காமம் தான் ஆரம்பத்திலிருந்து இன்றளவும் இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் சக்தியாக இருக்கிறது. ‘கூடல்’ என்பது மனிதருக்கான விதிமுறையாக மட்டுமில்லை, உலகின் எல்லா உயிர்களின் இயல்பாக இருக்கிறது. நாய், பூனை, ஆடு, மாடு, சிங்கம், புலி, யானை, குதிரை போன்றவைகளோடு தாவரங்களும் புழு, பூச்சி முதலான உயிரினங்களும் கலவையில் களிக்கின்றன. இன்னும் ஆராய்ந்து பார்த்தால் நீரும், நிலமும் புணர்ந்து தாவரங்கள். தாவரம், வெயிலோடு கூடி பச்சையம். வெளியில் காற்று நுழைந்து மழை, குளிர், வெப்பப்பரவல் என்று இடையறாது இடையறாது எதுவோ எதனோடோ கூடல் நடத்திக் கொண்டிருக்கிறது.
இதைக் கண்டு உணர்ந்து சனாதன தர்மம் என்கிற இந்துமதம் ‘ஆவுடையார் லிங்கம்’ என்று ஒரு சிலா ரூபம் உருவகப்படுத்தி கூடலே இவ்வுலகம் என்று மென்மையாய் உணர்த்துகிறது. ‘லிங்கம்’ என்கிற சொல்லுக்கு அடையாளம் என்று அர்த்தம். இவ்வுலகின் அடையாளம் கூடல். கூடலின் ஆதாரம் காமம். காமமே இவ்வுலகை ஆளுகிறது.
ஆளுவது எதுவோ அதைப் புரிந்து கொள்ள மறுத்தால் ஆளுபவர்க்கும், ஆளுமைக்கு ஆட்படுபவர்க்கும் மிகப் பெரிய மோதல், முரண்பாடு ஏற்பட்டுவிடும். வாழ்க்கை நிம்மதியற்றுப் போகும். இதுவே இவ்வுலகின் பல பாகங்களில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
எதை மிகப் பிரியமாய் வணங்கி, வரவேற்க வேண்டுமோ அதைக் கண்டு நடுங்கி ‘வெட்டி வீழ்த்துவேன்’ என்று விரட்டினால், வெறுத்தால் கலவரமே மிஞ்சும். நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ அதுவே உங்களைப் பல்வேறு ரூபத்தில் வந்து தாக்கி அடிமைப்படுத்தும்.
ஏன் இவ்வுலகம் காமத்தைப் புரிந்து கொள்ளவில்லை?
அடுத்து வாழும் மனிதரைப் புரிந்துகொள்ளாதவர், காமத்தையும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க அடுத்தவர் தேவை. வேறு ஒரு உயிருள்ள உடல் தேவை. வாழ்ந்து மலர்ந்த மனிதர் தேவை.
தசையைத் தசை உரசுவது மட்டுமே காமத்தைத் தீர்த்துவிடாது. நிர்வாணப்படுத்துவது மட்டுமே ஜெயித்தாகிவிடாது. மதித்தால்தான் காமம் கண்டு மகிழ முதல்படி. பிறரை மதிக்க மனதில் பணிவு வேண்டும். பணிவு தன் மீது நம்பிக்கை உள்ளவருக்கு எளிதில் வரும்.
தன் மீது நம்பிக்கை இல்லாதவரே காமத்தை வெறுத்து இழிவுபடுத்தி வெளியே பேசியும், மனதுக்குள்ளே காமத்தைப் பெரிய ஆலமரமாய் வளர்த்தும் வாழ்வார்கள். இது இரட்டை வாழ்க்கை.
நாற்பத்தேழு வயதில் தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் படித்து தான் காமம் கவனமாகக் கையாள வேண்டிய விஷயம் என்று புரிந்துகொண்டேன். பதினாறு வயதில் தவறு செய்து கடுமையாகக் கண்டிக்கப்பட்டு முப்பது வருடங்கள் குப்பையாய் வாழ்ந்து விட்டேன். காசு கொடுத்து காமம் வாங்கிவிட்டால் காமம் இனிக்காது. கசக்கும். குமட்டும். நேசிக்காத பெண்களோடு வாழ்தல் அபத்தம். கேவலம். எனக்கும் எவர் மீதும் நேசிப்பு இல்லையே. அதனால் கனவில் நேசிப்பு உள்ளவர்களை உருவகப்படுத்தி அவர்களை மனசுக்குள்ளே கூடிக் குலவி வாழ்ந்தேன். கற்பனைகள் வளர வளர காமவேட்டை மிக சுகம் என்று நினைத்தேன். நிர்வாணமாய் பார்த்த பெண்களை மனசுக்குள் இடையறாது கூடினேன். மனம், உடம்பு இரண்டும் நோய்ப்பட்டன.
வேறு எதுவும் முழுமையாய் யோசிக்க முடியாமல் காமவிகார எண்ணங்கள் முட்டி மோதின. நான் பொருளாதார ரீதியாகவும் தோல்வியுற்றேன். என் விழிப்புணர்வு செத்துப் போயிற்று.
இன்னமும் உடல் நோயுற்றப் பிறகும் காமம் அகலவில்லை. மனசுக்குள் நூறு நூறு கற்பனைகள். எனக்கு நானே பேசிக்கொள்கிற அளவுக்கு பகல் கனவுகள். ஒரு நாள் நிச்சயம் எனக்குப் பைத்தியம் பிடிக்கும்’ என்று அழுதான்.
சிறுவயதில் கற்பனைகளில் மிதந்து இடையறாது உடம்பை உஷ்ணப்படுத்தியதில் பிரச்சனைகள் வந்துவிட்டன. எதிரே யுவதிகள் நின்றபோது உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் கற்பனைகள். கனவுகள் என்று குழப்பம் வந்துவிட்டது.
இது நேராதிருக்க என்ன வழி ?
காமம் என்பது என்ன என்பதை இளம் வயதிலேயே பேசி புரிய வைக்க வேண்டும். இந்த உறுப்புகள்-வம்சவிருத்தியின் பொருட்டு, இந்த உணர்வுகள்-நல்ல குழந்தைகள் பெறுவதன் பொருட்டு என்று கூற வேண்டும்.
காசு, பணம், அதிகாரம், அந்தஸ்து போதுமா? திருமணம் நடந்து, குழந்தைகள் பெறுதல் மிக முக்கியம். வாழ்வு அப்போதுதான் முழுவட்டம், வடிவம் பெறுகிறது. குழந்தை இல்லாதவர் படும் துயரம் என்ன தெரியுமா என்று உதாரணம் காட்டிப் பேசவேண்டும்.
காமம் அனுபவிக்க அமைதி தேவை.
அமைதி என்பது என்ன? பயமற்று இருத்தல். எப்போது காமம் குறித்த பயம் போகும். முறைப்படி உறவுகொண்டால், நிம்மதியாய் எவர் இடையூறுமின்றி அனுபவிக்கலாம். அனுபவிக்க இச்சமூகம் எல்லா வசதியும் செய்து தரும். மற்றவைகளைக் கண்டிக்கும். கள்ளத்தனத்தை இழிவுபடுத்தும்.
‘கணவனின் துணையோடுதான் காமனை வென்றாக வேண்டும்’. என்பது கருத்துள்ள பாடல். உயர்ந்த அனுபவ வாக்கியம். இதே விதமாய் மனைவியிடம்தான் ருசியான உடலுறவு சாத்தியம்.
ஏன்?
மனைவி ஒரு பொறுப்பு. அவளைப் பேணுதல் ஒரு கடமை. அவள் உனது குழந்தைகளின் தாய். உனக்கு ஸ்நேகிதி. நோய்ப்பட்டபோது தாதி. சுகத்துக்கு மட்டுமான பெண்ணில்லை. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொள்ளும் உறவு. தாய்-தகப்பனை விட்டு புருஷன் வீட்டிற்கு வந்த மனைவியைக் கொஞ்சி, சீராட்டி, ‘நானிருக்கிறேன். எந்த பயமின்றி எதுவும் கேள். மனம்விட்டுப் பேசு’ என்று ஆதரவு செய்ய, அவள் வாரி வழங்குவாள். தந்ததற்கு ஒரு பங்கும் இன்னும் தொடர்ந்து தரவேண்டும் என்ற நினைப்பில் இன்னும் கூடுதலாகவும் கிடைக்கும்.
இந்தக் கூடலின் நோக்கம் கூடல் மட்டுமல்ல. குழந்தைப்பேறும் உள்ளடங்கியது. ஒரு வருடம் ஆட்டம் ஆடலாம். மறுவருடம் குழந்தைப் பேறில்லையெனில் கவலை வந்துவிடும். ‘கடவுளே, கடவுளே’ என்று காமத்தில் ஈடுபடவேண்டியிருக்கும்.
இருபத்தியேழு வருடமாகக் குழந்தைப் பேறில்லாத தம்பதியர்கள் அவர்கள். கணவன் சினிமா பார்த்துவிட்டு கூடலுக்கு அழைத்தபோது, ‘வெறுமே எதுக்கு இது? என்ன பிரயோஜனம்?’என்று மனைவி அலுத்துக் கொண்டாராம். ‘அன்று காமம் அறுந்துவிட்டது. இறைவழிபாடு பக்கம் இருவரும் திரும்பிவிட்டோம்’ என்று நொந்தபடி பேசினார்கள்.
அவர்களிடம் செல்வம் உண்டு. அதிகாரம், அந்தஸ்து உண்டு. அனுபவிக்கத் தடையேதுமில்லை. ஆயினும், காமம் அறுந்தது. ஒரு கணம் அங்கே நம்மை நிறுத்திப் பார்க்க, காமத்தின் அர்த்தம், அபத்தம் புரியும்.
காமம் நன்கு அனுபவிக்க, வீடு வாகன சவுகரியங்கள் நிச்சயம் உதவும். இவைகள் பெற, உயர்ந்த படிப்பு, கடும் உழைப்பு அவசியம். படிக்க வேண்டிய காலகட்டத்தில் படித்து ஜெயித்து வேலையில் அல்லது வியாபாரத்தில் முழுமனதாய் ஈடுபட்டு இளமையிலேயே பலமான பொருளாதார அஸ்திவாரம் போட்டுவிட்டால் சுகம் என்கிற வீடு உயர உயர எழுப்பமுடியும்.
காமச்சேறே கதியென உழன்றால், குடிசை கூட கட்ட முடியாது. பாதுகாப்பு தரமுடியாது. ஆணை பெண் நேசிக்கமாட்டாள். நேசிக்காத பெண்ணிடமிருந்து காமம் வராது. வந்தாலும் ருசிக்காது.
போன தலைமுறையைவிட இந்தத் தலைமுறைக்குக் காமப்பிரச்சனைகள் அதிகம். மிக அதிகம். பெண்களிடம் மணி கேட்கவோ, ஒரு குவளை நீர் கேட்கவோகூட அப்போது பயம். கேட்பதை தவறாக நினைத்துக் கொள்பவர்கள் உண்டு. பெண்ணின் அண்மை இல்லாததால் தொந்தரவின்றி தன் காரியத்தில் ஆண் ஈடுபட முடிந்தது. இப்போது சினிமாவும், பத்திரிகைகளும், ஊடகமும், செல்போனும் பெண்களின் மேனியெழிலை பல கோணங்களில் நெருக்கமாய் காட்ட, இளைஞர்களின் மனம் குழம்புகிறது.
கள்ளத்தனமாய் கெட்ட விஷயங்களைப் பார்க்கும் வசதி அதிகரிக்க இருபாலரும் கள்ளத்தனமாகவே பேசிப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். எது மூளையில் பதியவேண்டுமோ, அதைப் பதிய ஒட்டாது இவ்விஷயங்கள் மறைத்துவிடுகின்றன. எனவே தோல்வி, கண்ணெதிரே பேயாட்டம் ஆடுகிறது. தோல்வியிலிருந்து தப்பி உற்சாகம் பெற, இவ்விஷயங்களைக் கற்பனை செய்யும் முட்டாள்த்தனம் மிகுந்துவிடுகிறது. பிறகு, மீட்சியில்லாத மனநோய்தான் மிஞ்சுகிறது.
உடல் உறுதி முக்கியம் என்பது இளம் வயதிலேயே சொல்லித் தரப்பட வேண்டும். விளையாட்டு வீரராய்த் திகழும் ஆசையை விதைக்க வேண்டும். அப்போது தேவையற்ற பேச்சுகள், தொடர்புகள் குறைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்ளே நம்பிக்கை வெற்றியினால் அதிகரிக்கும். ஆரோக்கியமாய், கட்டழகாய் இருக்கிறோம் என்பதே நல்ல நம்பிக்கை. விளையாட்டு, வெற்றி முக்கியமில்லை.
இந்த ஆரோக்கியம் படிப்பில், தொழிலில் முழுவதுமாய் ஈடுபட வைக்க முன்னேறுவது என்பது எளிது. அதுமட்டுமின்றி, இந்த ஆரோக்கியம் பாதுகாப்பு, வைராக்கியம் வளர்க்கும். இந்த உணவு வேண்டாம், இந்தவித கெட்ட படங்கள் வேண்டாம் என்று வரையறைகள் ஏற்படும். வைராக்கியம் இல்லையெனில் வாழ்வே இல்லை. வைராக்கியம்தான் கடும் உழைப்பு தரும்.
‘ராத்திரி ஆச்சுன்னா தண்ணி போட்டே ஆவணும்’ என்று இருபது வயதில் தோன்றுமாயின், நாற்பது வயது தாண்டுவது அரிது. தாண்டினாலும் நிமிர்ந்த நடை இருக்காது. வெறுமே நோயுற்ற பூனையாய் இடையறாத சலிப்பில் வாழ்வு நகரும். நொந்துகொள்ளல் அதிகமாகும்.
‘தோன்றின் புகழொடு தோன்றுக. அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று’ என்பதற்கு அர்த்தம் எல்லோரும் பிரதமராக, தலைவராக வரவேண்டும் என்பதல்ல. பிறர் பாராட்டும்படி நடந்துகொள்பவரே சிறந்தவர்.
“நல்லா வச்சிருக்கீங்களே உடம்பை. வெரிகுட்” “பெரிய படிப்பு படிச்சிருக்கீங்களே” “கல்யாணத்துக்கு முன்னாடியே சொந்த வீடு கட்டிட்டீங்களா. வாழ்க, வாழ்க...”, “ஆங்கிலப் பத்திரிகைகளில் நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். நல்ல சிந்தனை” இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் பாராட்டுகள், புகழோடு தோன்றியதை உறுதிப்படுத்துகின்றன. நாலு பேர் பாராட்டாது வாழ்வது வாழ்வே அல்ல.
‘சினிமா ஆசையில் புருஷனை விட்டு ஓடிவந்து எவனோ அயோக்கியனை நம்பி சீரழிந்து அவனும் ஏமாற்ற, கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாப்பா’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவதற்கு அடியில் கட்டறுந்த காமம் இருக்கிறது.
இனி மீட்சி எப்போது?
காமத்தை நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால், உண்மையான பிரியம் மட்டுமே உதவி செய்யும். பரஸ்பர அக்கறை பலப்படுத்தும். விலகி இருந்தால்தான் எதிர்ப்பட்டதை நன்கு பார்க்க முடியும். காமத்தை தலையிலேயே தூக்கி சுமந்து திரிந்தால் எதுவும் தெரியாது. சுமையால் சலிப்பு ஏற்படுவதே மிஞ்சும்.
இளைஞர்களும், யுவதிகளும் காமம் குறித்து கேள்வி கேட்க, முதியோர் தட்டாது பதில் சொல்லி நல்வழிப்படுத்தல் அவசியம். ஒதுக்கி மறைத்து வைத்தால் ஆர்வம் அதிகமாகும், பிரச்சனைகள் பெரிதாகும்.
காமம்தான் இவ்வுலகை ஆட்சி செய்கிறது. எது ஆளுகிறதோ அதை அறிவதே நல்லது. அறிவுதான் மரியாதை தரும்.
வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனில், காமம் பற்றிய தெளிவோடு இருங்கள்.
- நன்றி பாலகுமாரன்
No comments:
Post a Comment