தொல்காப்பியத்தின் தொன்மை
பண்டைய தமிழகம் மேலை நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை வரலாறுகள் நமக்கு அறிவிக்கின்றன. மேல்நாட்டார் தமிழகத்துடன் வாணிபம் செய்து வந்ததைத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள ரோமானிய கிரேக்க தங்க நாணயங்கள் உறுதி செய்கின்றன.
"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (கறி-வாசனைத் திரவியம்) என்னும் சங்கப் பாடலால் இதனை அறிய முடிகிறது. யவனர் என்று தமிழ் இலக்கியங் களில் குறிப்பிடப்படுபவர்கள் நம் நாட்டிற்கும் கிரேக்க ரோமானிய நாடுளுக்கும் இடையே வியாபாரப் பரிவர்த்தனை செய்து வந்தவர்கள். இதேபோல் சோனகர் என்போர் அரேபிய வியாபாரிகள், இவர்கள்தான் நம் தமிழ்நாட்டு வாசனைத் திரவியங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி விற்பனை செய்து வந்தவர்கள்.
மொழியை வளர்ப்பதற்காகவே சங்கம் வைத்தவர்களாக தமிழர்கள் இருந்துள்ளனர். மொழிக்காகச் சங்கம் வைத்து அதனை வளர்த்த சிறப்பு தமிழுக்கின்றி வேறெந்த மொழிக்கும் இல்லை. நட்சத்திரங்களைக் கொண்டு காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு புதிய முறையைப் பழைய ஆவணங் களைக் கொண்டு கண்டுபிடித்திருப்பது பாராட்டத்தக்கது. ஏனென்றால் பழைய கல்வெட்டுக்கள் அழிந்து கொண்டு வருகின்றன.
ஆய்வு செய்யும்போது தமிழ் ஆவணங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆய்வு செய்தால் கி.மு. 3-ஆம் நூற் றாண்டுகளுக்கு மேல் தமிழில் குறிப்புகள் இல்லை. தொல்காப்பியத்தை கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்றுதான் தமிழ்ப் பண்டிதர்கள் சொல்லி வருகிறார்கள். அதாவது அது 2800 ஆண்டுகள்தான் பழமையுடையது என்கிறார்கள்.
வானியல் அறிஞர் சினீவாசராகவன் அவர்களின் கணக்கை வைத்துப் பார்க்கும் போது, தொல்காப்பியம் கி.மு. 7000 என்பது தெளிவாகிறது. ஆனால் தமிழிலுள்ள இன்றைய ஆவணங்களை வைத்துப் பார்த்தால் கி.மு. 800 ஆண்டுகளுக்கு மேல் போக இடமில்லை. ஏனென்றால் ரிக் வேதத்தை 8000 கி.மு. என்று திலகர் நிறுவியிருக்கிறார். அதுதான் அதிகபட்ச பழமை.
9 ஆயிரம் ஆண்டுகள் எப்படி?
இப்போது தமிழ் வருடத்தின் ஆரம்பம் சித்திரை என இருக்கிறது. ஆனால், தொல்காப்பிய காலத்தில் வருட ஆரம்பமாக ஆவணி சொல்லப்படுகிறது.ஆயிரம் வருஷத்திற்கு ஒருமுறை வருட ஆரம்பமே மாறுகின்றது. ஆவணியில் ஆரம்பித்த வருடம் 1000 வருடங்களுக்குப் பிறகு புரட்டாசியில் ஆரம்பிக்கிறது. பின்னர் ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி சித்திரை என்று 9 மாதங்களும் வருஷ ஆரம்பங்களாக மாறுவதால் ஒன்பது ஆயிரம் வருடங்கள் என ஆகின்றன.
இந்த 9 ஆயிரம் வருடத்தில் இப்போதுள்ள கி.பி. 2 ஆயிரம் வருடம் போக, மீதி 7 ஆயிரம் வருடங்களை 7 ஆயிரம் (கி.மு.) என்று நிர்ணயித்தால், அதுதான் தொல்காப்பியம் தோன்றிய காலம் எனக் கணக்கிடலாம்.
தமிழக அரசியல் சார்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராமதுரை என்பவர் "வானியல் மூலம் வரலாறு காண் போம்" என்ற ஒரு சிறு நூலை எழுதி யுள்ளார். அந்நூலில் அவருடைய இந்த யுகக் கணக்கு ஆய்வுகள் சிந்திக்கத் தக்கனவாக உள்ளன.
துடிசைக்கிழார் அ. சிதம்பரனார் என்ற மற்றுமொரு அறிஞர் நமது பழமையைப் பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார். சொந்த ஊர் கோவைக்குப் பக்கத்தில் உள்ள துடியலூர். அதன் பண்டைப் பெயர் "துடிசை". முச்சங்கங்களுக்கு முன்பே கடல் கொண்ட தென்னாட்டில் இருந்த தமிழ்ச் சங்கங்களைப் பற்றி துடிசைக்கிழார் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அவர் கருத்துப்படி முதற்சங்கத்திலிருந்து மொத்தம் 11 சங்கங்கள் இருந்துள்ளன என்கிறார்.
இறையனார் களவியல் என்ற இலக்கண நூலுக்கு உரை கண்டவர் நக்கீரனார். அதில் மூன்று தமிழ்ச் சங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30000 முதல் கி.மு. 16500 வரை - 13500 ஆண்டு கள் இருந்ததாக துடிசை கிழார் தனது தமிழ்ச்சங்கங்களின் வரலாறு என்ற நூலில் கூறியுள்ளார்.
இவ்வளவு நெடிய வரலாற்றையும் சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழியை அறியாமல், குறுகிய நோக்கோடு ஆய்வுகள் செய்வதால்தான் தமிழின் பெருமை தமிழராலேயே அறியப்படாமல் போயிற்று.
மொகஞ்சதாரோ எழுத்துக்களை குஜராத்தில் இருந்த எஸ்.ஆர்.ராவ் சம்ஸ்கிருதமாக இருக்கலாம் என்று கூறியதால் அது சம்ஸ்கிருதமா தமிழா என்று பல்வேறு விவாதங்கள் எழுந்தன. அவை தமிழ் எழுத்துக்கள்தான் என்று தொல்லியல் துறைத் தலைவராக இருந்த டாக்டர் மதிவாணன் நிர்ணயம் செய்தார்.
அதன் காரணமாக அவை திராவிட நாகரிக எழுத்து என்றும் திராவிட மொழியாகத்தான் அது இருக்க வேண்டும் என்றும் உலக அறிஞர்கள் பலர் கூறிவந்ததை டாக்டர் மதிவாணனின் ஆய்வு மெய்ப்பிக்குமாறு அமைந்துள்ளது.
மொகஞ்சதோரோ எழுத்துக்களை வைத்துக்கொண்டு கணக்குப் பார்த்தோமானால் பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாகிஸ்தான்கூட அன்றைய விசாலத் தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது. குஜராத்தும் இருந்திருக்கின்றது.
டாக்டர் மதிவாணன் இமாலயம் மத்தியப் பிரதேசம் இப்படி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்தவர். எல்லா தமிழ் மாநிலங்களிலும் மொகஞ்சதாரோ எழுத்துக்கள் இருந்திருக்கின்றன என்கிறார்.
மத்தியப் பிரதேசத்துப் பெண்கள் மொகஞ்சதாரோ எழுத்துக்களைத் தங்கள் நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்கின்றனர். சில இடங்களில் வீடுகளுக்கு அலங்காரம் செய்வதுகூட இந்த எழுத்துக்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்த எழுத்துக்களைக் கண்டுபிடித்துள்ளனர். பல தாழிகளில் இந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
தொல்காப்பியரும் நோவாம் சாம்ஸ்கியும் ஒலியன்களை 33 என வரையறுத்துத் தமிழ் எழுத்துக்களை சுமார் 9 ஆயிரம் ஆண்டுளுக்கு முன்பு தொல்காப்பியர் அமைத்துள்ளார். மொழியியல் மேதை சாம்ஸ்கி அவர்களும்
33 ஒலியன்கள் கொண்ட மொழிதான் முழுமையான மொழி என்று இன்றைக்கு தனது ஆய்வின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழியியல் மேதை சாம்ஸ்கி கண்ட அறிவியல் உண்மையை தொல்காப்பியர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தார் என்பதை அறியும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இத்தகைய பண்டைய சிறப்பைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழி என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
உங்களுடைய தலையாய கடமை தமிழின் பெருமையை ஆதரித்துப் பரப்ப வேண்டும்.
No comments:
Post a Comment