மின்சார பில் கட்ட ஏடிபிஎம் மையங்கள் - மின்வாரியம் ஏற்பாடு
சென்னை நகரில் எங்கு வேண்டுமானாலும் மின்சார பில்லைக் கட்டுவதற்கு வசதியாக ஏடிஎம் மையங்களைப் போல எங்கு வேண்டுமானாலும் பில்லைக் கட்டும் மையங்களை ஏற்படுத்தவுள்ளது.
மின்சார பில்களை நுகர்வோர் தற்போது சம்பந்தப்பட்ட மின் அலுவலகங்களில் கட்டி வருகிறார்கள். இதுதவிர ஆன்லைன் மூலம் கட்டும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏடிஎம் மையங்களைப் போல மின்சார பில்களை எங்கு வேண்டுமானாலும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டும் வகையிலான ஏடிபிஎம் மையங்களைத் திறக்க மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை நகரில் 20 ஏடிபிஎம் மையங்களை தொடங்கலாம் என அது பரிந்துரைத்துள்ளது.
இந்த இயந்திரங்களை வாங்க விரைவில் டெண்டர் விடப்படவுள்ளதாம். தற்போது இந்த வகை இயந்திர வசதி அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகம், தி.நகர், வாலாஜா சாலை, செளகார்பேட்டை ஆகிய இடங்களில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு கிடைத்த வரவேற்பையடுத்து தற்போது நகர் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்த அரசு வங்கி ஒன்று, சென்னையில் குறைந்தது 50 மெஷின்களை நிறுவ வேண்டும் என ஆலோசனை கூறியது. ஆனால் அதை மின்வாரியம் நிராகரித்து விட்டது. அவ்வளவு மெஷின்களை வாங்க விரும்பாத மின்வாரியம் தற்போது டெண்டர் விட்டு அதன் மூலம் பகிரங்கமாக மெஷின்களை கொள்முதல் செய்யவுள்ளது.
ஏடிபிஎம் மையங்களில், பணம் கொடுத்தோ அல்லது செக், டிடி போன்றவற்றைக் கொடுத்தோ நுகர்வோர் தங்களது பில்களை கட்ட முடியும். 24 மணி நேரமும் இந்த வசதி இருக்கும் என்பது முக்கியமானது.
No comments:
Post a Comment