்தையிடம் சொல்லிக்கொள். பத்திரிக்கை அறிவிப்பா அல்லது உன் தலையா என்று நீயே முடிவெடு. இப்போதே மணி 11 ஆகிவிட்டது. நாளைக் காலை இநத அறிவிப்பு வரவில்லையெனில் உன் நெற்றிப்பொட்டு சிதறுவது உறுதி”  என்று வேதாளமாக மாறினான்.

”பத்திரிக்கைக்கு பேசுகிறேன் என்று கடத்தப்பட்டதை தெரிவிப்பாயானால் – உன் விரல் ஒவ்வொன்றையும் நறுக்கி கீழே போடுவேன். கையில் விரல் இல்லாமல் விழுந்த விரலை எப்படி எடுப்பாய்?”

அவன் சொல்லும்போதே தீனதயாளனுக்கு விரல்கள் வலித்தன.

 _______________
”மனோஜ் இந்த சீடியை – வாய்ஸை தரோவா செக் பண்ணி இது .பேக்கா இல்லையான்னு கன்பர்ம் பண்ணிடுங்க. இது மினிஸ்டர் சோழராஜன் தான்னு கன்பர்மா தெரியுது. இருந்தாலும் கன்பர்ம் பண்ணிடுங்க. அடுத்த முதலமைச்சர் சோழராஜன் தான்னு உறுதியான நிலையில இதை ரிலிஸ் பண்ணதுக்கப்புறம் ஃபேக்குனு தெரிஞ்சா நம்ம தலைவர் சீட்டை கிழிச்சிருவார். இதன் ஒரு காப்பியை முத்துக் கருப்பனுக்கும் அனுப்பிடுங்க. ஒரு ஆள் கொண்டு வந்து ரிஷப்ஷனில் கொடுத்திருக்கிறான்.சீடி வந்த கவர் சாந்தி கிட்ட இருக்கு. அதையும் ப்ரிசர்வ பண்ணி வைங்க. முத்துக் கருப்பன் கேட்பார்”

தமிழ்வேவ் தொலைக்காட்சியின் ஐடி மேனேஜர் மனோஜ்  பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துக் கொண்டார் இது உண்மையான சீடி நோ ஃபேக். சோழராஜன் என்றழைக்கப்பட்ட தமிழக முதல்வரின் இளைய சகோதரரின் அரசியல் எதிர்காலம் இனி கோவிந்தா. 


அன்று மாலை தொடங்கி எதிர்கட்சியின் தமிழ் வேவ் தொலைக்காட்சிக்குழுமத்தின் எல்லா அலைவரிசைகளிலும் சோழராஜன் – பிரபல தினசரி மற்றும் வாரஇதழ்களின் ஆசிரியர் தீனதயாளனை இரண்டு தடவை சுடுகின்ற படக்காட்சி திரும்ப திரும்ப ஒளிபரப்ப்ப்பட்டது. மிக அமைதியானவர் நம்பகத்தன்மை கொண்டவர் என்று பெயரெடுத்த மதிப்பிற்குரிய சோழராஜனின் இன்னொரு முகத்தை தமிழகம் கண்டது. காவல் துறை கையைப் பிசைந்து கொண்டது. எதிர்கட்சியினரும் நிருபர்களும் இணையப்பதிவர்களும் பின்னிப் பிடலெடுக்கத் தயாராயினர்.
 ______
”குட்மார்னிங் மிஸ்டர் தீனதயாளன். நேற்று இரவு நன்றாக உறங்கினீர்களா?” என்று உள்ளே வந்தான் உயரம்.

தீனதயாளன் நனைந்த கோழி போல சோபா மேல் படுத்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அமர்ந்தார். அவன் கையிலிருந்த தினமடல் பத்திரிக்கையைக் கண்டதும் அவர் கண்களில் சிறிது ஜீவன் தெரிந்த்து.

“நல்லது உன் பத்திரிக்கையில் ஒழுங்காக வேலை நடக்கிறது. நான் சொன்னபடி அறிவிப்பு வந்துவிட்டது”

”சரி. நான் புறப்படுகிறேன்”

”அடடே. சொல்லவேயில்லை. எங்கே புறப்படுகிறாய்?"

”என்ன விளையாடுகிறாயா? பத்திரிக்கையில் அறிவிப்பு வந்தால் என்னை விட்டுவிடுகின்றேன் என்றாயே?”

”அப்படியா சொன்னேன். யார் எது சொன்னாலும் நம்பிவிடுவாயா?”

தீனதயாளனுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்த்து.

”எங்கள் தலைவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் உன்னைச் சந்திக்கிறார். காத்திரு. முகம் கழுவிக் கொள். காஃபி கொண்டுவருகிறேன்” என்று மீண்டும் மறைந்தான்.

நேற்று இரவு முதல் நெஞ்சு மின்னலடித்துக் கொண்டிருந்த்து. வாயுத்தொல்லையா? இல்லை ஹார்ட் அட்டாக் வந்து தொலைக்கப் போகிறதோ தெரியவில்லை. ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன் இடது தோள் வலிக்கும் – வியர்த்து வழியும் என்றெல்லாம் எவனோ எட்டாம் கிளாஸ் மண்டையன் எழுதிக் கொடுத்த்தை ஞாயிறு மலரில் பிரசுரித்திருக்கிறேன். இதெல்லாம் உண்மையா என்று கூட தெரியாது. எவனோ படித்துவிட்டு என்னமோ செய்து கொள்ளட்டும் என்று இருந்தேன். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் பல்வலியும.

இந்த சனியன் பிடித்தவனுடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை.  தீவிரவாதிக்குரிய எந்த லட்சணமும் இந்த முகத்தில் இல்லை. சோழா ஷராட்டனில் கொண்டை பெண்களுடன் ரிஷப்ஷன் பின்னால் பவ்யமாக நிற்பவன் போலிருக்கிறான். பிஸ்டல் வைத்திருப்பது மட்டும தான் கொஞ்சம் உதறுகிறது. அதை அடிக்க மட்டும் தான் இதுவரை உபயோகித்திருக்கிறான.

நான் என்ன செய்தாலும் காமிராவில் வேறு இடத்தில் கண்காணிக்கிறார்கள் என்று மட்டும் புரிந்த்து,

தொய்ந்து நடந்து போய் பாத்ருமில் புகுந்து கொண்டார்.

__________
கதவு மீண்டும் பிளக்க சோழராஜன் உள்ளே வந்தார். முன் மண்டை கொட்டிப் போயிருந்தாலும் பின்பாகத்துக்கு கருப்படித்து வளப்படுத்தியிருந்தார். வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தார். எஜமான் ஸ்டைல் வெள்ளை கலர் சப்பல் அணிந்திருந்தார். தோளில் பின்னாலேயே அந்த உயரம் வந்த்து.

"வணக்கம் சார்......மிஸ்டர் தீனதயாளன்.... என்ன சார் எப்படி இருக்கிங்க. பாவம் ரொம்ப டயர்டா இருப்பிங்களே. இந்தாங்க எடுத்துக்கோங்க" – என்று பவ்யமாக பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினார்

தீனதயாளன் கண் விரித்துப் பார்த்தார்.

”என்னடா நம்மை தீவிரவாதிங்க கட்த்திட்டாஙக. வெளியே போய் ஒரு தீவிரவாதியுடன் முன்று நாட்கள் என்று தொடர் எழுதலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்திங்களா?

”ராஜன் நீங்க.. நீங்களா என்ன இப்படி செஞ்சிங்க.. நீங்க ஒரு கால் போட்டுருந்திங்கன்னா ஓடோடி வந்திருப்பேனே... இப்படி பண்ணிட்டிங்களே... எனக்கு உடம்பு சரியில்லனு உங்களுக்கு தெரியும் தானே... நெஞ்சு வலிக்குது ராஜன்”

திடிரென்று சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தையால் அர்ச்சித்தார்.

”ஏண்டா நாதாரி..நாயே  சொந்த ஊர்க்காரன் - நலவிரும்பினு நெனச்சி என் வாழ்க்கைய ஒரு திறந்த புத்தகமா உன்கிட்ட வச்சிருக்கேன். ஒரு பிரண்டுக்கு மேலா உன்ன வச்சி நான் ஒண்ணுக்கு போறது முதற்கொண்டு சவுக்கு தோப்புக்குள்ள காரை கட்டிலாக்கி ஜல்சா பண்ணது வரை எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணேன் பொறம்போக்கு நாயே... நான் கூப்பிட்டா ஓடி வர ஆளா நீ. அது மூணுமாசத்துக்கு முன்னாடி...என்னோட ஒரே தட்டில சாப்பிட்டு – ஒரே கிளாஸில ஊத்திக் குடிச்சு ஒரே அசிங்கத்தை சேந்து செஞ்சிட்டு.. இன்னிக்கு நல்லவனாட்டம் தொடர் எழுதறியா? எழுதவிடுவனா? பிச்சக்காரப்பயலே...நட்போட வேல்யு தெரியுமாடா உனக்கு?  கழுத்த அறுத்துப் போட்டாலும் காட்டிக் கொடுக்காத ஒரு கூட்டத்தோட நான் வாழ்ந்திட்டிருக்கேன். நான் பயணத்தில் இருக்கேன. நான் போக வேண்டிய தூரம் அதிகம். சாதிக்க வேண்டியதும் அதிகம். உன்ன மாதிரி துரோகிகளை மடியில கட்டிக்கிட்டு கிணத்தில விழுந்து சாக சொல்றியா?”

பிஸ்டல் அவர் கைக்கு மாறியது. பிஸ்டலை வைத்து தீனதயாளனின் மோவாயை மேலே துக்கினார்.

’நானும் அண்ணனும் கோஷம் போட்டு – போஸ்டர் ஒட்டி – பிச்ச எடுத்து காலில் விழுந்து – காட்டிக் கொடுத்து – கூட்டிக் கொடுத்து – அடிவாங்கி மிதிவாங்கி இந்த இடத்துக்கு வந்து சேர நாங்க கொடுத்த விலை ரொம்ப அதிகம்டா.. அவ்வளவு சீக்கிரம் கீழே இறங்கிருவனா?”

”ராஜன் என்ன விட்டுரு. இதை ஒரு வார்னிங்கா எடுத்துக்கறேன். அந்த தொடரை டிராப் பண்ணிடறேன்... என்ன நம்பு ப்ளீஸ் நம்பு”

”நம்பறதா? துரோகத்தை நான் எப்பவும் மிச்சம் வைக்க மாட்டேன். சின்ன தீப்பொறி தானேனு உன்ன விட்டுட்டா நான் நாளைக்கு நீ காட்டுத்தீயா வந்து என்னை கவுப்பே. சான்ஸே இல்லை. துரோகத்தின் விலை மரணம் தான்.. இன்னும் ரெண்டு நிமிஷத்தில உன் உயிருக்கு ஓய்வு கொடுக்கப் போறேன்...உன்னை ஒரு தீவிரவாதிங்க தான் கடத்திட்டதா ஒரு லாபி உண்டாக்கியாச்சு.. விசாரணை வேறு பக்கமா போய் முடிவில்லாம போகும... உன் பிணம் கூட உன் வீட்டுக்கு போகாது....அயம் வெரி ஸாரி

”பளீஸ் ராஜன்.. என்ன விட்டுரு.. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன். என்ன நம்பு””

”ஸாரி தயாள். சான்ஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சி. உன்ன நெத்தில சுட தான் என் ஆசை. ஆனா குறி வைக்கிறதில நான் ஒண்ணாங்கிளாஸ் தான்.... உன் நெஞ்சு வலிக்குதுனு சொன்னியே.. இப்ப சரியாக்கிடறேன். அகலமான நெஞ்சு தான் இப்ப என் இலக்கு.. கண்ண மூடிக்கோ.. சுடப்போறேன்.  சுடப்போறேன்.. சுட்டுட்டேன்...
 ____
ராகேஷ் மொபைல் திறந்து to do லிஸ்ட் நோக்கினான்.

தயாள் கட் என்பதை டிக் செய்தான்

ஈமெயில் திறந்து செய்தி அனுப்பினான்.

”project completed. Waiting for balance”

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த திருப்தியுடன் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

No comments:

Post a Comment