Total Pageviews

Tuesday, 14 February 2012

அறிவு


இறைவனின் செயலை ஸ்பர்சிக்கும் உணர்வு நன்றியறிதலாகும்.

கண் ஒளியை ஸ்பர்சிப்பது பார்வை.பிறர் குரல் ஒலியாகக்காதில் விழுவது காது பிறரைக் கண்டு கொள்வதாகும்.வெளியில் உதவியிருப்பதையோ, ஆபத்திலிருப்பதையோ மனம் கண்டுகொள்வது அறிவு எனப்படும்.

உலகமே இறைவன்.உலகில் இருப்பவை அனைத்தும் இறைவன்.அசைவெல்லாம் அவன்.அணுவெல்லாம் அவன் என மனம் அறிகிறது.ஆனால் நிதர்சனமாக இல்லை.ஆன்மாவுக்கே அது நிதர்சனமாக இருக்கும்.ஆன்மவிழிப்புற்று - சைத்தியப்புருஷன் வெளிவந்து - இறைவனை அவன் செயல்களில் காணும்பொழுது இறைவனின் ஸ்பர்சத்தை உணர்கிறது.அந்நேரம் கருணை உள்ளே எழுகிறது.அவ்வுணர்வை நன்றியறிதல் என நாம் அறிகிறோம்.

ஓர் ஊரில் ஒரு பள்ளி  சிறப்பான ரிஸல்ட் கொண்டுவந்தால் அது மாணவர்கட்குச் செய்யும் சேவை.அது அனைவருக்கும் தெரிந்தது.எவரும் அதற்காகப் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியுடையவராக இருப்பதில்லை.அப்பள்ளியைப்பற்றிப் பேச நேர்ந்தால் நல்ல அபிப்பிராயம் சொல்வார்கள்.சமூகத்தில் நமக்கு கடை, வக்கீல், காய்கறித்தோட்டம், முனிசிபாலிட்டி, பள்ளி , போலீஸ் ஸ்டேஷன் மற்ற ஊர்களிலில்லாத நல்ல சேவையைச் செய்வதுண்டு. அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என நமக்குத் தோன்றுவதில்லை.

நல்ல கடையோ, கெட்ட கடையோ, கடை வீதி மக்களுக்குச் செய்யும் சேவை பெரியது.ஒரு நாள் கடையில்லை எனில் சிரமம்.சிறப்பான இடங்களுக்கே நன்றி சொல்லத் தோன்றாதபொழுது, கடை வீதிக்கும், ரோடுக்கும் நன்றி சொல்லவேண்டும் என்ற கருத்தே வியப்பாக இருக்கும்.கடை வீதியில்லாத குக்கிராமம், ரோடில்லாத ஊர், நல்ல பள்ளிகளில்லாத டவுன், திறமையான வக்கீல் இல்லாத கோர்ட், போலீஸ் ஸ்டேஷனில்லாத இடத்தில் அவை தேவைப்படும் நேரம், அவற்றின் அருமை தெரியும்.இருந்தால் அவற்றைப் போற்றுவதில்லை.

கண்ணுக்கு நேராகத் தெரியும் சமூகஸ்தாபனங்களை நாம் பொருட்படுத்துவதில்லை தமிழ்க் குடும்பம் பீகாரிலிருந்தபொழுது, அக்குடும்பப் பெண்ணை ஒருத்தி வந்து வேலை கொடுப்பதாக அழைத்துப்போய் விபசார விடுதியில் சேர்த்ததைப் போலீஸில் சொன்னால், ""இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடு. தொடர்ந்தால் உன் உயிருக்கு ஆபத்து'' என்று போலீஸ் சொல்லவே அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்துவிட்டார்கள்.நம்மூர் போலீஸ் ஆதரவு அளித்து ஊருக்குப் போகப் பணம் கொடுத்தது.

வெளியூர் போனால் உள்ளூர் அருமை தெரிகிறது.சமூகம் மனிதனுக்கு அளிக்கும் ஆதரவு, பாதுகாப்பு வெள்ளிடை மலையாக உள்ளது.நாம் அதை அறிவதில்லை. அறிந்தால் நன்றி சொல்வதில்லை.

"நீ இன்று வாழ்வில் உயர்ந்துவிட்டால், ஏதோ ஒரு காலத்தில் உனக்கு உதவியவரை நினைவுபடுத்திக் கொள்''.குடும்பம் செய்தது ஆயிரம் உதவிகள்.நண்பர்களும், உறவினர்களும், ஊராரும் அன்றாடம் உதவிகளைச் செய்தபடியிருக்கிறார்கள் என்பதை நாம் உணருவதில்லை.

பிறர் வாழ்வில் நாம் எப்படிப் பங்கு கொள்கிறோம் என்றறிந்தால், அதன் மூலம் நம் வாழ்வில் தினமும் எத்தனை ஆதரவுகள் வருகின்றன என்றறியமுடியும்.இவற்றையெல்லாம் காணும் தெளிவு நமக்கிருப்பதில்லை.

இறைவன் செயலை அறிவதும், காண்பதும், அதனால் தீண்டப்படுவதும் மனிதனுக்கில்லை, ஆன்மாவுக்குண்டு.அதுவே நன்றியறிதலுக்கு விளக்கம் .
 

No comments:

Post a Comment