Total Pageviews

Sunday, 19 February 2012

கிருபாச்சாரியார்


கிருபாச்சாரியார்

          கௌதம ரிஷியின் வழித்தோன்றலாக வந்தவர் சரத்வான். அவர் கடுமையான தவங்களைச் செய்து , பலவிதமான அஸ்திரங்களை ஏவும் பயிற்சியைப் பெற்றார்.  ஒரு முறை சரத்வான் தவம் செய்து கொண்டிருந்த போது, இந்திரன் அவ்ரின் தவ வலிமையைக் கண்டு நடுங்கி, அவருடய தவத்தைக் கலைக்க அப்ஸரஸ் பெண்ணை அனுப்பினான்.


             அப்ஸரஸ் மங்கையின் நடனத்தால் சரத்வான் தவநிலை கலைந்து, கண்விழித்தார். மங்கையின் மீது அவர் மயக்கம் கொண்டார். தவத்தை விடுத்து அவளுடன் வாழலானார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்ததும் சரத்வான் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். அப்ஸரஸ் விண்ணுலகம் சென்றாள். ஆணும், பெண்ணும் ஆகிய இரு குழந்தைகளும் வனத்தில் விலங்குகளால் வளர்க்கப்பட்டனர்.

            ஒருமுறை சந்தனு மகாராஜா வனத்திற்கு வந்தபோது அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டு கருணையுடன் அழைத்து வந்து தம் அரண்மனையில் வளர்த்துவந்தார். அவர் கிருபையுடன் (கருணையுடன்) அழைத்து வந்ததால் அக்குழந்தைகளுக்குக் கிருபர், கிருபி என்று பெயரிட்டு வளர்த்தனர். கிருபர், தம் தந்தை சரத்வான் போலவே அஸ்திர வித்தைகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். பாணங்களை எவ்வாறு விடுக்கவேண்டும், எவ்வாறு எதிரிகளிடமிருந்து திரும்பப் பெற்றுவது என்பன போன்ற முறைகளைக் கற்றறிந்தார். தாம் கற்றறிந்தவற்றைப் பிறருக்கும்  கற்றுத்தரும் ஆற்றலும் அவரிடம் இருந்ததை அறிந்த பீஷ்மர் அவரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியராக நியமித்தார்.

            கிருபருடைய சகோதரி கிருபியை துரோணருக்கு மணம் செய்வித்தார். பல ஆண்டுகள் கழிந்த பின்னர் சரத்வான் தம் குழந்தைகள் இருக்கும் இடத்தை தவ வலிமையால் அறிந்து அஸ்தினாபுரம் வந்தார். தம் கற்றறிந்த கல்விச் செல்வங்களை யெல்லாம் கிருபருக்குக் கற்றுத் தந்தார். 

            கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபரதப் போரில் கௌரவப் படையின் பதினோறு படைத்தலைவர்களுள் ஒருவராக இருந்தார். மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சி இருந்தவர்கள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, அவர்களிடமிருந்து தப்பி ஒர் காட்டில் மறைந்திருந்தார்கள். துரியோதனின் வீழ்ச்சியால் மனம் கொதித்த அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

           கிருபர் அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். “துரியோதனன் பெரியோர்களை மதிக்கத் தெரியாதவனாக, பலரால் தூண்டப்பட்டுத் தவறான பாவச் செயல்களைச் செய்தான். ஆகையால் அவன் இந்த நிலையை அடைந்தன். நாமும் அவனைப் போல, நடந்தால் நமக்கு அவனுடைய நிலையே கிடைக்கும், நாம் திருதராஷ்ட்ர மன்னனைக் கலந்து ஆலோசித்துவிட்டு, அவ்ர்கள் சொல்படி நடப்போம்” என்றார். கிருத வர்மா என்ற யாதவ மன்னரும் அவ்வாறே கூரினார். ஆனால், கிருபரின் யோசனையை அவன் ஏற்கவில்லை.(அஸ்வத்தாமா, கிருபரின் உடன்பிறந்த சகோதரியின் மகன்). 

           அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிப் போகும் போது, கிருபர், கிருதவர்மன் இருவரும் உடன்சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் வெளியில் காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்துய்ம்னனையும் கொன்றபிறகு மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனின் உயிர் பிரிந்தது.

 கிருபர் அஸ்தினாபுரத்தில் அனைவராலும்போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே ஆசிரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத் தந்தார்.

No comments:

Post a Comment