இதய அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் இஇசிபி சிகிச்சை
பை-பாஸ் சர்ஜரி எனப்படும் இதய அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்டி குறித்து நாம் அறிந்திருப்போம்.
ஆனால் நெஞ்சு வலி, இதய கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஆகியவற்றை நவீன இஇசிபி முறையில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.
இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படாதவர்களுக்கு இந்த இஇசிபி சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.
இதயத்தில் உள்ள ரத்த நாளங்களுக்கு தடையின்றி ரத்தத்தை கொண்டு சென்று இதயத்தைச் சீராகச் செயல்பட வைப்பதே இஇசிபி சிகிச்சை முறையாகும்.
இஇசிபி சிகிச்சைக்கு, நோயாளியின் இடுப்புப் பகுதியிலிருந்து தொடைகள் மற்றும் இரு கால்களில் மூன்று ஜோடி காற்றுப் பைகள் (பிரஷர் கப்ஸ்) பொருத்தப்படும்.
இந்த காற்றுப் பைகள் இதயம் சுருங்கி விரியும்போது, அதே நேரத்தில் மாற்றாக சுருங்கி விரிந்து செயல்படும்.
இதன் காரணமாக கால் பகுதியில் உள்ள ரத்தம் வழக்கத்தை விட அதிக வேகத்திலும் அழுத்தத்திலும் ரத்த நாளங்கள் வழியாக இதயத்துக்குச் செல்லும்.
இதனால் செயல்படாமல் இருக்கும் சிறிய ரத்த நாளங்கள் எளிதாகத் திறந்து கொள்ளும். இப்படி ஒருமுறை திறந்து விடப்படும் ரத்த நாளங்கள், நிரந்தரமாக இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் பாதைகளாக மாறி, ஏற்கனவே அடைபட்ட இதயத் தசைகளுக்குத் தேவையான ரத்தத்தைக் கொண்டு செல்லும்.
இந்த நவீன இஇசிபி சிகிச்சை முறையை தினமும் 1 மணி நேரம் வீதம் வாரம் 5 முறை தொடர்ந்து 7 வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சையானது உடலுக்கு வெளியே நிகழ்வதால், நோயாளிக்கு வலியோ, பக்க விளைவோ ஏற்படாது.
இந்த சிகிச்சையால் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக அதிகப்படுத்த முடிகிறது.
இதயத் துடிப்பு சீராவதுடன், கரோனரி ரத்தக் குழாய் பாதிப்பிலிருந்து இதயம் காப்பாற்றப்படுகிறது.
மார்பு வலி இருப்பவர்கள், மாரடைப்பு வந்தவர்கள், பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டும் பலன் இல்லாதவர்கள், பை-பாஸ் செய்து கொள்ள பயப்படுவோர், பை-பாஸ் செய்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய அளவுக்கு உடல் பலம் இல்லாதவர்கள் ஆகியோர் இஇசிபி செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment