ஆன்மாவை வாழ்வில் அறிந்தாலும், வாழ்வை உள்ளே கண்டாலும், அது பரம்பொருள் வெளிப்படும் தருணம். வாழ்வில் காணும் பரமனும் உள்ளே தெரியும் வாழ்வும் பரமனே.
மனம் இரு பகுதிகளாக உள்ளது.நாம் மனம் என அறிவது மேல் மனம்.மேல் மனம் வாழ்வுக்குரியது.முழு வாழ்வும் இதனுள் அடங்கியது. நாம் நினைப்பது, கேட்பது, பார்ப்பது, அனைத்தும் மேல் மனத்தைச் சார்ந்தன.இறைவன் இதனுள் வருவதில்லை.உள்மனம் என ஒன்றுண்டு. இதன் பகுதிகள் பல.இது பரந்து விரிந்தது.நாம் ஒரு கட்டத்திலிருந்தால் ஆயிரம் ஒலியில் சிலவற்றைக் கேட்கிறோம்.உள்மனம் அந்த ஆயிரம் ஒலியையும் கேட்கும்.பதிவு செய்து கொள்ளும்.தேவைப்பட்ட நேரத்தில் அது மேலே வரும்.இது யோகத்தால் விடுபட்டால், பிரபஞ்சம் முழுவதும் பரவக்கூடியது.இறைவனை மேல் மனத்தில் சாதாரண மனிதன் காணமுடியாது.தவத்தாலும், யோகத்தாலும் இறைவனைக் காணும்பொழுது, ஆன்மாவைக் காணும்பொழுது, நாம் உள்மனத்திலேயே காண்கிறோம்.
பூரணயோகம், அனைத்தையும் பூரணப்படுத்த முனையும். பூரணயோகத்திற்கு மேலேயும், உள்ளேயும், இறைவனையும், வாழ்வையும் காணவேண்டும்.உள்ளே போனால் நிஷ்டை, தவம், சமாதி என்பதால் புலன்கள் அவிந்து வாழ்வைக் காணமுடியாது.வாழ்வும், வாழ்வுக்குரிய
எண்ணங்களும், செயல்களும் உள்மனத்தில் காணமுடியாது.
மேல் மனம் இறைவனுக்கில்லை, உள்மனம் வாழ்வுக்கில்லை என்பது மனிதநிலை.மேல் மனத்திலும், உள்மனத்திலும் இறைவனைக்கண்டு, அதேபோல் இரு இடங்களிலும் வாழ்வைக் கண்டால் பூரண யோக நிபந்தனை பூர்த்தியாகிறது.
இதன் ஒரு பகுதியை மேலே குறிக்கின்றேன்.அதுவே பரம்பொருள் வெளிப்படும் தருணமாகும்.அது ஆன்மீக நிறைவைத் தரும்.
உடல் ஜடமானது.அதற்குத் தொட்டுப் பார்த்தால்தான் புரியும். புலன்கள் ஓரளவு சூட்சுமமானவை.தூரத்திலிருந்து வரும் வாசனை, உள்ள காட்சி, எழும் சத்தம் ஆகியவை புலன்களுக்கு உணரமுடியும். மனம் முழுவதும் சூட்சுமமானது.அதனால் எங்கும் சஞ்சாரம் செய்யமுடியும்.மேகமண்டலத்தையும் எட்டமுடியும்.ஆன்மா பிரம்மம். அது சிருஷ்டி முழுவதும் பரவும்.உடல் நிறைவுபெற, செயல் பூர்த்தியாக வேண்டும்.புலன்கள் நிறைவுபெற, கண்டு, கேட்டு நிறைய வேண்டும்.மனம் நிறைய எண்ணம் சிறக்க வேண்டும்.ஆன்மா நிறைவுபெற, ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் ஒரு க்ஷணம் பரவவேண்டும்.அந்த நேரம் நாம் இறைவனை மின்னலாகத் தரிசனம் செய்கிறோம்.பெரிய கவிகளுக்கு இந்த ஆண்டவன் தரிசனம் கிடைத்த பின்னரே புது வாழ்வு ஏற்பட்டு, பேரிலக்கியம் சிருஷ்டிக்கின்றார்கள்.
எழுத்தாளர், கவி, பாடகி, விளையாட்டு வீரன், அரசியல்தலைவன், கற்புக்கரசி என எந்தத் துறையிலும் சிறந்தவர், இந்த இறைத் தரிசனம் கண்டால் அவர் சிருஷ்டிகர்த்தாவாகி, பேரிலக்கியம், பெரிய சாம்ராஜ்யம், நிறுவுவார்கள்."கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா''' எனக் கேட்ட கற்புக்கரசிக்கு, வந்த பிரம்மச்சாரியின் கோபம், அவர் வாழ்வில் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் காண்பித்தது.உள்மனம் பரந்து விரிந்தது.கடந்த காலத்தையும் தழுவுவது.அதனால் தெரியமுடிகிறது.
இப்படி சொன்னதும் நினைவில் வரக்கூடிய ஸ்லோகம் என்ன? பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதுதான்.
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் வ்ரஜ!
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷயிஸ்யாமி மா ஷுசஹா!
அர்ச்சுனா! அனைத்தையும் துறந்து என்னை சரணடை. அனைத்து பாவங்களிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன். கவலைப்படாதே.
பலன் கருதாத கடமையைக்கீதோபதேசப்படி செய்தால் பலனைக் கருதும் மனப்பான்மை அறவே அழியும் நேரம் திரை விலகி, தெய்வம் தெரிவது, ஆன்மாவை வாழ்வில் காணும் நேரமாகும்.
No comments:
Post a Comment